பாகிஸ்தான் மீது கடும் கோபத்தில் சீனா.. கடைசியாக பாய்ந்த ஏவுகணை.. உலக அரசியலே மாறிடும் போலயே!
பெய்ஜிங்: இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த வாரம் மோதல் இருந்து வந்தது. இந்திய பகுதிகளில் அத்துமீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இந்தியா தக்கப் பதிலடி கொடுத்தது. இதனால் வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆனால், இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் மீது சீனா கடும் அப்சட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த வாரம் இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் கடுமையாக இருந்தது. அப்போது இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் கடந்த மே 10ம் தேதி போரை முடித்துக் கொள்ளக் கோரிக்கை விடுத்தது. அப்பாவி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் இந்தியாவும் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக்கொண்டது.

4 நாடுகள்
அன்றைய தினம் நாம் கவனித்துப் பார்த்தால் அமெரிக்கா, பாகிஸ்தான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு நாடுகள் அறிக்கை வெளியிட்டிருந்தன. பாகிஸ்தான் டிஜிஎம்ஓ இந்தியாவுக்கு போன் செய்து கேட்டுக் கொண்டதன் பெயரிலேயே மோதல் முடிவுக்கு வந்ததாக இந்தியா கூறியதே உண்மை. அதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரம் மற்ற 3 நாடுகளின் அறிக்கைகளையும் நாம் பார்க்க வேண்டும்.
அமெரிக்கா ஒரு பக்கம் தான் எடுத்த முயற்சியால் தான் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்ததாகத் தெரிவித்தது. பாகிஸ்தான் வழக்கம் போலக் கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல அறிக்கை வெளியிட்டிருந்தது. மரண அடி வாங்கிய போதிலும் பாகிஸ்தான் அரசு மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தைப் பாதுகாக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டது.
சீனாவின் கோபம்
அதேநேரம் சீனா இந்த விவகாரத்தில் கடைசியாகவே அறிக்கை வெளியிட்டிருந்தது. சீனா அறிக்கை வெளியிட்ட நேரம், அதன் பிறகு நடந்த விஷயங்களை வைத்துப் பார்த்தால்.. பாகிஸ்தான் மீது சீனா கடும் அதிருப்தியில் இருப்பது தெரிய வருகிறது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
பாகிஸ்தானை இந்தியா திருப்பி அடிக்க தொடங்கியதும் அவர்கள் நிலைகுலைந்து போனார்கள். ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகம் அருகே உள்ள ஏர் பேஸ்களில் கூட தாக்குதல் நடத்தப்பட்டது. இதை பாகிஸ்தான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. நிலைமை மோசமாவதை உணர்ந்த பாகிஸ்தான், உடனே உதவி கேட்டு அமெரிக்காவிடம் ஓடியுள்ளது. ஆனால், இதுவே சீனாவுக்குக் கடும் அப்செட்டை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
வல்லரசாக கருதும் சீனா
கடந்த சில ஆண்டுகளாகவே சீனா பாகிஸ்தான் இடையேயான உறவு மேம்பட்டு வருகிறது. இரு நாடுகளும் நெருங்கி வருகிறது. அப்படியிருக்கும் போது பிரச்சினை என வரும்போது தன்னிடம் வந்திருக்க வேண்டும் எனச் சீனா கருதுகிறது. மேலும், ஆசியப் பிராந்தியத்தில் தன்னை ஒரு வல்லரசாகச் சீனா கருதுகிறது. இதனால் இங்கு எதாவது பிரச்சினை வந்தால் அதைத் தன்னால் மட்டுமே தீர்க்க முடியும் எனச் சீனா நம்புகிறது. அப்படியிருக்கும் போது மோதலை முடிவுக்குக் கொண்டு வந்ததாக டொனால்ட் டிரம்ப்பின் அறிவித்தது சீனாவுக்குக் கோபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

கடைசி நாள் தாக்குதல்
அதன் பிறகே சீனாவாகவே முன்வந்து பாகிஸ்தானை அழைத்துள்ளது. பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேசியுள்ளனர். அதன் பிறகே சீனா கோபத்தில் இருப்பதைப் பாகிஸ்தான் உணர்ந்துள்ளது. சீனாவின் ஆதரவும் முதலீடும் தேவை என்பதால் இந்த போன் காலுக்கு பிறகே (டிரம்ப் முதலில் அறிவித்த) போர்நிறுத்த ஒப்பந்தத்தைப் பாகிஸ்தான் மீறியது. அதாவது போர் நிறுத்தம் அமலுக்கு வந்த மே 10ம் தேதி இரவு ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் குஜராத் மீது பாகிஸ்தான் மீண்டும் ட்ரோன்களை ஏவியது.
சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம்
அதைத் தொடர்ந்தே சீனா தன்னை அழைத்துப் பேசியதாகப் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் தான் மோதல் ஆரம்பித்த பிறகு முதல்முறையாகப் பாகிஸ்தானுக்குப் பக்கபலமாகச் சீனா இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஒரு பக்கம் பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை மீறி அத்துமீறி வந்த நிலையில், அப்போது சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றொரு அறிக்கையை வெளியிட்டது. அதாவது சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி, இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் பேசியதாக அதில் கூறப்பட்டது.
சீனா அறிவுறுத்தல்
அந்த அறிக்கையில் சீனாவின் வெளியுறவு அமைச்சரின் கூற்றுக்கே முக்கியத்துவம் தரப்பட்டு இருந்தது. தோவல் பேசியது குறித்து ஓரிரு வரிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. இந்த அறிக்கை வெளியான பிறகே பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தியது. சீனாவைச் சமாதானப்படுத்தவே பாகிஸ்தான் அந்த கடைசிக்கட்டத் தாக்குதலை நடத்தியதாகக் கூறப்படுகிறது. அதாவது தன் மூலமாகவே இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்ததாகக் காட்டிக்கொள்ளவே சீனா இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்தியா பாகிஸ்தான் மோதல்
கடந்த ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அங்கு பைசரன் பள்ளத்தாக்கில் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர். காஷ்மீரில் சமீப காலங்களில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. கடந்த வாரம், அதாவது மே 7ம் தேதி இந்திய ராணுவம் அதிரடியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத மையங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் சுமார் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இது இந்திய ராணுவத்தின் மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்பட்டது.
பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்
ஆனால், இந்த வெற்றியைப் பொறுக்காத பாகிஸ்தான், அத்துமீறி இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. காஷ்மீர் முதல் பஞ்சாப் வரை பல எல்லையோரப் பகுதிகளில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும், இந்தியாவின் வலுவான வான் பாதுகாப்பு அமைப்பு பாகிஸ்தானின் அனைத்து ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை காலி செய்தன. ஒரு ட்ரோன் கூட இந்தியாவில் எங்கும் தாக்கவில்லை.
மறுபுறம் இந்தியா பதிலடியையும் ஆரம்பித்தது. பாகிஸ்தானில் பல்வேறு முக்கிய ராணுவத் தளங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் இந்தத் தாக்குதலைச் சமாளிக்க முடியாமலேயே பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. அதேபோல இந்த மோதல் குறித்து பாகிஸ்தான் பல்வேறு பொய்யான தகவல்களைப் பரப்பிய நிலையில், அதையும் இந்தியா தொடர்ந்து முறியடித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications