சீனாவுக்கு மூக்கு வேர்க்குது..பாஸ்போர்டால் வந்த பஞ்சாயத்து! அருணாச்சல் அவங்களோடதாம்! திமிர்ப் பேச்சு
டெல்லி: இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்சனை கடும் மோதல் நிலவிய நிலையில் தற்போது பேச்ச்வார்த்தைகள் மூலம் அது மெல்ல மெல்ல தீர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசம் தொடர்பான ஒரு புதிய சர்ச்சை மீண்டும் இருநாடுகளுக்கு மோதலை உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சீன விமான நிலையத்தில், அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய பெண் ஒருவரின் பாஸ்போர்ட்டை சீன அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், சீனா அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. அதே நேரத்தில் அருணாபிரதேசம் தங்களுடையது என திமிர்த்தனமாக பேசியுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த பெம் வாங் தோங்டாக் என்ற இந்திய பெண், நவம்பர் 21ஆம் தேதி லண்டனிலிருந்து ஜப்பான் செல்ல சீனாவின் ஷாங்காய் புடாங் விமான நிலையம் வந்திருந்தார். வழக்கமான குடியுரிமை சோதனைக்காக அவர் பாஸ்போர்ட்டை கொடுத்துள்ளார்.
அப்போது, சீன குடியுரிமை அதிகாரிகள் அதில் "Arunachal Pradesh - India" என்று குறிப்பிடப்பட்டிருப்பதைப் பற்றி கேள்வி எழுப்பியதாக அவர் தெரிவித்தார். அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் பகுதி எனவும், அவரது பாஸ்போர்ட்டை செல்லாது என கூறியதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், அவரை கேலிக்குள்ளாக்கியதாகவும், அவரது பயணம் தாமதமாகி தன்னுக்கு சிரமம் ஏற்பட்டதாகவும் அந்தப் பெண் கூறினார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியதும், இந்தியாவில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தெரியவந்ததும், அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். "சீனா சர்வதேச விதிகளை மீறுகிறது. இந்திய குடிமக்களின் மரியாதையை அவமதிப்பது போன்றது" என்று அவர் தெரிவித்தார்.
மேலும் இந்திய அரசும் தனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது. "அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி. அந்த மாநில மக்களுக்கு இந்திய பாஸ்போர்ட்டில் பயணிக்க முழு உரிமை உண்டு." என்ற நிலைப்பாட்டை இந்தியா மீண்டும் தெளிவுபடுத்தியது. மேலும், சீன அதிகாரிகள் செய்த நடவடிக்கை சர்வதேச விமான விதிகளை மீறுவதாகவும் இந்தியா சுட்டிக்காட்டியது.
இந்நிலையில், இந்திய பெண் சாட்டிய குற்றச்சாட்டை சீனா முழுமையாக மறுத்துள்ளது. சீன வெளியுறவு அமைச்சக பேச்சாளர் மாவோ நிங் கூறியதாவது," "அந்தப் பெண்ணுக்கு எந்தவித கட்டாய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சீன விதிமுறைகளுக்கு இணங்க எல்லை அதிகாரிகள் செயல்பட்டனர். அவருக்கு விமான நிறுவனம் தங்கும் இடம், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்கியது. இதற்கும் மேலாக அவர் கூறிய ஒரு வர்த்தை பதட்டத்தை அதிகமாக்கியுள்ளது. ஜங்னான் எனப்படும் அருணாச்சல், சீனாவின் பிரதேசம். இந்தியா சட்டவிரோதமாக உருவாக்கிய அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை சீனா ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை." என கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக எல்லை பிரச்சனையை சமாளிக்க இருநாடுகளும் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தன. இந்த சூழ்நிலையில் ஏற்பட்ட பாஸ்போர்ட் சர்ச்சை, மீண்டும் இந்தியா-சீனா உறவில் பதட்டத்தை அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications