ஒரே கட்டிடத்தில் 20,000 பேர்! சீனாவின் பிரம்மாண்ட கட்டிடம்.. வாடகை எவ்வளவு தெரியுமா! ஷாக் ஆவீங்க
பெய்ஜிங்: உலகின் மிகப்பெரிய குடியிருப்பான ரீஜண்ட் இன்டர்நேஷனல் கட்டிடத்தின் வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்த ரீஜண்ட் இன்டர்நேஷனல் சீனாவின் கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டியில் அமைந்துள்ளது. சுமார் 20 ஆயிரம் பேர் வரை இந்தக் கட்டிடத்தில் வசிப்பதாகச் சொல்லப்படுகிறது.
உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு சீனா.. மக்கள்தொகை அதிகம் இருப்பதால் பல சிக்கல்களைச் சீனா சந்தித்து வருகிறது.

இதனால் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள பகுதிகளில் மக்களைத் தங்க வைக்கச் சீனா புதிய புதிய திட்டங்களைப் போடுகிறது. அப்படி தான் ஒரே கட்டிடத்தில் பல ஆயிரம் பேர் வசிக்கும் வகையில் சீனா ஒரு கட்டிடத்தைக் கட்டியுள்ளது.
மிகப் பெரிய கட்டிடம்: ரீஜண்ட் இன்டர்நேஷனல் என்று அழைக்கப்படும் இந்த கட்டிடம் சீனாவின் கியான்ஜியாங் செஞ்சுரி சிட்டியில் அமைந்துள்ளது. 675 அடி உயர இந்த கட்டிடம் முதலில் சொகுசு ஹோட்டலாகவே கட்டப்பட்டது. இருப்பினும், பின்னர் சில காரணங்களால் அது அடுக்குமாடி வளாகமாக மாற்றப்பட்டது. S வடிவில் அமைந்துள்ள இந்த கட்டிடம் 1.47 மில்லியன் சதுர மீட்டர் பரந்து விரிந்துள்ளது. 39 மாடிகளைக் கொண்ட இந்த ஒரே ஒரு கட்டிடத்தில் மட்டும் சுமார் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.
கொட்டி கிடக்கும் வசதிகள்: இங்கு வசிக்கும் மக்கள் எதற்கும் இந்த கட்டிடத்தை விட்டு வெளியே வரத் தேவையில்லை. தினசரி மளிகை பொருட்கள் தொடங்கி, ஷாப்பிங் சென்டர்கள், உணவகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொழுதுபோக்கு மையங்கள் என A டூ Z வரை எல்லாமே இந்த கட்டிடத்திலேயே உள்ளது.
இது மட்டுமின்றி அதிநவீன ஜிம், ஃபுட் கோர்ட், நீச்சல் குளங்கள், சலூன் என்று எல்லா வசதிகளும் இதில் உள்ளது. சீனாவில் உள்ள இந்த உலகின் மிகப் பெரிய குடியிருப்புக் கட்டிடத்தின் வீடியோவே இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
20 ஆயிரம் பேர்: இப்போது 20 ஆயிரம் பேர் வசித்தாலும் இன்னும் ரீஜண்ட் இன்டர்நேஷனல் முழுமை அடையவில்லையாம். இந்த கட்டிடத்தில் அதிகபட்சம் 30 ஆயிரம் பேர் வசிக்க முடியும். அதாவது கூடுதலாக 10 ஆயிரம் பேர் வந்தாலும் இந்த கட்டிடத்தில் தாராளமாக வசிக்கலாம். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், நெட்டிசன்கள் பல வித கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.
நெட்டிசன் ஒருவர், "இதை நம்பவே முடியவில்லை.. நவீன கட்டிடக்கலை இப்போது பல ஆயிரம் பேரை ஒரே இடத்தில் கொண்டு வந்துள்ளது. இதைப் பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது. இது ஒரு தனித்துவமான சமூக உணர்வைத் தருகிறது" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர் ஒரே குடியிருப்பு கட்டிடத்தில் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள் என்பதை நம்பவே முடியவில்லை எனப் பதிவிட்டுள்ளார்.
சிக்கல் இருக்கு: அதேநேரம் மற்றொரு நபர் இதில் உள்ள சிக்கல் குறித்தும் எச்சரித்துள்ளார். அதாவது அவர், "நிச்சயம் இதில் சில சிக்கல்களும் உள்ளன. தீ விபத்து, நிலநடுக்கம் ஏற்படும் போது மீட்புப் பணியில் ஈடுபடுவோருக்குச் சவாலானதாக இருக்கும். மேலும், அங்கு சோசிட்டி தேர்தல் நடத்தப்பட்டால் நிச்சயம் சுவாரசியமாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
வாடகை எவ்வளவு: கடந்த 2013ம் ஆண்டில் இந்த கட்டிடம் திறக்கப்பட்டது. இதில் கல்லூரி படிப்பை முடித்தவர்களும் கல்லூரி மாணவர்களும் தான் முதலில் சேர ஆர்வம் காட்டியுள்ளனர். அதன் பிறகு பல்வேறு தரப்பினரும் இதில் ஆர்வமாக குடியேறிவிட்டனராம். இந்த கட்டிடத்தின் வாடகை என்பது வீட்டைப் பொறுத்து மாறுபடுமாம்.. ஜன்னல்கள் இல்லாத வீடுகளின் வாடகை மாதம் ரூ. 17,900 என்ற ரேஞ்சில் இருக்குமாம். அதேநேரம் பால்கணி எல்லாம் கொண்ட பெரிய வீடுகளின் வாடகை ரூ.47,800 வரை இருக்குமாம்.. நீங்க சொல்லுங்க.. நீங்க இந்த வீட்டில் குடியேறுவீர்களா!












Click it and Unblock the Notifications