குட் நியூஸ்.. திரும்பி தமிழ்நாட்டுக்கு வரும் ஃபோர்டு? நேரிலேயே சென்று ஆலோசித்த முதல்வர் ஸ்டாலின்!
அமெரிக்கா: முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவன அதிகாரிகளுடன் அமெரிக்காவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். தமிழ்நாட்டில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் முதலீடு செய்யும் வாய்ப்புகள் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளார். தமிழ்நாடு உடனான 30 ஆண்டுகால உறவை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி இரவு அரசு முறை பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மேலும், கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
மேலும், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

சிகாகோவில், JABIL ஜாபில் நிறுவனத்துக்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.2000 கோடி முதலீட்டில் 5000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திருச்சியில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே ரூ.666 கோடி முதலீட்டில் 365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், காஞ்சிபுரத்தில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதுவரை சுமார் 5,000 கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் (Ford Motor) நிறுவனம், சென்னை மறைமலை நகரில் நடந்து வந்த தங்களது கார் உற்பத்தியை கடந்த 2022ஆம் ஆண்டுடன் நிறுத்தி விட்ட நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு கார் நிறுவனத்தின் உற்பத்தியை தொடங்குவது பற்றி ஃபோர்டு மோட்டார்ஸ் நிறுவனத்தின் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார்.
இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழகத்தில் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவது பற்றி அந்நிறுவன குழுவினருடன் ஆலோசனை நடந்தது. 30 ஆண்டுகளாக தமிழகத்தில் நட்புறவுடன் இணைந்து செயல்பட்டு வந்த அந்நிறுவனத்தின் கார் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதற்கான சாத்தியங்கள் பற்றியும் அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடந்தது" எனத் தெரிவித்துள்ளார்.
ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் உற்பத்தி ஆலைகளை திறந்து செயல்பட்டு வந்தன. இதன்மூலம் எராளமானோர் பயன்பெற்று வந்தனர். இந்தியாவில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட கார்களை சுமார் 32 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது ஃபோர்டு நிறுவனம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இரண்டு ஆலைகளும் மூடப்பட்டன. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு தொழிற்சாலையை திறக்கும் வகையில் அந்நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications