இரண்டு சிரிக்கும் பசங்க.. 3வது முறையாக காணாமல் போன ஓவியம்.. போலீசார் தீவிர தேடுதல் வேட்டை
நெதர்லாந்து நாட்டில் பிரபல டச்சு ஓவியர் வரைந்த ஓவியம் ஒன்று மூன்றாவது முறையாக திருடு போயுள்ளது.
ம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து நாட்டில் டச்சு ஓவியர் வரைந்த மிகவும் பிரபலமான 'இரண்டு சிரிக்கும் பசங்க' ஓவியம் ஒன்று மூன்றாவது முறையாக திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
17ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பிரபல ஓவியர் பிரான்ஸ் ஹால்ஸ். அவர் உருவப்படங்கள் வரைவதில் வல்லவர். டச்சு கலைக்கு தனது ஓவியத்தால் உயிரோட்டம் கொடுத்தவர் இவர். ஹால்ஸ் வரைந்த பல ஓவியங்கள் நெதர்லாந்து நாட்டில் உள்ள அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ஹால்ஸ் வரைந்த ஓவியங்களில் மிகவும் பிரபலமானது 'இரண்டு சிரிக்கும் பசங்க' ஓவியம். இந்த ஓவியத்தில் கையில் மதுக்கோப்பையை வைத்தப்படி சிறுவன் ஒருவன் சிரித்துக்கொண்டிருப்பான். அவனுக்கு பின்புறம் அவனைவிட சற்று இளையவனான மற்றொரு சிறுவனும் சிரித்துக் கொண்டிருப்பான்.
இந்த 'இரண்டு சிரிக்கும் பசங்க' ஓவியம் நெதர்லாந்தின் லீர்டாம் நகரில் உள்ள ஹோஜெ வான் மெவ்ரோ வான் ஏர்டென் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த அருங்காட்சியகத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தின் போது 'இரண்டு சிரிக்கும் பசங்க' ஓவியமும் திருடு போய்விட்டதாக டச்சு போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த ஓவியம் திருடு போவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 1988 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த கொள்ளை சம்பவங்களின் போது 'இரண்டு சிரிக்கும் பசங்க' ஓவியம் திருடப்பட்டது. ஆனால் அடுத்த ஆறு மாதத்திற்குள்ளாக அந்த ஓவியத்தை போலீசார் மீட்டனர்.
'இரண்டு சிரிக்கும் பசங்க' ஓவியம் தற்போது 3வது முறையாக திருடப்பட்டுள்ளதால் நெதர்லாந்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க டச்சு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications