ஆப்பிள் ஐபோன் தந்த அலர்ட்! அடுத்த நொடி நடந்த பயங்கரம்! இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கதறும் தந்தை
அவிவ்: ஹமாஸ் படையால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட தனது மகளை அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர் ஆப்பிள் வாட்ச் உதவியுடன் கண்டுபிடித்துள்ளார்.
கடந்த வாரம் இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் படை யாருமே எதிர்பாராத விதமாகத் தாக்குதலை நடத்தினர். கடந்த பல ஆண்டுகளில் அப்பகுதியில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்திய அவர்கள், பாராசூட் மூலமாகவும் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்துள்ளனர். உள்ளே புகுந்து தாறுமாறாக இஸ்ரேல் மக்களை நோக்கியும் ஹமாஸ் படை சுட்டுள்ளது. பல இடங்களில் ஹமாஸ் படை இந்த கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது.
இசை நிகழ்ச்சி: ஹமாஸ் படை அதேபோல இஸ்ரேலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் புகுந்தும் தாறுமாறாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பகீர் கிளப்பியது. குறிப்பாக ஹமாஸ் படைக்கு அஞ்சி சிலர் அங்கிருந்த டாய்லெட்களில் ஒளிந்திருந்தனர். இருப்பினும், அங்கேயும் சென்ற ஹமாஸ் படை டாய்லெட்களையும் சரமாரியாகச் சுட்டுத் தள்ளியது. அந்த வீடியோவை பார்க்கவே அச்சமாக இருந்தது.
இதற்கிடையே நோவா இசை விழாவில் இஸ்ரேல்- அமெரிக்கப் பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில், அந்த பெண்ணை அவரது தந்தை எப்படிக் கண்டுபிடித்தார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது பெண்ணின் தந்தை, ஆப்பிள் வாட்ச் மற்றும் அவரது போனின் கண்காணிப்பு அம்சத்தைப் பயன்படுத்தியே தனது மகளின் சடலம் எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்கத் தொழிலதிபர்: அமெரிக்க இஸ்ரேல் தொழிலதிபர் இயல் வால்ட்மேன்.. இவர் கணினி சார்ந்த பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரது 24 வயது மகள் தெற்கு இஸ்ரேலில் நடந்த இந்த இசைத் திருவிழாவில் கலந்து கொள்ளச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் தான் ஹமாஸ் படை முதலில் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது. தனது மகளிடம் இருந்து எந்தவொரு தகவலும் வராத நிலையில் இயல் அச்சமடைந்துள்ளார்.
இருப்பினும், முதலில் தனது 24 வயது மகளை ஹமாஸ் படை பிணையக் கைதியாகப் பிடித்துச் சென்றிருக்கும் என்றே இயல் நினைத்துள்ளார். இருப்பினும், தாக்குதல் நடந்த 4 நாட்களுக்கு பிறகே தனது மகளையும் அவரது காதலனையும் ஹமாஸ் படையினர் கொடூரமாகக் கொன்றுவிட்டதை இயல் கண்டுபிடித்துள்ளார்.
வந்த அலர்ட்: இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ஹமாஸ் தாக்குதல் குறித்துத் தெரிந்தவுடன் நான் இஸ்ரேலுக்கு விரைந்தேன். கடந்த வாரம் நான் இஸ்ரேலுக்குச் சென்றேன். எனது மகளைக் கடத்தி இருப்பார்கள் என்றே நினைத்தேன். அவளது ஆப்பிள் வாட்சில் இருந்து எனக்கு அலர்ட் வந்த நிலையில், அதை வைத்து இசை நிகழ்ச்சி நடந்த இடத்திற்குச் சென்றேன். அங்கி எனது மகளின் கார் நின்றிருந்தது. அவளது சில உடைமைகளைக் கண்டுபிடித்தோம். அவளது ஐபோனில் இருந்து எமர்ஜென்சி காலும் வந்திருந்தது.
அவரது காரை சுற்றி வளைத்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்கியுள்ளனர். இரண்டு பக்கமும் சுற்றி வளைத்த ஹமாஸ் வீரர்கள் எனது மகளைக் கொடூரமாகக் கொன்றுள்ளனர். அங்கிருந்த துப்பாக்கி குண்டுகளைப் பார்க்கும் போது குறைந்தது 3 பேர் எனது மகளின் காரை நோக்கிச் சுட்டுள்ளது தெரிய வருகிறது. ஹமாஸ் தாக்குதலை ஆரம்பித்தவுடன் எனது மகளும் வேறு 2, 3 பேரும் அந்த காரில் ஏறித் தப்ப முயன்றுள்ளனர். அப்போது தான் ஹமாஸ் பயங்கரவாதிகளைக் காரை வழிமறித்துச் சுற்றி வளைத்துத் தாக்கியுள்ளனர்.
கதறும் தந்தை: நான் கடைசியாக அவரிடம் பேசிய போது தனது காதலனை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகக் கூறினார். அதைக் கேட்ட போது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், இப்போது இருவரையும் ஒன்றாகப் புதைத்துவிட்டு வருகிறேன். எனது மகளுக்கு நேர்ந்த இந்த கொடூரத்தை என்னால் ஏற்கவே முடியவில்லை. எனது மகள் என்ன தவறு செய்தாள். அவரை ஹமாஸ் படை கொன்றதை ஏற்கவே முடியாது" என்றார்.












Click it and Unblock the Notifications