நானும் ரவுடி தான்..வாண்டடாக வண்டியில் ஏறும் பாக். எல்லையில் துப்பாக்கி சூடு..திருப்பி அடித்த இந்தியா
காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 25க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததால் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இரண்டாவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதற்கு இந்திய ராணுவத்தின் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டதாகவும், உயிரிழப்புகள் எதுவும் இல்லை என இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
கடந்த 22 ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அதில் உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் உட்பட 26 பேர் பலியாகினர். நாடு முழுவதும் இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.
மேலும் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. குற்றவாளிகள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் விடமாட்டோம் அவர்களுக்கு தக்க தண்டனை பெற்றுத் தருவோம் என பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்துள்ளார்.

இது ஒரு புறம் இருக்க இந்த தாக்குதல் காரணமாக பாகிஸ்தான் இந்தியா இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் இரு நாடுகளுக்கு இடையேயான வரலாற்று சிறப்புமிக்க பல முக்கிய ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு இரு நாடுகளும் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்திய விமானப்படை, கப்பற்படை, தரைப்படை என முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது.
தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்றதாகக் கூறப்படும் நிலையில், அதற்கு பதிலடியாக சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, அட்டாரி வாங்க எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு என இந்தியா அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறது. இந்தியாவின் நடவடிக்கைகள் பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அங்கு தண்ணீருக்கும் உணவிற்கும் கூட பஞ்சம் வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கோபத்தை வெளிப்படுத்த வழி தெரியாமல் எல்லையில் அடிக்கடி அத்துமீறி வருகிறது பாகிஸ்தான். நேற்று காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. கை துப்பாக்கி, இயந்திர துப்பாக்கி உள்ளிட்ட சாதாரண ஆயுதங்களைக் கொண்டு நேற்று காலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. அதற்கு இந்திய ராணுவத்தின் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று இரவும், இன்று அதிகாலையில் மீண்டும் இரண்டாவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறியாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக எல்லையில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இந்த நிலையில் பாஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அடிக்கடி அத்துமீறி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்திய ராணுவமும் பதிலடி கொடுக்கும் நிலையில் பதற்றம் நிலவுகிறது. தொடர்ந்து எல்லையோர கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு புலம்பெயர தொடங்கி இருக்கின்றனர். எல்லையில் பாகிஸ்தான் போர் விமானங்களை உலாவ விடும் நிலையில் இந்தியாவும் எதற்கும் தயாராகவே இருக்கிறது.












Click it and Unblock the Notifications