பெருந்துயரம்.. துருக்கி நிலநடுக்கத்தில் இந்தியர் பலி.. மாயமானவரின் சடலத்தை அடையாளம் காட்டிய ‛டாட்டூ’
இஸ்தான்புல்: துருக்கி நிலநடுக்கத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இந்தியாவை சேர்ந்த இன்ஜினியர் விஜய்குமார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முகம், உடல் எல்லாம் சிதைந்து போன நிலையில், அவரது கையில் போடப்பட்டிருந்த டாட்டூவை வைத்தே அவரை மீட்புப் படையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த விஜய்குமார், அலுவலக நிமித்தமான நிகழ்வுக்காக துருக்கிக்கு சென்றபோது அவருக்கு இந்த துயரம் நேர்ந்துள்ளது.

இன்ஜினியர் விஜய்குமார்
உத்தராகண்ட் மாநிலம் கோட்வார் பகுதியைச் சேர்ந்தவர் விஜய்குமார் கெளட் (34). பெங்களூரில் உள்ள 'ஆக்சிபிளான்ட்ஸ் இந்தியா பிரைவெட் லிமிடெட்' நிறுவனத்தில் பொறியாளராக இவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், அலுவலக நிமித்தமான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கடந்த வாரம் துருக்கி சென்றிருக்கிறார் விஜய்குமார். அவர் சென்ற அடுத்த நாள்தான் துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசு கோரிக்கை
இந்த செய்தியை கேள்விப்பட்ட அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள், விஜய்குமாரை தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது. இதனால் பயந்துபோன அவர்கள், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விஜய்குமாரின் புகைப்படம் உள்ளிட்ட அடையாளங்களை துருக்கி அரசாங்கத்துக்கு அனுப்பி வைத்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அவரை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்தது.

அடையாளம் காட்டிய டாட்டூ
இந்நிலையில், துருக்கியின் மலாட்யா பகுதியில் உள்ள 4 நட்சத்திர ஓட்டலின் இடிபாடுக்குள் இருந்தவரை மீட்கும் பணி இன்று நடைபெற்றது. இதில் சிலர் உயிருடனும், பலர் சடலங்காகவும் மீட்கப்பட்டனர். அப்போது விஜய்குமாரின் சடலமும் மீட்கப்பட்டது. உடலும், முகமும் முழுவதுமாக சிதைந்துபோன நிலையில், அவரது இடது கையில் போடப்பட்ட டாட்டூவை வைத்தே விஜய்குமாரை மீட்புப் படையினர் அடையாளம் கண்டனர். பின்னர் இதுகுறித்து துருக்கி அரசுக்கு தெரியப்படுத்தினர். இதன்பேரில், மத்திய அரசுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைவில் உடல் வருகை
இதுகுறித்து துருக்கியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இந்தியாவை சேர்ந்த விஜய்குமாரின் சடலம் மீட்கப்பட்டது என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது உடலை உத்தராகண்டுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் விஜய்குமாரின் உடல், அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications