மோடி விசிட்.. உடனே நடந்த மாற்றம்! உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்தில் உள்ள பஞ்சாப் இளைஞர்கள் நெகிழ்ச்சி
மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் போர் தொடரும் நிலையில், ரஷ்யாவுக்காக இந்திய இளைஞர்கள் பலரும் போர்க் களத்தில் உள்ளனர். இதற்கிடையே அவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி நேரடியாக ரஷ்ய அதிபர் புதினிடம் கோரிக்கை விடுத்திருந்தார். பிரதமர் மோடியின் இந்த கோரிக்கைக்குப் பின்னர் களத்தில் நடக்கும் மாற்றம் குறித்து பஞ்சாபைச் சேர்ந்த இளைஞர் சில முக்கிய கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யா போர் பல மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. இதில் இந்திய இளைஞர்கள் பலரும் ரஷ்ய ராணுவத்திற்காகப் போர்க் களத்தில் உள்ளனர். அவர்களைத் தாயகம் அழைத்து வர வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்தது.

ரஷ்யாவில் மோடி: சமீபத்தில் ரஷ்யா சென்ற பிரதமர் மோடியிடம் இது தொடர்பாக அதிபர் புதினிடம் நேரடியாகவே கோரிக்கை விடுத்திருந்தார். அதன் பிறகு களத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளதாகப் பஞ்சாபைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் ரஷ்யா பயணத்திற்குப் பிறகு தங்களுக்கு விடிவு காலம் பிறந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலா விசாவில் ரஷ்யாவிற்குச் சென்றதாகக் கூறும் அந்த இளைஞர், தன்னை ஏமாற்றி ராணுவத்தில் சேர்த்துவிட்டதாகவும் இப்போது போர் களத்தில் கட்டாயப்படுத்திப் போரிட நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாகப் பிரபல ஆங்கில ஊடகத்திடம் பேசிய அந்த இளைஞர், "நான் இங்கிலாந்து செல்ல விசா பெற முயன்றேன் ஆனால் நான் எனக்கு விசா கிடைக்கவில்லை. நேரடியாகப் பிரிட்டனுக்கு விசா கிடைக்காது. வேறு நாடுகளுக்குச் சென்று திரும்பினால் விசா கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறினர்.
என்ன நடந்தது: இதனால் நான் ஒரு சுற்றுலாப் பயணியாக ரஷ்யாவுக்குச் சென்றேன். அங்கே, நான் வேறு சில பஞ்சாபி இளைஞர்களைச் சந்தித்தேன்.. நாங்கள் நண்பர்களானோம். நாங்கள் ஒன்றாகப் புத்தாண்டைக் கொண்டாடினோம். பிறகு, ஒரு பஞ்சாபி டாக்சி டிரைவரை சந்தித்தோம்.. அவர் தான் எங்களை பெலாரஸ் செல்லச் சொன்னார். பெலாரஸ் செல்ல தனியாக விசா தேவையில்லை என்று கூறி எங்களை அழைத்துச் சென்றார். அவர் எங்கள் ஏழு பேரிடம் இருந்து தலா 100 டாலரை பெற்றுக் கொண்டார்.
ஆனால் செல்லும் வழியிலேயே அதிகப் பணம் கேட்கத் தொடங்கினார். அவரிடம் சண்டை போடத் தொடங்கியதும் எங்களை நடுரோட்டில் இறக்கிவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அப்போது, எங்களைப் பார்த்த போலீசார் சிலர் விசா தேவை என்று கூறினர். போலீசார் எங்களைக் கைது செய்து மூன்று நாட்கள் காவலில் வைத்திருந்தனர். அதன் பிறகு திடீரென ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.
விருப்பமே இல்லை: எங்களுக்கு ரஷ்ய ராணுவத்தில் சேர விருப்பமே இல்லை. ஆனாலும் எங்களைக் கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்த்துவிட்டனர். எங்களுக்கு ஏழு நாட்கள் பயிற்சி கொடுத்தனர். எங்களுக்கு ராணுவத்தில் சேர விருப்பமில்லை எனக் கூறிய போதிலும், அவர்களை அதைக் கேட்கவில்லை.. உக்ரைனில் எங்களைப் போரிடக் களத்திற்கு அனுப்பிவிட்டனர்.
இங்குக் களத்தில் நிலைமை மிக ஆபத்தாக இருக்கிறது. பலர் காயம் அடைந்துள்ளனர். போரில் யாராவது உயிரிழந்தாலும், அவர்களின் உடல்களை மீட்கக் கூட யாரும் முனைப்புக் காட்டுவதில்லை. இந்த உடல்களை விலங்குகள் தான் உண்கின்றன. எங்களை இங்கிருந்து யாராவது மீட்டுச் செல்ல வேண்டும் என்றே விரும்புகிறோம். ஏனென்றால் இங்குத் தொடர்ந்து இருந்தால் நிச்சயம் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை. சுற்றுலாப் பயணிகளாக வந்த நாங்கள் உயிரிழக்கத் தயாராக இல்லை.
நடக்கும் மாற்றம்: ஆனால், பிரதமர் மோடியின் ரஷ்யப் பயணத்திற்குப் பிறகு களத்தில் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளது. ரஷ்ய ராணுவத்தில் இருக்கும் இந்திய இளைஞர்களை விடுவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் பேசியுள்ளார்.. பிரதமர் மோடியின் ரஷ்யப் பயணத்திற்குப் பிறகு, ரஷ்ய ராணுவம் எங்களை விடுவிக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தனர். விரைவில் இதற்கான நடைமுறை தொடங்கும் என்று நம்புகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications