சர்வதேச அணுசக்தி அமைப்பின் கண்காணிப்பிலிருந்து வெளியேறியது ஈரான்! அமெரிக்காவின் திட்டம் தோல்வி
தெஹ்ரான்: ஐநாவின் சர்வதேச அணுசக்தி அமைப்பின் கண்காணிப்பிலிருந்து வெளியேறுவதாக ஈரான் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த தீர்மானத்தில் அந்நாட்டு அதிபர் கையெழுத்திட்டிருக்கிறார். இதன் மூலம் ஈரான், 'அணுசக்தி அமைப்பின்' கண்காணிப்பிலிருந்து வெளியேறியுள்ளது.
ஈரான் அதிபர் மசூத் பெஷ்கியன் இது தொடர்பான சட்டத்தில் கையெழுத்திட்டிருப்பதை அந்நாட்டு அரசு தொலைக்காட்சி உறுதி செய்திருக்கிறது. கடந்த ஜூன் 13ம் தேதியன்று இஸ்ரேல், ஈரானின் அணு ஆய்வு மையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாகவே சர்வதேச அணுசக்தி அமைப்பின்' கண்காணிப்பிலிருந்து வெளியேறுவதாக ஈரான் நாடாளுமன்றம் கூறியுள்ளது.

முதலில் இந்த சர்வதேச அணுசக்தி அமைப்பு என்றால் என்ன என பார்ப்போம். உலகம் முழுவதும் அணு சக்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை ஆயுதம் தயாரிக்க பயன்படுகிறதா? அல்லது வளர்ச்சிக்காக பயன்படுகிறதா? என்பதை கண்காணிப்பதுதான் இந்த அமைப்பின் வேலை. ஈரானிலும் கடந்த காலங்களில் இது கண்காணிப்பை மேற்கொண்டு வந்தது. இதுவரை ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கவில்லை என்றும் கூறியிருந்தது. இதையெல்லாம் கேட்டும் கூட இஸ்ரேலும், அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது என்பது தனிக்கதை.
ஆக நாடாளுமன்றத்தின் தீர்மானத்தின்படி, இனி ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒப்புதல் இல்லாமல், 'சர்வதேச அணுசக்தி அமைப்பின்' ஆய்வாளர்கள் அணுசக்தி நிலையங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதுகுறித்து சர்வதேச அணுசக்தி அமைப்பு கூறுகையில், "நாங்கள் இந்த அறிக்கைகளை அறிவோம். ஈரான் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கிறோம்" என்று சிம்பிகளாக முடித்துக்கொண்டார்கள்.
பதிலுக்கு ஈரான் தரப்பிலிருந்து காட்டமான ரிப்ளை வந்தது. அதாவது, "இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களைக் கண்டிக்கத் தவறியதால் சர்வதேச அணுசக்தி அமைப்பின் தலைவர் ரஃபேல் கிரோஸ்ஸி ஈரானுக்குள் நுழைய இனி அனுமதிக்கப்பட மாட்டார்" என்று ஈரானின் வெளியுறவு மந்திரி கூறியிருந்தார். இவராவது கொஞ்சம் நாகரீகமாக விமர்சித்திருக்கிறார். மற்றபடி ஈரானின் இரண்டாம் கட்ட தலைவர்கள், "கிரோஸ்ஸி இஸ்ரேலிய உளவாளி, அவரை தூக்கில் ஏற்றுங்கள்" என்று விமர்சித்திருக்கின்றனர்.
பின்னணி என்ன?
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் இராணுவ தளங்கள் மீது கடந்த ஜூன் 13ம் தேதி இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. மேலும், இராணுவ தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் சிலரையும் கொலை செய்தது. இதற்குப் பதிலடியாக ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை ஏவியது. இந்த தாக்குதலும் பதில் தாக்குதலும் மத்திய கிழக்கில் கடுமையான பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தன.
இப்படி போர் நடந்துக்கொண்டிருந்தபோது, ஜூன் 22 அன்று இஸ்ரேலின் கூட்டாளியான அமெரிக்கா, ஈரானின் ஃபோர்டோ, இஸ்ஃபஹான் மற்றும் நடான்ஸ் ஆகிய இடங்களில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை ஈரான் எதிர்பார்த்திருந்தது. ஆனாலும், சர்வதேச அழுத்தம் காரணமாக அமெரிக்கா இப்படி நடந்துக்கொள்ளாது என்று நம்பியது. அதெல்லாம் மதிக்கிற ஆளா அமெரிக்கா? இதனையடுத்து ஜூன் 24 அன்று ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 132 பெண்கள் மற்றும் 38 குழந்தைகள் உட்பட குறைந்தது 935 பேர் கொல்லப்பட்டனர். ஈரானின் பதிலடி தாக்குதல்களில் இஸ்ரேலில் 28 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில், அமெரிக்காவின் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை "முற்றிலுமாக அழித்துவிட்டன" என்று பெருமை பொங்க பேசினார். ஆனால், பலத்த சேதம் ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால் அது முற்றிலும் அழிக்கப்படவில்லை என்று ஈரான் தெரிவிதிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications