இஸ்ரேல் தாக்குதலால் எந்த பாதிப்பும் இல்லை.. ஏவுகணைகள் வழக்கம் போல சீறும்! - ஈரான்
தெஹ்ரான்: வடகிழக்கை யார் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது என்று மிகப்பெரிய போர் வெடித்திருக்கிறது. சமீபத்தில் ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்திய நிலையில், இந்த தாக்குதலால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஈரான் அறிவித்திருக்கிறது.
மத்திய கிழக்கு முழுவதும் இஸ்லாமியர்கள் நிரம்பியுள்ளனர். இங்கு அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது என்பது கொஞ்சம் கடினமான வேலையாகவே இருந்து வந்தது. இப்படி இருக்கையில்தான் இரண்டாம் உலகப்போரை பயன்படுத்தி, இஸ்ரேல் எனும் புதிய நாட்டை அமெரிக்காவும், பிரிட்டனும் உருவாக்கின. இப்படி உருவான இஸ்ரேல் கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து பாலஸ்தீனம் எனும் நாட்டையே விழுங்கியது. தற்போது காசாவும், மேற்கு கரையும் மட்டுமே பாலஸ்தீனமாக எஞ்சி இருக்கின்றன. ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை இருக்கிறது என்பதை போல, இஸ்ரேலின் ஆதிக்கத்திற்கு எதிராக பாலஸ்தீனத்தில் விடுதலை அமைப்புகள் உருவாகின.

இந்த அமைப்புகளில் 'ஹமாஸ்' மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது. இது, அரசியல் மற்றும் ஆயுதம் என இரண்டு வழிகளிலும் பயணிக்கிறது. இந்த அமைப்புக்கு தேவையான ஆயுதங்களையும், பயிற்சியையும் ஹிஸ்புல்லா எனும் அமைப்பு கொடுத்து வந்தது. இது ஈரானால் உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். இப்படி மறைமுகமாக ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்பு, முதன் முறையாக அடக்குமுறையை எதிர்த்து கடந்த ஆண்டு அக்.7ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாகவே இப்போது இஸ்ரேல் போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸை ஒழிப்பது மட்டுமே நோக்கம் என்று இஸ்ரேல் அறிவித்து போரை தொடங்கினாலும், இப்போரில் 40,000க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். மிகச்சமீபத்தில்தான் ஹமாஸ் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டிருக்கின்றனர். தலைவர்கள் கொல்லப்பட்டாகிவிட்டது, இனி போர் கிடையாது என்று பாலஸ்தீன மக்கள் நினைத்த நேரத்தில்தான், லெபனான் மீது தாக்குதலை நடத்தி, போரை அடுத்த கட்டத்திற்கு நடத்தியது இஸ்ரேல்.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மற்றும் அதை வளர்த்துவிட்ட ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் ஈரானின் ராணுவ தளங்களை குறி வைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டது. இதில் ஈரானின் ஏவுகணைகள் தயாரிக்கும் இடம், அதை நிலைநிறுத்தும் இடம் உள்ளிட்டவைகள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது.
இந்நிலையில், அப்படியெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை, எங்கள் ஏவுகணை கட்டமைப்புகள் வலுவாகவே இருக்கிறது என ஈரான் பாதுகாப்புத்துறை அமைச்சர் அசிஸ் நசிர்சாதே கூறியுள்ளார். அக்.1ம் தேதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் தரப்பில் ஒருவரும், ராணுவம் தரப்பில் 4 பேரும் உயிரிழந்துள்ளனர் என்றும், ரேடார் அமைப்புகளில் சில சேதமடைந்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல் வரலாற்று பிழையை செய்துவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கை மூலம், ஈரான்-இஸ்ரேலை மீண்டும் தாக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications