ஈரானுக்கு ஆதரவாக திரளும் அரபு நாடுகள்.. மத்திய கிழக்கில் திடீர் மாற்றம்.. உற்று கவனிக்கும் இஸ்ரேல்!
குவைத்: ஈரான் மீது இஸ்ரேல் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக இப்போது அரபு நாடுகள் எல்லாம் ஒன்றிணைந்துள்ளன. ஈரான் மீதான தாக்குதலுக்கு உதவ மாட்டோம் என இந்த நாடுகள் ஒரே குரலில் கூறியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழலே நிவி வருகிறது. ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டதைக் கண்டித்துக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

ஈரான் நடத்திய இந்தத் தாக்குதலுக்கு மிகப் பெரியளவில் பதிலடி தர இஸ்ரேல் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே ஈரானை சுற்றியுள்ள எல்லா அரபு நாடுகளும் இணைந்து ஒரு முடிவை எடுத்துள்ளதாம்.
திரளும் அரபு நாடுகள்: அதாவது ஈரான் அண்டை நாடுகள் தங்கள் மண்ணையோ அல்லது வான்வெளியையோ எந்த தாக்குதலுக்கும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்துள்ளதாக ஈரான் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி தெரிவித்தார்.
இது தொடர்பாக குவைத் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி, "எங்கள் அண்டை நாடுகள் எல்லாம் இணைந்து ஒரு முடிவை எடுத்துள்ளன. அதாவது ஈரான் மீது தாக்குதல் நடத்தத் தங்கள் மண்ணையோ அல்லது வான்வெளியையோ பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அவர்கள் எங்களுக்கு உறுதியளித்துள்ளனர்" என்றார்.
ஆதரவு: ஈரான் நாட்டை சுற்றி இப்போது பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி இப்போது அண்டை நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே அவர் பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், ஓமன், ஈராக், எகிப்து மற்றும் துருக்கி நாடுகளுக்குச் சென்ற நிலையில், இப்போது குவைத் நாட்டிற்குச் சென்றுள்ளார். அவர் சொல்வதை வைத்து பார்த்தால் இந்த அரபு நாடுகள் எல்லாம் ஈரான் மீதான தாக்குதலுக்கு உதவப் போவதில்லை என்ற முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக அமைச்சர் அராச்சி மேலும் கூறுகையில், "மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் தளங்களில் என்ன நடக்கிறது என்பதைத் துல்லியமாகக் கண்காணித்து வருகிறோம். இங்கு விமானங்கள் எங்குச் சென்று வருகிறது என்பதைக் கூட கவனித்து வருகிறோம். ஒருவேளை ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், அதற்குத் தக்க பதிலடி தரத் தயங்க மாட்டோம்" என்றார்.
ஏன் முக்கியம்: இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடான அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கில் பல பகுதிகளில் ராணுவ தளங்கள் உள்ளன. குறிப்பாக பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அமீரகம் ஆகிய பகுதிகளில் ராணுவ தளங்கள் உள்ளன. அந்த ராணுவ தளங்களைப் பயன்படுத்தி ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படலாம் எனச் சொல்லப்படும் நிலையில், அந்நாட்டு அமைச்சர் அராச்சி இந்த கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார்.
அணுசக்தி நிலையங்கள்: அமைச்சர் அராச்சி மேலும் கூறுகையில், "எங்கள் அணுசக்தி நிலையங்களைத் தாக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஆனாலும், அதைச் செய்ய மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அணுசக்தி தளங்களைத் தாக்குவது என்பது பெரிய சர்வதேச போர் குற்றம். அதேநேரம் அணுசக்தி தளங்களைத் தாக்கப் போவதாக அச்சுறுத்துவது கூட குற்றம் தான். அது சர்வதேச உரிமைகளுக்கு எதிரானது. இதற்காகவே இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேநேரம் ஈரான் மக்களையும் எங்கள் அணுசக்தி தளங்களையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். எங்களுக்கென சொந்த கருவிகள் மற்றும் முறைகள் உள்ளன. அவற்றை நாங்கள் நம்புகிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications