விடை கிடைக்காத.. "அந்த" குழப்பம்.. 36 மணி நேரத்தில்.. துருக்கி மீண்டும் மீண்டும் குலுங்கியது ஏன்?
துருக்கி நிலநடுக்கம் காரணமாக 3300க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகி உள்ளனர்
அன்காரா: துருக்கியின் கிழக்கு பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவில் 5.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. துருக்கியில் இப்படி அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட முக்கியமான காரணம் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விளக்கி உள்ளனர்.
துருக்கி கடந்த 24 மணி நேரமாக எதிர்கொள்ளும் பேரழிவை இதுவரை உலக நாடுகள் எதிர்கொண்டதே இல்லை என்றுதான் கூற வேண்டும். மொத்த துருக்கி நாட்டையும் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கம் உலுக்கி போட்டுள்ளது.
கட்டிடங்கள், சாலைகள், வீடுகள், விமான நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் என்று எல்லாம் உடைந்து, தனி தனியாக பெயர்ந்து கிடக்கின்றன. வரிசையாக அங்கு அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்கள் துருக்கி நாட்டையே உடைத்து போட்டு இருக்கின்றன.

துருக்கி
நேற்று காலை முதல் நிலநடுக்கம் 7.8 ரிக்டரில் பதிவாகி இருக்கிறது. துருக்கியில் அதிகாலை 5 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுதான் அங்கு ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தின் முதல் நிலநடுக்கம். இந்த முதல் நிலநடுக்கமே மிக மோசமாக இருந்தது. மக்கள் உறங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் பலர் மீது வீடுகளின் பாகங்கள் விழுந்துள்ளது. இந்த முதல் நிலநடுக்கமே மிகவும் வலிமையானதாக இருந்தது. அதோடு அதிகாலையில் ஏற்பட்டதால் கடுமையான சேதங்கள் ஏற்பட்டன.

இரண்டாவது நிலநடுக்கம்
அதன்பின் முதல் நிலநடுக்கத்தின் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வந்தன. கிட்டத்தட்ட 10 மணி நேரம் கழித்து இரண்டாவது நிலநடுக்கம் மாலையில் ஏற்பட்டது. இரண்டாவது நிலநடுக்கம் 7.5 ரிக்டரில் பதிவாகி உள்ளது. இதுவும் மிகவும் வலிமையாக இருந்தது. இது மீட்பு பணிகளை வெகுவாக பாதித்தது. பணிகள் மொத்தமாக இதனால் முடங்கின. அதன் பின்னர் சில மணி நேரங்களில் மூன்றாவது நிலநடுக்கம் 6 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த மூன்று நிலநடுக்கமும் நேற்று 24 மணி நேரத்திற்குள் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகும். முதல் நிலநடுக்கத்தின் மீட்பு பணிகள் நடந்து கொண்டு இருக்கும் நிலையிலேயே இரண்டாவது நிலநடுக்கம் மற்றும் மூன்றாவது அதே பகுதியில் ஏற்பட்டு உள்ளது.

மீண்டும் நிலநடுக்கம்
இந்த நிலையில்தான் துருக்கியின் கிழக்கு பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவில் 5.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இரண்டு நாட்களில் 4வது முறையாக துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. 36 மணி நேரத்தில் துருக்கி மீண்டும் மீண்டும் மோசமாக குலுங்கி உள்ளது. இதில் ஒரு கேள்விக்கு மட்டும்தான் இன்னும் விடை கிடைக்கவே இல்லை. . துருக்கி நிலநடுக்கம் அதிகமாக ஏற்பட கூடிய இடம் ஆகும். யூரேசிய தட்டு மற்றும் ஆப்பிரிக்க மற்றும் அரேபிய தட்டுகள் எல்லாம் ஒரு இடத்தில் சந்திக்கும் பகுதிதான் துருக்கி. இதன் காரணமாக அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம் . அது பலருக்கும் தெரிந்ததே.

குழப்பம்
ஆனால் இப்போது ஏற்படும் நிலநடுக்கங்கள் புதிய நிலநடுக்கமா? அல்லது நேற்று ஏற்பட்டதன் ஆப்டர் எபெக்ட்டா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது புதிய நிலநடுக்கம் என்றால் புவி தட்டுகள் புதிதாக நகர்வது. ஆப்டர் எபெக்ட் என்றால் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்படும் பின்விளைவுகள் காரணமாக சில தட்டுகள் ஆட்டம் காண்பது. அதாவது ஒரு சீட்டு கட்டில் நடுவில் உள்ள சீட்டை எடுத்தால் மேலே உள்ளே சீட்டுகள் விழுவது போன்றது ஆப்டர் எபக்ட். இதில் துருக்கியில் இப்போது என்ன மாதிரியான நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது என்ற குழப்பம் ஏற்பட்டு உள்ளது. ஏனென்றால் இந்த நிலநடுக்கத்தை துருக்கி நாட்டு அதிகாரிகள் சிலர் புது நிலநடுக்கம் என்கிறார்கள். அதே சமயம் சிலர் ஆராய்ச்சியாளர்கள் இது ஆப்டர் எபெக்ட்தான்.. பெரிய பிரச்சனை இருக்காது என்கிறார்கள்.

குழப்பம் ஏற்பட்டுள்ளது
இதுதான் உலக மக்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி நிலநடுக்கம் காரணமாக 3300க்கும் அதிகமானோர் இதுவரை பலியாகி உள்ளனர். மீட்பு பணிகள் நடந்து வரும் நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உண்மையான பலி எண்ணிக்கை அங்கு 25 ஆயிரத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருக்கியில் மட்டுமின்றி சிரியாவிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. சிரியாவில் 1700 பேர் இதுவரை நிலநடுக்கம் காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.20 ஆயிரம் பேர் காயங்களுடன் துருக்கியில் மீட்கப்பட்டு உள்ளனர். 4000 பேர் சிரியாவில் காயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். 7 ஆயிரம் கட்டிடங்கள் துருக்கியில் இடிந்து விழுந்து உள்ளன. சிரியாவில் 3 ஆயிரம் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications