இரவோடு இரவாக காசாவுக்கு போகும் மின்சாரத்தை நிறுத்திய இஸ்ரேல்! நெதன்யாகு போட்ட உத்தரவு! பின்னணி என்ன?
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.. ஹாமஸுக்கு அழுத்தும் கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள இஸ்ரேல், இப்போது காசா பகுதிக்குச் செல்லும் மின்சாரத்தை மொத்தமாக முடக்கியுள்ளது. இதனால் காசா பகுதியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் சூழலில், குடிநீர் பஞ்சம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே வெடித்த மோதல் கடந்த சில ஆண்டுகளாகவே மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்தது. டிரம்ப் அதிபரான சமயத்தில் தான் இரு தரப்பும் தற்காலிக போர் நிறுத்தம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டன. இதனால் அந்த பகுதியில் மெல்ல அமைதி திரும்பி வந்தது. இதற்கிடையே இப்போது மீண்டும் இஸ்ரேல் தீவிர நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டது.

மின்சாரம் நிறுத்தம்
இந்தச் சூழலில் காசா மீதான அடுத்தகட்ட நடவடிக்கையாகக் காசா பகுதிக்கு வழங்கப்படும் மின்சாரத்தை உடனடியாக நிறுத்துவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஏற்கனவே ஹமாஸ் உடனான மோதல் மீண்டும் அதிகரித்து வரும் சூழலில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.. இஸ்ரேல் எரிசக்தித் துறை அமைச்சர் எலி கோஹன் உத்தரவின் பெயரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் வசம் இன்னுமே பல பணய கைதிகளை உள்ளனர். அவர்களை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்பதில் இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே இப்போது மின்சார சப்ளையை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது.
திடீர் உத்தரவு
இது தொடர்பாக இஸ்ரேல் எரிசக்தித் துறை அமைச்சர் எலி கோஹன் கூறுகையில், "எங்களால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளையும் நிச்சயம் நாங்கள் எடுப்போம். இதன் மூலம் பணய கைதிகளை எங்களால் சீக்கிரம் மீட்க முடியும். இன்னொரு தாக்குதலை நடத்த ஹமாஸ் காசாவில் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்" என்றார்.
நீர் பஞ்சம்
இதற்காகக் காசா மின் நிலையங்களுக்கு மின்சாரம் அனுப்புவதை நிறுத்துமாறு இஸ்ரேல் மின்சாரக் கழகத்திற்கு அறிவுறுத்தும் கடிதத்தையும் அவரது அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதனால் காசா பகுதியில் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்படும் என்றே தெரிகிறது. கடலுக்கு அருகே அமைந்துள்ள காசாவில் குடிநீருக்குச் சிக்கல் நிலவுகிறது. அவர்கள் கடல்நீரில் இருந்து குடிநீராக்கும் ஆலைகள் மூலமாகவே நீர் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறார்கள். இந்த ஆலைக்கும் மின்சார சப்ளை நிறுத்தப்படுவதால் தண்ணீர் உற்பத்தியும் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
காசா பகுதி
காசா என்பது சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் பகுதியாக உள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் ஆண்டுக் கணக்கில் மோதல் நிலவும் சூழலில், இதனால் காசாவில் உள்ள அப்பாவி பொதுமக்கள் தான் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஏற்கனவே காசா பகுதியின் மின்சார விநியோகம் குறைவாகவே இருக்கிறது. அங்குள்ள மக்கள் ஜெனரேட்டர்கள் மற்றும் சோலார் பேனல்களை தான் நம்பி இருந்தனர். இந்தச் சூழலில் தான் இஸ்ரேல் இப்போது மின்சாரத்தை மொத்தமாக நிறுத்தியுள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் இறுதியாகி இருந்த நிலையில், திடீரென மோதல் ஏற்பட என்ன காரணம் என்று பலருக்கும் கேள்வி எழும். ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பின்பற்றாததே இதற்குக் காரணம் என்கிறது இஸ்ரேல்.
என்ன கரணம்?
இஸ்ரேல் ஹமாஸ் போர் நிறுத்தம் என்பது இரண்டு கட்டங்களாக இருந்தது. முதல்கட்டத்தில் தற்காலிக போர் நிறுத்தம். அதன்படி முதல் போர் நிறுத்தத்தின் இறுதி வாரம் பணய கைதிகள் ஹமாஸ் விடுவிக்க வேண்டும். ஆனால், பணைய கைதிகளை விடுவிக்க மறுக்கும் ஹமாஸ், மிகவும் சிக்கலான இரண்டாம் கட்டம் குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் எனக் கூறுவதாகத் தெரிகிறது. ஆனால், பணைய கைதிகளை விடுவிக்கும் வரை பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேல் ரெடியாக இல்லை. இதுவே மோதலுக்கு காரணம்.












Click it and Unblock the Notifications