காசா, சிரியா, லெபனான், ஏமன்.. இஸ்லாம் நாடுகளுடன் ஒரண்டை இழுத்த இஸ்ரேல்! எல்லா பக்கமும் சண்டை
ஜெருசலேம் : காசா, சிரியா, லெபனான், ஏமன் உள்ளிட்ட பல நாடுகளுடன் இஸ்ரேல் மூர்க்கமாக சண்டை போட்டு வரும் நிலையில் அந்தப் பட்டியலில் ஈரானும் இணைந்துள்ளது. ஹிஸ்புல்லா உள்ளிட்ட முக்கிய அமைப்புகளின் தலைவர்கள் பலியாகி இருக்கும் நிலையில் அரபு நாடுகளும் களத்தில் குதிக்கலாம் என்பதால் மூன்றாம் உலகப்போர் அச்சம் எழுந்துள்ளது.
பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே பல ஆண்டுகளாகவே போர் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டு காசாவில் ஆதிக்கம் செலுத்தும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்த நிலைமை தீவிரமானது.

தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுக்க, கடந்த ஓராண்டுக்கும் மேல் போர் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் மோசமான போர் யுக்திகளை கையாண்டு அப்பாவி பெண்கள், குழந்தைகள், நோயாளிகளை கொன்று குவிப்பதாக உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
ஆனாலும் எந்த நாட்டின் எச்சரிக்கையையும் அறிவுரையையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பது போலவே இஸ்ரேலின் செயல்பாடுகள் இருக்கிறது. இதன் காரணமாக மத்திய கிழக்கில் உள்ள பல்வேறு நாடுகள், தீவிரவாத குழுக்கள், போராட்டக் குழுவினர் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களுடனும் இஸ்ரேல் சண்டை செய்து வருகிறது. இந்நிலையில் காசாவில் இருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
இதை அடுத்து அவர்கள் மீது பேஜர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து ஹிஸ்புல்லாவும் பதிலடி கொடுக்க, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் ஹிஸ்புல்லா தலைமையகத்தை குறிவைத்து விமானப்படை தாக்குதலை நடத்தியது இஸ்ரேல். அதில் அதன் தலைவர் ஹசன் நஸ்ரல்லா பலியானார்.
இதனையடுத்து லெபனானுக்கு ஆதரவாக ஏமன் நாட்டிலுள்ள ஹவுத்தி போராளி குழுவினர் இஸ்ரேலுக்கு எதிராக ட்ரோன் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து அந்நாட்டின் முக்கிய வணிக மையங்கள், தலைமையகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இரு அமைப்புகளுக்கும் ஆதரவாக சிரியாவில் இருக்கும் ஷியா போராளி குழுக்கள் இஸ்ரேலுக்கு எதிராக களம் இறங்கின.
அவர்களுக்கு சிரிய அதிபர் ஆசாத், ஈரான் ராணுவம் ஆதரவளித்தது. இதன் காரணமாக லெபனான், காசா, சிரியா ஏமன் ஆகிய நாடுகளோடு இஸ்ரேல் சண்டை போடுவதோடு பலமுனை தாக்குதலை எதிர் கொண்டுள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேலும் அந்நாடுகள் மீது தாக்குதலை தொடரும் நிலையில் ஹமாஜின் மூத்த தலைவர் ரவுகி முஸ்தாகா, ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா, அவரது மகள், சிரிய தலைநகர் டமாஸ்கஸில் இருந்த நஸ்ரல்லாவின் மருமகன் ஹசன் ஜாபர் ஆகியோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து பல்வேறு இஸ்லாமிய நாடுகளும் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கியுள்ளன. குறிப்பாக போராளி குழுக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் ராணுவம் நூற்றுக்கும் மேற்பட்ட ஹைப்பர்சோனிக் மற்றும் பாலிடிக்ஸ் ஏவுகணைகளை வீசியது. இஸ்ரேல் தனது அயன் டோம் பாதுகாப்பு அமைப்பு மூலம் ஏவுகணைகளை அழித்தாலும் பல இடங்களில் ஈரானின் குறி தப்பவில்லை.
தங்கள் மீது பதில் தாக்குதல் நடத்தினால், சேதம் பலமாக இருக்கும் என இஸ்ரேலை ஈரான் எச்சரித்தது. தற்போது எப்போது வேண்டுமானாலும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என கூறப்படும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் குதித்துள்ளது. இதனால் இஸ்ரேலுக்கு எதிரான நாடுகளுக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகள், வளைகுடா நாடுகள் களத்தில் குதிக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் மூன்றாம் உலகப்போர் அபாயமும் உலகை சூழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications