ரெட் லைனை தாண்டிய இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும்! எச்சரிக்கும் நிபுணர்கள்
தோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த, ஹமாஸ் தலைவர்கள் மீது இஸ்ரேல் நடத்தியிருக்கும் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல், சிவப்பு கோட்டை தாண்டிருயிருப்பதாகவும், இனி மத்திய கிழக்கில் மூன்றாம் உலகப்போர் வெடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஈரானுக்கு எதிராகப் போர் தொடுத்தது, சிரியாவில் நிலத்தை ஆக்கிரமித்தது, லெபனான் குழுவான ஹிஸ்புல்லாவின் தலைவரைக் கொன்றது, மற்றும் காசா பகுதியில் 64,500 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றது என தொடர் தாக்குதல் நடவடிக்கையை தொடர்ந்து, தற்போது கத்தார் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவுக்கு ராணுவ தளம் கொடுத்தால், அது நமது நாட்டின் எல்லையில் இருக்கிறது என்பதற்காகவே, மூன்றாம் நாடுகள் நம்மீது தாக்குதல் நடத்த பயப்படும் என்பது அரபு நாடுகளின் நம்பிக்கையாக கடந்த காலங்களில் இருந்தது. ஆனால், இன்று இந்த நம்பிக்கை உடைந்திருக்கிறது என்று ஐரோப்பிய வெளியுறவு உறவுகள் கவுன்சிலின் நிபுணரான சின்சியா பியான்கோ கூறியிருக்கிறார். அதாவது கத்தாரில் தோஹாவுக்கு மிக அருகில் அல்-உதெய்ட் விமானப்படைத் தளம் இருக்கிறது.
இது அமெரிக்க விமானப்படைத்தளமாகும். இங்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க படை வீரர்கள் பணியாற்றி வருகிறார்கள். ஆனால் இவ்வளவு இருந்தும் இன்று தோஹாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இதன் மூலம் அமெரிக்கா மீதான நம்பகத்தன்மை கத்தார் இழந்துவிட்டது. எனவே கத்தார் இனி எந்த எல்லைக்கு சென்றாலும் அது குறித்து ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
சர்வதேச நெருக்கடி குழுவின் மூத்த இஸ்ரேல் ஆய்வாளர் மெய்ராவ் ஜான்ஸ்ஸெய்ன் அல் ஜசீராவிற்கு அளித்த பேட்டியில், "இஸ்ரேல் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளிலும், மத்திய கிழக்கில் உள்ள தலைநகரங்களிலும் தனக்கு இஷ்டப்பட்டபடி தாக்குதல் நடத்துவதைப் பார்த்திருக்கிறோம். இதைத் தடுக்க யாரும் தீவிர நடவடிக்கை எடுக்காதவரை, அது தொடரும்" என்று தெளிவாக கூறியிருக்கிறார்.
பாலஸ்தீனிய பாதுகாப்பு ஆய்வாளர் ஹம்சே அத்தார் கூறுகையில், "வழக்கமாக இஸ்ரேல் உளவுத்துறையான மொசட் கார் குண்டுகள், விஷம் அல்லது துப்பாக்கிச் சூடு போன்ற முறைகளை பயன்படுத்தி எதிரிகளை கொல்லும். ஆனால் இன்று நடந்த தாக்குதல் இத்தகைய தாக்குதல் பாரம்பரிய மொசாட் தாக்குதலுக்கு அப்பாற்பட்டது. கத்தாரிகள் தோஹாவை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கும் என்று எதிர்பார்க்கவில்லை" என்று கூறினார்.
இஸ்ரேலின் இந்தச் செயல்களுக்கு அமெரிக்காவிடம் இருந்து மிகக் குறைவான எதிர்ப்பே கிளம்பியுள்ளது. வெள்ளை மாளிகையின் அறிக்கையில், அமெரிக்காவிற்கு தாக்குதல் குறித்துத் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இஸ்ரேல் தன்னிச்சையாக இதை நடத்தியதாக டிரம்ப் கூறியுள்ளார். இந்தத் தாக்குதல் இஸ்ரேலிய அல்லது அமெரிக்க இலக்குகளை மேம்படுத்தவில்லை என்றும், ஆனால் ஹமாஸை தாக்குவது "தகுதியான நோக்கம்" என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.
அல் ஜசீராவின் மூத்த அரசியல் ஆய்வாளர் மர்வான் பிஷாரா, "அமெரிக்காவின் அனுமதி இல்லாமல் இஸ்ரேல் எந்தவொரு தாக்குதலையும் நடத்தாது என்று நான் நினைக்கவில்லை. அமெரிக்கா அனுமதி வழங்கவில்லை என்றால், கண்டனம் விரைவில் வெளிவர வேண்டும். போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போது, ட்ரம்ப் நிர்வாகம் இஸ்ரேலின் இந்தச் செயலைக் கண்டிக்க வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, இஸ்ரேலின் தாக்குதல், அமெரிக்கா மீதான கத்தார் நம்பிக்கையை இழந்திருக்கிறது என்பதை தெரிவிக்கிறது. எனவே விரைவில் அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கலாம்.












Click it and Unblock the Notifications