"போர் நிறுத்தம்" செய்ய ரெடி.. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் போட்ட இஸ்ரேல் பிரதமர்! உற்று பார்க்கும் காசா
டெல் அவிவ்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் தொடரும் நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திடீரென கூறிய சில கருத்துகள் இப்போது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த அக். 7ஆம் தேதி ஆரம்பித்த யுத்தம் தொடர்ந்தே வருகிறது. முதலில் இஸ்ரேல் நாட்டில் நுழைந்த ஹமாஸ் சரமாரி தாக்குதல் நடத்தியது. ஏவுகணை தாக்குதல் தொடங்கிப் பல வகை தாக்குதல்களை நடத்திய ஹமாஸ் பலரையும் பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது.

இதையடுத்து இஸ்ரேல் பதிலடியில் இறங்கியது. காசா மீது தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல், அடுத்த கட்டமாக முழு வீச்சில் தாக்குதலையும் தொடங்குகிறது. இதனால் அங்கே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
போர் நிறுத்தம்: இப்படிக் காசா மீது இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்றடைய வழிவகை செய்யும் வகையில் இஸ்ரேலே போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும், போர் நிறுத்தம் குறித்த பேச்சுக்கே இடமில்லை என்றே இஸ்ரேல் கூறி வந்தது.
இதற்கிடையே இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் போரில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இத்தனை காலம் போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பே இல்லை என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி வந்த நிலையில், இப்போது அவரது நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. காசா மக்கள் உதவிகளைப் பெறவும் பிணையக் கைதிகள் வெளியேறும் வகையிலும் சிறிய நேரத்திற்குப் போர் நிறுத்தம் செய்வது குறித்து இஸ்ரேல் பரிசீலனை செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நெதன்யாகு: அதேநேரம் சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் போதிலும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இது தொடர்பாகச் சர்வதேச செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த நெதன்யாகு, "காசாவில் உள்ள ஹமாஸ் ஆட்சியாளர்களை முழுமையாக அழிப்பது தான் எங்கள் நோக்கம். பாலஸ்தீனத்திடம் இருந்து இஸ்ரேலுக்குப் பாதுகாப்பு தேவை. போர் முடிந்தாலும் கூட அதன் பிறகும் பாதுகாப்பு தேவை என்றே கருதுகிறேன்.
இங்கே உலக நாடுகள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். உதவி பொருட்களைச் சென்றடைய அவ்வப்போது ஓரிரு மணி நேரம் போர் நிறுத்தம் என்பதை நாங்கள் தொடர்ந்து செய்து வருகிறோம். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்கவும்..
இப்போதும் இருக்கிறது: பிணையக் கைதிகள் பாதுகாப்பாக வெளியே வரவும் இது போன்ற போர் நிறுத்தங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால், முழு வீச்சில் போர் நிறுத்தம் என்பதில் சாத்தியம் இல்லை. ஏனென்றால் அது எங்கள் போர் யுக்தியை பாதிக்கும்" என்றார்.
உலக நாடுகள்: போர் நிறுத்தம் தொடர்பாகச் சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா தொடங்கி உலகின் பல்வேறு நிறுவனங்களும் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இஸ்ரேலைக் கடுமையாக வலியுறுத்தினர்.
இருப்பினும், அக். 7ஆம் தேதி தாக்குதல் போது பிடித்துச் செல்லப்பட்ட பிணையக் கைதிகளை ரிலீஸ் செய்தால் மட்டுமே போர் நிறுத்தம் செய்ய முடியும் என்கிறது இஸ்ரேல். மறுபுறம், தங்கள் மீது ஓயாமல் தாக்குதல் நடத்தப்படும் போது போர் பிணையக் கைதிகளை விடுதலை செய்ய முடியாது என்று ஹமாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இப்படி இரு தரப்பும் கூறி வரும் நிலையில், போர் எப்போது முடியும் என்பதில் குழப்பமே தொடர்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications