பாகிஸ்தானுடன் அணு ஆயுத போரா? மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு! முதன்முறை வெளிப்படையாக பேசிய ஜெய்சங்கர்
சென்னை: பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்தியா நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து அணு ஆயுத போர் ஏற்படுவது போல பேசியது தனக்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்தியதாகவும் இது போன்ற கருத்துக்கள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பாதிக்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்
கடந்த ஏப்ரல் மாதம், ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா தீவிரவாத தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து இந்திய பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறிய நிலையில் தக்க பதிலடி கொடுத்தது இந்தியா.
மேலும் பாகிஸ்தான் ராணுவ நிலைகள், விமானப்படை தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய நிலையில் பாகிஸ்தான் பலத்த சேதத்தை சந்தித்தது. பிற நாடுகளில் இருந்து இரவலாக பெற்ற ட்ரோன்களை தாக்குதலுக்கு பயன்படுத்திய நிலையில் அவற்றையும் இந்தியா அழித்தது.

இந்த நிலையில் போர் நிறுத்தம் வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான மேஜர் ஜெனரல் இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியதாகவும், அதற்குப் பிறகு தாக்குதல் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இடையில் இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் நடக்க வாய்ப்பிருப்பதாகவும் யூகங்கள் கிளம்பின. இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் என்ற யூகத்தை நிராகரிப்பதாக கூறியுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இதுபோன்ற கருத்துக்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் பிரபலமான எஃப்ஏஇசட் (FAZ) ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர்," கடந்த ஏப்ரல் மாதம் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா மிக மிக தக்க முறையில் பதிலளித்தது. அதுவும் பயங்கரவாதிகளையே குறிவைத்து பதிலடி கொடுத்தது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் இந்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கேற்ப தற்காப்பு நடவடிக்கையாகவே நாங்களும் தாக்கினோம்.
இதை அணு போர் என்ற நிலைக்கு இட்டுச் சென்றது போன்று பேசுவது முற்றிலும் தவறு. அணு ஆயுதங்களை உள்ளடக்கிய ஒரு பிராந்தியமாக இந்தியா - பாகிஸ்தான் கொண்டு வரப்படுவதை கண்டிக்கிறேன். எல்லா விஷயங்களும் ஒரு அணு ஆயுத போராகவே மாறும் என்ற எண்ணம் பயங்கரவாதத்தையே ஊக்குவிக்கும். இது உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த தாக்குதலுக்குப் பிறகு இரண்டு வாரங்களாக எல்லையில் அமைதியே நிலவுகிறது. நாங்கள் எதை செய்ய வேண்டுமோ அதையே செய்தோம். பயங்கரவாதத்திற்கு என்ன மதிப்பு தரப்படும் என்பதை தற்காலிகமாக அவர்களுக்கு உணர்த்தியுள்ளோம்.
பாகிஸ்தான் ராணுவம் தாக்கிய போதுதான் நாங்கள் பதில் தாக்குதல் நடத்தினோம். அவர்கள் தங்கள் பாதக நடவடிக்கைகளால் நஷ்டம் அடைவதாக புரிந்து கொண்ட பின்பே, தாக்குதலை நிறுத்த முன்வந்தனர். அணு போர் என்பது அச்சுறுத்தலுக்கே பயன்படும் ஒரு கருவியாக பேசப்படுவதால், இது சர்வதேச பயங்கரவாத எதிர்ப்பு போராட்டங்களை பாதிக்கும். இந்தியாவின் பாகிஸ்தான் மீது மேற்கொண்ட நடவடிக்கை கட்டுப்பாட்டுடன் இருந்தது. அதை அணு தாக்குதலாக சித்தரிக்க முயற்சிப்பது மிக மிக ஆபத்தான சிந்தனை. இந்தியாவில் இன்று தீவிரவாத தாக்குதல் நடக்கிறது, நாளை உங்கள் நாட்டிலும் நடக்கலாம்" என்றார்.
முன்னதாக, ஜெர்மனியின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சராக வாடெஃபுல், பதவியேற்ற நிலையில், அதே நாளிலேயே ஜெய்சங்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். தொடர்ந்து ஜெய்சங்கர் ஜெர்மனி பயணம் மேற்கொண்ட நிலையில், பாதுகாப்பு, தொழில்நுட்பம், ஏஐ உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இந்த பயணத்தின் போது ஜெர்மனி ஜனாதிபதி, பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஜெய்சங்கர் சந்தித்ததாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications