மின்னல் வேகம்.. இந்தியாவின் முதல் புல்லட் ரயில் இதுதான்.. ஜப்பானில் சோதனை ஓட்டம் - ஸ்பீடை பாருங்க
மும்பை: நம் நாட்டில் மும்பை - அகமதாபாத் இடையே முதல் புல்லட் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் புல்லட் ரயில் திட்டத்துக்கான சோதனை ஓட்டம் ஜப்பானில் தொடங்கி உள்ளதால் அதன் வேகம் பற்றிய முக்கிய தகவலும், சோதனை ஓட்ட வீடியோவும் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பை - குஜராத்தின் அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கு இடையே புல்லட் ரயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதான் நம் நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டமாகும்.

கடந்த 2015ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி இந்த திட்டத்தை அறிவித்தார். கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பரில் புல்லட் ரயில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான இந்த திட்ட பணிகள் கடந்த 7 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
மும்பை -அகமதாபாத் இடையே 508 கிலோமீட்டர் தொலைவுக்கு புல்லட் ரயிலுக்கான அதிநவீன தண்டவாளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 21 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப் பாதையாகும். கடலுக்கு அடியில் 7 கி.மீ. தொலைவு, மலையை குடைந்து 5 கி.மீ. தொலைவுக்கு தண்டவாளம் அமைக்கப்பட்டு இருக்கிறது. மும்பை, தாணே, விரார், பொய்சர், வாபி, பிலிமோரா, சூரத், பரூச், வடோதரா, ஆனந்த், அகமதாபாத், சபர்மதி ஆகிய 12 இடங்களில் சர்வதேச தரத்தில் ரயில் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
தற்போது மும்பை - அகமதாபாத் இடையே வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயிலின் பயண நேரம் என்பது 5.30 மணிநேரமாக உள்ளது. புல்லட் ரயில் திட்டம் அமலுக்கு வரும்போது இந்த பயண நேரம் 3 மணிநேரமாக குறையும். புல்லட் ரயில் மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்பதால் பயண நேரம் 2.30 மணிநேரம் வரை குறைய உள்ளது. நம் நாட்டில் அடுத்த ஆண்டு சோதனை ஓட்டம் தொடங்க வாய்ப்புள்ளது.
2030ம் ஆண்டில் மும்பை - அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் நாட்டுக்கும் ஜப்பானுக்கும் இடையே நல்ல உறவு உள்ளது. இதனால் நம் நாட்டின் நட்பை கருத்தில் கொண்டு ஜப்பான் நமக்கு 2 புல்லட் ரயில்களை இலவசமாக வழங்க உள்ளது. இந்த ரயில்களின் யெபர் சின்கான்சென்.
இதில் ஒரு ரயில் இ5 மற்றும் இன்னொரு ரயில் இ3 வரிசையை சேர்ந்தது. இந்நிலையில் தான் நம் நாட்டுக்கான 2 சின்கான்சென் புல்லட் ரயில்கள் ஜப்பானில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் என்பது ஜப்பானின் சென்டாய் நகரில் தொடங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து ஜப்பானிய அதிகாரிகள் கூறும்போது, "இந்தியாவுக்காக 2 புல்லட் ரயில்கள் தயாரிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிக வெப்பம் நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு கடுமையான வெயிலை சமாளிக்கும் வகையில் புல்லட் ரயில்களை தயார் செய்துள்ளோம். சோதனை ஓட்டம் முடிந்த பிறகு சரக்கு கப்பல் மூலம் இரு புல்லட் ரயில்களும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும்" என்று தெரிவித்தன.
🚨 India's first-ever bullet train, Shinkansen, is undergoing trials in Japan. pic.twitter.com/k4hf82Vepb
— Indian Tech & Infra (@IndianTechGuide) May 30, 2025
முன்னதாக புல்லட் ரயில் திட்டம் மற்றும் புல்லட் ரயில்களை இயக்குவது தொடர்பாக பயிற்சி பெற இந்திய குழு ஜப்பான் சென்றுள்ளனர். இந்த குழுவினருக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications