கடத்தப்பட்ட இந்தியர்கள் பத்திரம், ஆனால் அதிரடி மீட்புக்கு வாய்ப்பில்லை: ஈராக்
பாக்தாத்: ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் பத்திரமாக உள்ளதாகவும், அதேசமயம், அவர்களை அதிரடிப்படையினரை அனுப்பி மீட்பது கடினம் என்றும் ஈராக் அரசு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே உருவான மதக்கலவரம் தற்போது உள்நாட்டு போராக மாறியுள்ளது. ஷியா அரசுக்கு எதிராக சதாம் ஆதரவுப் படையான சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே அவர்கள் மொசூல், கிர்குக், திக்ரித், சாதியா, ரமாடி சமர்ரா, ஜலாலா உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றி தங்கள் பிடியில் வைத்துள்ளனர். தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றுவதில் தீவிர முனைப்பாக உள்ளனர்.
இந்நிலையில், மொசூல் நகரில் வேலை செய்து வந்த இந்திய கட்டிடத் தொழிலாளர்கள் 40 பேர் கடந்த 10ம் தேதி கடத்தப்பட்டனர். அவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளனர், அவர்களது கதி என்ன என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தியர்கள் கடத்தப்பட்டதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள். ஈராக்கில் கடத்தப்பட்டுள்ள இந்திய தொழிலாளர்கள் 40 பேரை மீட்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
இதற்கிடையே கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் கொல்லப்பட்டு விட்டதாகவும், இல்லை அவர்கள் பத்திரமாக உள்ளார்கள் என தொடர்ந்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், ஈராக்கில் உள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வர தேவையான ஏற்பாடுகளில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது என நம்பிக்கையளித்துள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.
இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ்.யால் கடத்தப்பட்ட இந்தியர்களை அதிரடியாக மீட்பது சாத்தியமில்லாதது என ஈராக் அரசு தெரிவித்துள்ளதாக ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications