மழை வேண்டும்.. முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்.. மறக்காமல் மூக்கில் முத்தம் வேறு!
மழை வேண்டி முதலையைத் திருமணம் செய்துள்ளார் மெக்ஸிகன் மேயன் ஒருவர்.
மெக்சிகோ: மழை மற்றும் இயற்கை வளங்கள் வேண்டி, மேயர் ஒருவர் 7 வயது பெண் முதலையைத் திருமணம் செய்து கொண்ட வினோத சம்பவம் மெக்ஸிகனில் நடந்துள்ளது.
நாட்டிற்கு நாடு சடங்குகளும், சம்பிரதாயங்களும் வேறுபடும். நம் நாட்டில் மழை வேண்டி கழுதைக்கு, நாய்க்கு என விலங்குகளுக்கு திருமணம் செய்து வைப்பது போல், மெக்ஸிகனில் ஹிஸ்பானிக் என்ற முதலையைத் திருமணம் செய்து கொள்ளும் சடங்கு நடைமுறையில் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை கொண்ட இந்த சடங்கை செய்தால் நாட்டில் மழை வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
கடந்த வாரம் இந்த சடங்கை செய்து இணையத்தில் பிரபலமாகி விட்டார் மெக்ஸிகனில் உள்ள பெட்ரோ ஹியூமலுலோ நகர மேயர்.

7 வயது முதலை
மெக்ஸிகனின் ஒவாசகா மாநிலத்தில் உள்ளா சிறிய நகரம் தான் சான் பெட்ரோ ஹியூமலுலோ. இதன் மேயராக இருப்பவர் விக்டர் ஹ்யூகோ சோசா. கடந்த வியாழக்கிழமை இவர் 7 வயதான பெண் முதலை ஒன்றைத் திருமணம் செய்து கொண்டார். விருந்தினர்கள் முன்னிலையில் நடந்த இந்தத் திருமணத்தில், மேயர் மணமகன் போன்று உடை அணிந்திருக்க, முதலைக்கும் மணமகள் மாதிரி ஆடை அணிவித்திருந்தனர்.

கோலாகல திருமணம்
மேள, தாளங்கள் முழங்க, அந்நகர பெண்கள் குட்டி இளவரசி எனப் பெயரிடப்பட்ட அந்த முதலைக்குட்டியை கையில் ஏந்தி ஊர்வலகமாக வந்தனர். ஆண்கள் தங்களுடைய தொப்பிகளால் முதலைக்கு விசிறி விட்ட படியே உடன் வந்தனர். ஊர்வலத்தின் இறுதியில் நடனமாடியபடி அந்த முதலையை மணந்து கொண்டார் மேயர்.

பாரம்பரிய சடங்கு
ஓக்ஸாகா மாநிலத்தின் சோண்டல் மற்றும் ஹுவேவ் பழங்குடி சமூகங்களில், இயற்கையின் அருளை கோரும் பிரார்த்தனை சடங்கு இது எனக் கூறப்படுகிறது. இந்த விழா கொண்டாட்டத்தை எலியா எடித் அகுலியர் என்ற பெண் காட்மதராக(Godmother) இருந்து ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார். மேள தாளம் முழங்க, ஆட்டம் பாட்டத்துடன் அந்த நகரமே இந்தத் திருமணத்தை திருவிழாவாகக் கொண்டாடியுள்ளது.

மழை வேண்டி திருமணம்
"இந்த திருமணத்தின் மூலம் நாங்கள் இயற்கை அன்னையிடம் தேவையான மழை, தேவையான உணவு, நதியில் தேவையான மீன்கள் ஆகியவற்றை வழங்குமாறு கேட்டு கொண்டோம். எங்கள் நகரம் மொழிகளையும் பாரம்பர்யங்களையும் விட்டுவிடாமல் பிடிவாதமாகப் பராமரிக்கும் பல பாரம்பர்ய குழுக்களின் தாயகமாக உள்ளது. இயற்கைக்காக நடக்கும் இந்த சடங்கு பரம்பர்யத்தில் ஒன்று" என மணமகனான மேயர் விக்டர் கூறியுள்ளார்.

வைரலாகும் புகைப்படங்கள்
சடங்கின் ஒரு கட்டமாக வாய் கட்டப்பட்டிருந்த (முன்னெச்சரிக்கை பாஸ்.. முதலை உணர்ச்சிவசப்பட்டு திருப்பி கடித்து விட்டால் என்ன செய்வது) அந்த பெண் முதலையின் மூக்கின் மேல் முத்தம் கொடுத்தார் மேயர். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகி, வைரலாகி விட்டது. முதலையுடன் திருமணமா என இதைப் பார்த்து நெட்டிசன்கள் ஆச்சர்யமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications