சுந்தர் பிச்சை vs சத்யா நாதெல்லா.. "ஏஐ வந்தாலும் முடியாது.." கூகுள் மீது சரமாரி புகார்.. என்னாச்சு
வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்திற்கு எதிராக மிகப் பெரிய வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இதில் மைக்ரோசாப்ட் தலைமை சிஇஓ சத்யா நாதெல்லா சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
மற்ற துறைகளைப் போல இல்லாமல் டெக் துறையைப் பொறுத்தவரை வெறும் சில நிறுவனங்களிடம் மட்டுமே ஒட்டுமொத்த கண்டிரோலும் இருக்கிறது. இதனால் பயனாளர்களின் தரவுகளும் அவர்களிடம் பக்காவாக இருக்கிறது. இதன் மூலம் விளம்பரம் தொடங்கிப் பல வழிகளில் அவர்கள் வருவாயைக் குவித்து வருகின்றனர்.

ஒரு சில நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ஒட்டுமொத்த டேட்டாவும் இருக்கக் கூடாது என்பதை ஒரு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக அமெரிக்காவில் பல்வேறு வழக்குகளும் தொடரப்பட்டு இருக்கிறது.
வழக்கு: அதன்படி நடைபெறும் வழக்கு ஒன்றில் மைக்ரோசாப்ட் தலைமை சிஇஓ சத்யா நாதெல்லா சேர்ச் எஞ்சின் துறையில் கூகுளின் ஆதிக்கம் மிக மோசமாக இருப்பதாகவும் இதனால் போட்டி நிறுவனங்களால் வளரவே முடிவதில்லை என்றும் அவர் அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்தார். கூகுள் நிறுவனம் தனது ஆதிக்கத்தைத் தொடர ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சட்ட விரோதமாகப் பல பில்லியன் டாலர்களை தருவதாகத் தொடரப்பட்ட வழக்கில் சத்யா நாதெல்லா இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக சத்யா நாதெல்லா மேலும் கூறுகையில், "மைக்ரோசாப்ட் தனது பிங் செயலி மூலம் 2009ஆம் ஆண்டு முதல் கூகுளுக்கு எதிராகச் சந்தை உருவாக்க முயல்கிறது. இருப்பினும், அவர்கள் ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் செய்துள்ள ஏற்பாடுகளால் இது எங்களால் முடியவே இல்லை. கூகுள் பிரபலமாக உள்ளதால் இப்படி நடப்பதாக நீங்கள் கூறலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை இது ஆதிக்கம் செலுத்துவது போலவே இருக்கிறது" என்றார்.
மைக்ரோசாப்ட்: கடந்த 20 ஆண்டுகளில் எந்தவொரு டெக் நிறுவனத்திற்கு எதிராகவும் இவ்வளவு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதே இல்லை. 20 ஆண்டுகளுக்கு முன்பு, மைக்ரோசாப்ட் நிறுவனம் இதேபோல விண்டோஸ் தொழில்நுட்பம் மூலம் கணினிகளில் ஆதிக்கம் செலுத்துவதாக வழக்கு தொடரப்பட்டது. இப்போது கூகுளுக்கு எதிராக வழக்கு நடக்கும் நிலையில், அதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனமே ஒரு சாட்சியாக வந்துள்ளது.
மேலும், உலகின் டாப் சேர்ச் எஞ்சினாக இருப்பதன் மூலம் கூகுள் பல்வேறு தரவுகளைச் சேகரித்துக் கொள்வதாக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்திற்கும் நாதெல்லா பரந்த ஆதரவு அளித்தார். இதன் மூலம் விளம்பரதாரர்கள் மற்றும் பயனாளர்களுக்குக் கூகுள் சக்திவாய்ந்த கருவியாக மாறிவிட்டதாகவும் கூகுளை எதிர்த்து தொழில் செய்யவே முடியாது என்ற நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சரமாரி புகார்: இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "பல சேர்ச் எஞ்சின்கள் இருப்பதே பயனாளர்களுக்குச் சிறந்ததாக இருக்கும். இதன் காரணமாகவே நாங்கள் ஐபோன்களில் டிபால்ட் சேர்ச் எஞ்சினாக இருக்க ஆப்பிளுக்குப் பணம் தரவும் ரெடியாக இருந்தோம். இப்படி டிபால்ட் சேர்ச் எஞ்சினாக இருப்பது மட்டுமே சந்தையைப் பிடிக்க ஒரே தீர்வு. ஐபோன் சஃபாரியில் எங்களது பிங் டிபால்ட் பிரவுசராக இருந்தால் அது கேம் சேஞ்சராக இருக்கும்.
ஆனால் ஆப்பிள் நிறுவனம் இதை ஒப்புக் கொள்ளாமல்.. தொடர்ந்து கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், கூகுள் நிறுவனம் இதில் பொய்யான கருத்துகளை முன்வைத்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம் மறுப்பதால் இதில் எங்களால் வளர முடியவில்லை" என்று அவர் தெரிவித்தார். நிலைமை இப்படி இருந்தாலும், பிங் செயலியில் தொடர்ந்து முதலீடு செய்வதாகவும் மார்கெட் மாறும்போது நிச்சயம் அதை பயன்படுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஏஐ வந்தாலும் முடியாது: சாட் ஜிபிடி வருகையால் கூகுளின் ஆதிக்கம் முடிவுக்கு வரும் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்தார். ஏஐ கருவிகளால் ஆரம்பத்தில் நல்ல நம்பிக்கையைக் கொடுத்தாலும் இதன் மூலம் கூகுள் ஆதிக்கம் முடிவுக்கு வரும் எனச் சொல்ல முடியாது என அவர் தெரிவித்தார். இந்தாண்டு தொடக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பிங் தளத்தில் சாட் ஜிபிடியை இணைத்தது. இருப்பினும், அதன் பிறகும் அதன் சந்தையைப் பெரியளவில் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications