பாகிஸ்தானின் மோசமான வரலாறு.. இதுவரை யாருமே செய்ததில்லை.. இப்போது இம்ரான் கானால் முடியுமா? பின்னணி
இஸ்லாமாபாத்: கடந்த 75 ஆண்டுக்கால பாக். ஜனநாயகத்தில் இதுவரை எந்தவொரு பிரதமரும் முழு ஆட்சிக் காலத்தை நிறைவு செய்ததில்லை.
Recommended Video
பாகிஸ்தானில் கடுமையான அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, அவரது கூட்டணியைச் சேர்ந்த பலருமே திரும்பியுள்ளதால் பெரும் குழப்பமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும் பாக். நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தின் மீது விரைவில் வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான்
பாக். நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை இம்ரான் கான் அரசால் சமாளிக்க முடியவில்லை. இதனால் பாக். ராணுவம் தொடங்கி அங்குள்ள பல கூட்டணிக் கட்சிகளும் இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பிவிட்டனர். இன்னும் சில நாட்களில் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இம்ரான் கான் அரசுக்கு எதிராகத் திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இம்ரான் கான்
இதற்கிடையே நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாகவே இம்ரான் கான் பதவி விலகலாம் எனச் சொல்லப்பட்டது. இருப்பினும், நேற்று பாக். மக்களிடையே உரையாற்றி இம்ரான் கான் ராஜினாமா செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மறுத்தார். மேலும், தனது ஆட்சியைக் கவிழ்க்க அந்நிய சக்திகள் சதி செய்வதாகவும் இம்ரான் கான் சாடியிருந்தார். இது பாக். அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் பாக். நாட்டில் இதுவரை எந்தவொரு பிரதமரும் தனது முழு பதவிக் காலத்தை முடித்தது இல்லை.

பாக். வரலாறு
இம்ரான் கான் ராஜினாமா செய்தாலோ அல்லது அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெற்றாலோ, அந்தப் பட்டியலில் இம்ரான் கானும் சேர்ந்துவிடுவார். 1947ஆம் ஆண்டு சுதந்திரமடைந்த பாகிஸ்தானில் குழப்பமான அரசியல் சூழலே நிலவி வந்துள்ளது. இதுவரை அங்கு 4 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டுள்ளது. 1950களின் மத்தியில் பாக். அதிபர் இஸ்கந்தர் மிர்சா பாக். அரசியலமைப்பை ரத்து செய்தார். இதையடுத்து 1958ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் ராணுவச் சட்டம் திணிக்கப்பட்டது.

ராணுவ ஆட்சி
இதையடுத்து அங்கு சுமார் 13 ஆண்டுகள் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதையடுத்து சுல்பிகர் அலி பூட்டோ பாகிஸ்தானின் அதிபரானார். 1973 ஆம் ஆண்டு சிறப்பு ஏற்பாட்டின் கீழ் அவர் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்து பாகிஸ்தானின் பிரதமரானார். அதைத் தொடர்ந்து, பூட்டோ 1977இல் தேர்தலில் வெற்றி பெற்றார். இருப்பினும், அதே ஆண்டு பூட்டோ ஆட்சியை ராணுவ ஜெனரல் ஜியா-உல்-ஹக்கால் கவிழ்த்தார். ஜியா-உல்-ஹக்காலின் ராணுவ ஆட்சி சுமார் 11 ஆண்டுகள் நீடித்தது.

பெனாசிர் பூட்டோ
அப்போது 1988இல் ஏற்பட்ட விமான விபத்தில் ஜெனரல் ஜியா-உல்-ஹக் உயிரிழந்தார். இதையடுத்து சுல்பிகர் அலி பூட்டோவின் மகள் பெனாசிர் பாகிஸ்தானின் பிரதமரானார். இருப்பினும், அவரது ஆட்சி வெறும் மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாக். அதிபர் சட்டமன்றத்தைக் கலைக்க உத்தரவிட்டார். இதையடுத்து 1990இல் அவர் ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. அவருக்குப் பதிலாக பாக். அரசில் அதிகரிக்கும் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்து இருந்த நவாஸ் ஷெரீப் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

2ஆவது முறை
ஊழல் ஒழிப்பு, பாகிஸ்தானின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றை அவர் முன்னெடுத்தார். இருப்பினும், அவரும் பாக். ராணுவத்தின் அழுத்தம் காரணமாக 1993இல் ராஜினாமா செய்தார் அதைத் தொடர்ந்து 1993ஆம் ஆண்டு நடைபெற்ற பாக். தேர்தலில் பெனாசிர் பூட்டோ வெல்ல முடியவில்லை என்றாலும் கூட அவரது கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், அவரது ஆட்சியில் ஊழல், மத வன்முறை மற்றும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்தன. இதனால் நவம்பர் 5, 1996இல் பாக். அதிபர் ஃபரூக் லெகாரி தேசிய சட்டமன்றத்தைக் கலைத்தார். இதனால் பூட்டோ மீண்டும் பிரதமர் பதவியை இழந்தார்.

அவசரநிலை
அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1997 தேர்தலில் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் வெற்றி பெற்றது. ஆனால் சில மாதங்களில், அதாவது அக்டோபர் 1999இல், பாக். ஜெனரல் பர்வேஸ் முஷாரப் நாட்டில் அவசரநிலையைப் பிரகடனம் செய்தார். பர்வேஸ் முஷாரப் ஆட்சியின் கீழ் மொத்தம் மூன்று பிரதமர்கள் - மிர் ஜஃபருல்லா கான் ஜமாலி, சவுத்ரி ஷுஜாத் மற்றும் ஷௌகத் அஜீஸ் பணியாற்றினர்.

யூசுப் ரசா கிலானி
2008 பொதுத் தேர்தலில், பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) பெரும்பான்மையைப் பெற்றது. இதையடுத்து யூசுப் ரசா கிலானி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த சில ஆண்டுகளுக்கு பாக். நாட்டில் சுமுகமான ஆட்சியே நடைபெற்று வந்தது. இருப்பினும், 2012இல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் கிலானி தண்டிக்கப்பட்டார். இதையடுத்து அவர் பதவி விலகினார். அவரது மீதி பதவிக் காலத்தை ராஜா பெர்வைஸ் அஷ்ரஃப் நிறைவு செய்தார்.

இம்ரான் கான்
2013இல் நவாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமரானார். ஆனால் பனாமா ஆவணங்கள் வழக்கு காரணமாக அவரது பதவிக் காலம் குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் அவர் 2017இல் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து மீதமுள்ள பதவிக்காலத்தில் ஷாஹித் ககான் அப்பாசி பாக். பிரதமராக இருந்தார். அதன் பின்னர் கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இம்ரான் கான் பெரியளவில் வென்று பாகிஸ்தானின் பிரதமரானார்.

அடுத்து என்ன
முதலில் அவருக்குப் பாக்கிஸ்தான் ராணுவத்தின் ஆதரவு இருந்ததாகவே கூறப்பட்டது. இருப்பினும், அவரது ஆட்சியும் ஊழல் குற்றச்சாட்டுகளால் நிரம்பியே இருந்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் அவரை பதவி நீக்கம் செய்ய நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன, பாக். ராணுவமும் இம்ரான் கானுக்கு எதிராக திரும்பி உள்ளதால், இந்த பெரிய பட்டியலில் இம்ரான் கானும் சேர்ந்து கொள்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications