பாத்ரூமில் கூட தண்ணீர் இல்லை.. கராச்சி விமான நிலையத்தின் பரிதாப நிலை.. விளாசிய பாகிஸ்தான் நடிகை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நம் நாடு நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தான் தனது எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் என்று நம் நாடு உறுதியாக தெரிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானின் 22 கோடி மக்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் தான் பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் இல்லை என்று பிரபல நடிகை ஹினா கவாஜா பயாத் வீடியோ வெளியிட்டு கடும் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
பாகிஸ்தானின் முக்கிய நீர் ஆதாரமாக சிந்து நதிநீர் உள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி 26 பேரை கொன்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நம் நாடு நிறுத்தி வைத்தது.

இதன்மூலம் பாகிஸ்தான் கடும் வறட்சியை எதிர்கெள்ள உள்ளது. மக்களின் குடிநீர், விவசாயத்துக்கு போதிய தண்ணீர் கிடைக்காத நிலை உருவாக உள்ளது. சிந்து நதிநீரை நம்பி தான் பாகிஸ்தானின் 22 கோடி மக்கள் உள்ளனர்.
தற்போது நம் நாடு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்திருப்பதன் மூலம் ஏறக்குறைய மொத்த பாகிஸ்தான் மக்களும் பாதிக்கப்பட உள்ளனர். இதனால் தான் சிந்து நதி நீரை விடுவிக்க வேண்டும் என்று இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சி வருகிறது. இதற்கிடையே தான் கராச்சி விமான நிலையத்தில் போதிய தண்ணீர் வசதி இன்றி பயணிகள் சிரமப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கராச்சி விமான நிலையத்தில் இருந்து அந்த நாட்டின் நடிகை ஹினா கவாஜா பயாத் வீடியோ வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி வெளியிட்ட வீடியோவில் நடிகை ஹினா கவாஜா பயாத் பேசியதாவது: நம் நாட்டை பற்றி பெருமையாக நினைக்ககூடிய இந்த தருணத்தில் விமான நிலையத்தில் தண்ணீர் கூட இல்லை. மக்கள் நமாஸ் செய்ய தண்ணீர் இல்லை. குழந்தைகள் கழிவறையை பயன்படுத்த தண்ணீர் இல்லை. இது வெட்கக்கேடானது. எல்லோரும் மெகா புராஜெக்ட், வளர்ச்சி திட்டங்கள் பற்றி பேசுகிறோம். ஆனால் அடிப்படை வசதியை யார் செய்து கொடுப்பது?. நமது விமான நிலையங்கள், அரசு நிறுவனங்கள் சரிவை சந்தித்து கொண்டுள்ளன. இதற்கு யாரும் பொறுப்பேற்க விரும்பவில்லை.
இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‛‛மோசமான சேவை, மோசமான பராமரிப்பு, நிர்வாகசீர்த்திருத்தம் உள்ளிட்டவற்றை எப்படி ஒரு நாடாக நாம் ஏற்றுக்கொள்ள தொடங்கினோம்? எப்போதும் தவறுகளை நியாயப்படுத்தவும், சாதாரண குடிமக்களின் அன்றாட அடிப்படை தேவைகளை விட்டுவிட்டு பிற பயனற்ற முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது தான் காரணம். கொண்டாட்டங்களை அறிவிப்பதற்கு முன்பு நாம் நமக்கான விஷயங்களை சரிசெய்ய வேண்டிய நேரம் இது'' என்று தலைப்பிட்டு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கு கிழக்கு பகுதி ஆறுகள் (ரவி, பியாஸ், சட்லெஜ் - 30% நீர்), பாகிஸ்தானுக்கு மேற்கு பகுதி ஆறுகள் (சிந்து, ஜீலம், செனாப் - 70% நீர்) ஒதுக்கப்பட்டன. இதனால் தான் பாகிஸ்தான் மக்கள் அதிகமாக பயனடைந்தனர். சிந்து நதி நீர் மூலம் கராச்சி நகரும் பயன்பெற்று வருகிறது.
அதாவது பாகிஸ்தானில் லாகூர், முல்தான், கராச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு ஓடும் ஆறுகளுக்கு சிந்து நதிநீரில் இருந்து தான் தண்ணீர் செல்கிறது. சிந்து நதிநீர் செல்லாத நிலையில் கராச்சியில் உள்ள ஆறுகளுக்கு தண்ணீர் என்பது கிடைக்காது. இதனால் வரும் காலத்தில் சிந்து நதி நீரால் கராச்சியும் பெரிதும் பாதிக்கப்பட உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications