நிலநடுக்கத்தில் இந்தியருக்கு என்னாச்சு? துருக்கியிலிருந்து திக்திக் தகவல்.. பரிதவிக்கும் குடும்பம்
துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், இந்தியர் ஒருவர் மாயாமாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
அன்காரா: துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 ஆம் தேதி ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 11,000 ஐ தாண்டி இருக்கும் நிலையில் அங்கு வசித்து வந்த இந்தியர் ஒருவர் மாயமாகி இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் கிடைத்து உள்ளது. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் வசித்த இந்தியர்கள் நிலை குறித்து வெளியுறவுத் துறை விளக்கம் கொடுத்து உள்ளது.
துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலை ஏற்படத் தொடங்கிய நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து வந்தன. கட்டிட இடிபாடுகளில் சிக்கிய இதுவரை 11,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து உள்ளன.
தொடர் நில அதிர்வுகளுக்கு மத்தியில் மீட்புப் படையினர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய குழந்தைகள், பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்களை பன்னாட்டு உதவியுடன் துருக்கியில் மீட்கப்பட்டு வருகின்றனர்.

தொடர் நிலநடுக்கம்
கடந்த 6 ஆம் தேதி அதிகாலை துருக்கியின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் 7.8 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் துருக்கியிலும், அண்டை நாடான சிரியாவின் வடக்கு பகுதியிலும் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அடுத்து 7.5 என்ற ரிக்டர் அளவில் 2 வது நிலநடுக்கம் ஏற்பட்டதால் பாதிப்பு இன்னும் மோசமடைந்தது.

உருக்குலைந்த துருக்கி
3 வது நிலநடுக்கம் 6 என்ற ரிக்டர் அளவிலும் பதிவாகி அடுத்தடுத்து பேரழிவுகள் உருவாகின. இந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து பல முறை துருக்கியில் நில அதிர்வுகளும் ஏற்பட்டு உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன. நிலநடுக்கத்தால் சேதமடைந்த கட்டிடங்கள் அடுத்தடுத்து ஏற்பட்ட அதிர்வுகளின் காரணமாக இடிந்து விழுந்தன.

11,000 க்கும் அதிகமான உயிரிழப்பு
ஜோர்டான் மற்றும் லெபனான் ஆகிய அண்டை நாடுகளிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. துருக்கி மற்றும் சிரியாவில் கட்டிடங்கள் இடிந்தும் நகரங்கள் உருக்குலைந்த நிலையிலும் காணப்படுகின்றன. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 11,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் 8,000 பேர் உயிரிழப்பு
உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட 11 ஆயிரம் பேரில் துருக்கியை சேர்ந்தவர்கள் 8,574 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் சிரியாவில் இதுவரை 2,530 பேர் நிலநடுக்கத்தால் உயிரிழந்து உள்ளதாக பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. துருக்கி அதிபர் எர்டோகான் நேரில் சென்று பாதிப்புகளை பார்வையிட்டு வருகிறார்.

தகர்ந்த கட்டிடங்கள்
மீட்புப் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் நேரம் செல்ல செல்ல பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலநடுக்கத்தில் 11,342 கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாக துருக்கி பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. 5,775 கட்டிடங்கள் இதில் இடிந்தது உறுதிபடுத்தப்பட்டு உள்ளது. தெற்கு துருக்கியில் 650 மைல் தூரம் வரை நிலநடுக்கத்தின் பாதிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியரை காணவில்லை
இந்த நிலையில் துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் தங்கி இருந்த இந்தியர் மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் அவர் பணிபுரிந்து வந்த நிலையில், பணி நிமித்தமாக அவர் துருக்கி சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவரது குடும்பத்தோடும், நிறுவனத்துடனும் தொடர்பில் இருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறி உள்ளது. அதேபோல் தொலைவில் உள்ள பகுதிகளில் வசிக்கும் 10 இந்தியர்களும் நகர முடியாமல் முடங்கி இருப்பதாக வெளியுறவுத்துறை தெரிவித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications