அடி வாங்கிய பிறகும் அடங்காத பாகிஸ்தான்! இந்தியாவை முழு பலத்தோடு காலி செய்துவிடுமாம்.. திமிர் பேச்சு
இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வரக் கெஞ்சியது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இப்போது இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் சில சர்ச்சை கருத்துகளை பாகிஸ்தான் கூறியுள்ளது. எதிர்காலத்தில் மோதல் ஏற்பட்டால் இந்தியா மோசமான விளைவுகளைச் சந்திக்கும் என்பது போல பாகிஸ்தான் கூறியுள்ளது.
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்தே இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் தொடர்ந்து வந்தது. அதன் பிறகே ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இருந்தது. எல்லாம் முடிந்து இப்போது தான் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் இல்லாமல் இருக்கிறது. இதற்கிடையே குஜராத் அருகே பாகிஸ்தான் தனது எல்லையில் ராணுவ உட்கட்டமைப்பை விரிவுபடுத்துவதாகத் தகவல் வெளியானது.

இந்தியா
இந்தச் சூழலில் தான் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் குஜராத் மாநிலம் புஜ் நகரில் உள்ள ராணுவத் தளத்தில் சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அங்கிருந்த ராணுவ வீரர்களுடன் உரையாடினார். தொடர்ந்து அங்கிருந்தபடியே அவர் பாகிஸ்தானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். சின் க்ரீக் பகுதியில் பாகிஸ்தான் எந்த விதமான அத்துமீறலில் ஈடுபட்டாலும், வரலாற்றையே மாற்றக்கூடிய ஒரு தீர்க்கமான பதிலடியை இந்தியா வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய இந்தப் பகுதியில் அண்டை நாடான பாகிஸ்தான் தனது ராணுவ உள்கட்டமைப்பை விரிவுபடுத்தி வருவதாகத் தகவல் வெளியான நிலையில், ராஜ்நாத் சிங் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார். ஏற்கனவே இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் அமர் ப்ரீத் சிங், ராணுவத் தளபதி உபேந்திர திவேதி ஆகியோர் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில், ராஜ்நாத் சிங்கும் எச்சரித்தார்.
பாகிஸ்தான்
இதற்கிடையே பாகிஸ்தான் இதற்கெல்லாம் பதிலடி கொடுப்பதாக நினைத்து சில கருத்துகளைக் கூறியுள்ளது. தனது ராணுவத்தின் மூலம் பாகிஸ்தான் மீண்டும் அச்சுறுத்தல்களை விடுக்கத் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் மோதல் ஏற்பட்டால், இந்தியாவுக்குப் பேரழிவை ஏற்படும் என்று பாகிஸ்தான் ராணுவம் எச்சரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) நேற்று சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், எந்தச் சூழ்நிலையிலும் தயக்கமின்றிப் பதிலடி கொடுப்போம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்திய ராணுவத்தின் கருத்துகளைப் பொறுப்பற்றது எனக் குறிப்பிட்ட ஐஎஸ்பிஆர், ஆக்கிரமிப்புகள் குறித்து பொய்யான பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிகள் நடப்பதாகவும் இது தெற்காசியாவில் அமைதியைச் சீர்குலைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
பதிலடி இருக்குமாம்
எதிர்காலத்தில் மோதல் அல்லது சண்டை ஏற்பட்டால், பாகிஸ்தான் பின்வாங்காது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒருவேளை அப்படி ஒரு சூழ்நிலை உருவானால், முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தெரிவித்தது. இத்தகைய நிலைமை பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது..
ஆபரேஷன் சிந்தூர்
ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் தீவிரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. இதில் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பாகிஸ்தான் தாக்குதலை ஆரம்பித்தது. இந்தியா அதற்குப் பதிலடி கொடுக்கவே நிலைமை மோசமானது. அதன் பிறகே இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்த தூதுவிட்டது.












Click it and Unblock the Notifications