கிளம்பிய பூதம்.. ரஷ்யாவில் வெடித்த மோதல்! முதுகில் குத்திய வாக்னர் குழு! மக்களிடம் புதின் அவசர உரை
மாஸ்கோ: உக்ரைன் மீது போர் நடந்து வரும் நிலையில் வாக்னர் குழுவினர் ரஷ்யாவில் விளாடிமிர் புதின் அரசின் ராணுவ தலைமைக்கு எதிராகவும் புரட்சியை தொடங்கி உள்ளனர். முக்கிய ராணுவ தலைமையகத்தை ரஷ்யாவின் வாக்னர் குழு கைப்பற்றிய நிலையில் விளாடிமிர் புதின் அவசரமாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வாக்னர் குழுவை துரோகி என விமர்சனம் செய்துள்ளதோடு, நாட்டில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் நடவடிக்கையை துவங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இன்னும் போர் முடிவடையவில்லை. இந்த போர் நடவடிக்கையால் ரஷ்யா பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. அமெரிக்க, பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

இதற்கிடையே தான் தற்போது ரஷ்யாவில் உள்நாட்டு போர் துவங்கும் வகையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது ரஷ்யாவை தலைமையிடமாக கொண்டு வாக்னர் குழு என்ற தனியார் ராணுவம் செயல்பட்டு வருகிறது. இதற்கு அதிபர் விளாமிர் புதின் ஆதரவு கொடுத்து வந்தார்.
அதேவேளையில் எதிரிகளுக்கு எதிராக வாக்னர் குழுவை பயன்படுத்துவதை புதின் வழக்கமாக கொண்டிருந்தார். இந்த படையில் இருப்பவர்கள் ஆயுதம் ஏந்தி போர் நடவடிக்கையில் ஈடுபடும் திறன் பெற்றவர்கள். மேலும் இவர்கள் ரஷ்யா மட்டுமின்றி பிற நாடுகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் போர் நடவடிக்கையில் உதவி புரிவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் கூலி படை எனவும் வாக்னர் குழுவுக்கு பெயர் உண்டு. உக்ரைன் போரிலும் ரஷ்யாவுக்கு பெரிய அளவில் உதவினர்.
மேலும் பிரிட்டன், அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் வாக்னர் குழுவை எதிர்த்தாலும் கூட விளாடிமிர் புதின் தொடர்ந்து ஆதரவு வழங்கி வந்தார். இதற்கிடையே சமீபகாலமாக பிரச்சனை ஏற்பட்டது. உக்ரைன் போர் வேளையில் ரஷ்யாவின் ராணுவத்துக்கும், வாக்னர் குழுவுக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. வாக்னர் குழுவுக்கு தேவையான ஆயுதங்களை ராணுவம் வழங்கவில்லை என அந்த குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஸ் தொடர்ந்து குற்றம்சாட்டினார். மேலும் வாக்னர் குழுவை ராணுவம் முடக்குவதாக அவர் பகிரங்கமாக தெரிவித்தார்.
இந்நிலையில் தான் ரஷ்யாவின் ராணுவ தலைமையை கவிழ்ப்பதாக அவர் உறுதியேற்று ரஷ்ய அரசுக்கு எதிராக வாக்னர் குழு செயல்பட தொடங்கி உள்ளது. ரஷ்யாவின் தென்பகுதியான ரோஸ்டோவ் பகுதிக்குள் நுழைந்த வாக்னர் குழு அங்குள்ள ராணுவ கட்டுப்பாட்டு மையத்தை கைப்பற்றி உள்ளது. ஒருகாலத்தில் விளாடிமிர் புதினுக்கு மிகவும் நெருக்கமான நபராக அறியப்பட்ட வாக்னர் குழுவின் தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஸ் தற்போது அவருக்கு எதிராக உருவெடுத்துள்ளார்.
இந்த வாக்னர் குழு ரஷ்யாவின் ரோஸ்டோவ் -ஆன்-டானில் உள்ள ராணுவ தலைமையகத்தை கைப்பற்றியதோடு மட்டுமல்லாம் 3 ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பிற நகரங்களை கைப்பற்றும முனைப்பில் வாக்னர் குழு செயல்பட்டு வருகிறது. இதனால் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ உள்பட பல முக்கிய நகரங்களில் பாதுகாப்பு என்பது அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் தான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். இந்த வேளையில் அவர் வாக்னர் குழுவை கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும் முதுகில் குத்தும் துரோகி என சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பாக விளாடிமிர் புதின் பேசிய உரையில் கூறியதாவது:
நம் நாட்டின் ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தும் அனைவரும் துரோகிகள். இத்தகைய நடவடிக்கை என்பது முதுகில் குத்துவது போன்ற செயலாகும். நாட்டுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது என்பது தேசத்துரோக செயலாகும். வான்கர் குழு இத்தகைய செயல்பாட்டை நிறுத்த வேண்டும். வாக்னர் குழுவின் தற்போதைய செயல்பாடு என்பது ரஷ்யாவின் தெற்கில் முக்கிய பகுதியில் ராணுவ செயல்பாட்டை தடுக்கிறது.
நான் ரஷ்யாவை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி ப்ரிகோஸ் தனது தனிப்பட்ட லட்சியத்துக்காக ரஷ்யாவை காட்டி கொடுத்தார். தற்போது ராணுவத்துக்கு எதிராக கலம் செய்பவர்கள் தங்களின் நண்பர்களுக்கு எதிராகவே ஆயுதம் ஏந்தியவர்கள் தான். இவர்கள் கடும் பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்'' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், ‛‛வாக்னர் குழுவினர் ஏமாற்றப்பட்டு குற்றம் செய்ய தூண்டப்படுகின்றனர். அவர்களக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம். உதவியை அவர்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலம் தொடர்பு கொண்டு பெறலாம். வாக்னர் குழுவுக்கு நிச்சயம் பாதுகாப்பு வழங்கப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications