அல்பேனியா: 'கிறிஸ்துமஸ் தாத்தா' உடையில் வந்து நகைகளைத் திருடிய கும்பல்
டிரானா: அல்பேனியாவில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் நகைக்கடைகளில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்து திருடிச் சென்ற கயவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
தற்போதெல்லாம் திருடர்கள் விதவிதமாக யோசிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக மக்களை ஏமாற்ற அவர்கள் போடும் வேடம் எண்ணிலடங்காதது. சமீபத்தில் தமிழகத்திலும் சிலர் பக்தி வேடமணிந்தும், போலீசார் உடையில் வந்தும் திருடிச் சென்ற சம்பவங்களைக் கேள்விப் பட்டிருப்போம். அதேபோல், கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் வந்த நால்வர் கும்பல் ஒன்று அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் இருந்த வர்த்தக வளாகத்தில் கொள்ளையடித்து அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிறிஸ்துமஸ் என்றாலே இயேசுவின் புகழைப் பாடும் குழுவினருடன் சாண்டா கிளாஸ் உடையணிந்து வரும் நபர் அனைவருக்கும் பரிசுகளையும், இனிப்புகளையும் வழங்குவார். அதனால், கிறிஸ்துமஸ் தாத்தாவின் வருகை என்பது வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் மகிழ்ச்சியாக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது.
ஆனால், கடந்த செவ்வாய்க்கிழமை கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் தானியங்கி ஆயுதங்களுடன் வந்த நான்கு திருடர்களும் அல்பேனியாவின் டிஇஜி என்று அழைக்கப்படும் வர்த்தக வளாகத்தினுள் நுழைந்துள்ளனர். துப்பாக்கிமுனையில் கடை உரிமையாளரை அச்சுறுத்திய அவர்கள் அங்கிருந்த விலையுயர்ந்த பொருட்களையும், நகைகளையும் தங்களின் சாக்குப்பைகளில் நிரப்பிக்கொண்டு தப்பித்துள்ளனர். அவர்கள் தப்பிச்சென்ற கார் 2 கி.மீ தொலைவில் கைவிடப்பட்டிருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசாருக்கு வளாகத்தின் அருகே இருந்த குப்பைத் தொட்டிக்குள் இருந்து இரண்டு துப்பாக்கிகள் மட்டுமே கிடைத்துள்ளது. அவை திருடர்கள் பயன்படுத்திய ஆயுதங்களாக இருக்கக்கூடும் என அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் தகவல் தொடர்பாளரான ஃபுலோரியன் செரியானி சந்தேகம் தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக அந்நகருக்கு அருகில் உள்ள கொசோவோவின் தெற்குப் பகுதி நகரமான பிரிஸ்ரெனில் உள்ள நகைக்கடை ஒன்றில் சாண்டா வேடமணிந்திருந்த மூன்று திருடர்கள் நேற்று நுழைந்துள்ளனர். கடையிலிருந்த இரண்டு பேரைத் தாக்கிவிட்டு அங்கிருந்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்துக்கொண்டு அவர்கள் தப்பித்துவிட்டதாக டிரானாவின் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications