சிரியாவில் அரசுப்படைகள் தாக்குதல்.. குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 250 பேர் பலி
சிரியாவில் அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பெய்ரூட்: சிரியாவில் அரசுப்படைகள் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் 250 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சிரியாவில் 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையேயான உள்நாட்டுப்போர் தொடங்கியது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷிய படைகள் 2015-ம் ஆண்டில் இருந்து வான்தாக்குதல் நடத்தி வருகின்றன.
மற்றொரு புறம் சிரியா அதிபர் படைகள் ரசாயன ஆயுத தாக்குதல்கள் நடத்தி மக்களை கொன்று குவித்து வருகிறது. கிளர்ச்சியாளர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக அதிபர் படைகள் கூறுகிறது. ஆனாலும் அதில் சிக்கி பெருமளவு உயிரிழப்பது அப்பாவி பொது மக்களே என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

4 லட்சம் பேர் பலி
இந்தப் போரினால் இதுவரை அங்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளதாகவும், 76 லட்சம் பேர் இடம் பெயர்ந்து உள்ளதாகவும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

8வது ஆண்டில் போர்
8வது ஆண்டை தொடங்கவுள்ள சிரியா உள்நாட்டுப் போரில் மிகப் பயங்கரமான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. பல தரப்பில் இருந்தும் நடத்தப்படுகிற தாக்குதல்களில் அப்பாவி மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்படுகின்றனர்.

குழந்தைகள் அவதி
பல லட்சம் பேர் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்து உள்ளனர். குழந்தைகள் சரியான உணவு கிடைக்காமல் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகின்றனர் என்று ஐ.நா. சபை கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

அரசு படைகள் தாக்குதல்
இந்த நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் பிராந்தியத்தில் கிளர்ச்சியாளர்கள் வசம் கவுட்டா பகுதி இருந்து வருகிறது. 4 லட்சம் பேர் வசிக்கிற இந்த நகரை மீட்டு விட வேண்டும் என்று அதிபர் ஆதரவு படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

500 பேர் காயம்
கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 500க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

50 குழந்தைகள் கொலை
கடந்த மூன்று நாட்களில் மட்டும் இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட 250 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என இங்கிலாந்தை தலைமையகமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

போர் விமானங்கள் தாக்குதல்
தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதாலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாலும் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
கிழக்கு கவுட்டா பகுதியில் அமைந்து உள்ள சக்பா, ஜிஸ்ரீன் மற்றும் பிற நகரங்களில் போர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தி உள்ளன. பீரங்கி தாக்குதலும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

உலக நாடுகள் அதிர்ச்சி
சிரியாவில் அரசு படைகள் குழந்தைகளையும் அப்பாவி பொதுமக்களையும் கொன்று குவித்து வருவது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சனையில் ஐநா அவை தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications