தாலிபான் முன்னேற்றம்.. ஆப்கான் மஸார் இ ஷெரிப் தூதரகத்தில் இருந்து.. இந்திய அதிகாரிகள் வெளியேற்றம்!
காபுல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் ஆப்கான் படைகளுக்கும் இடையில் மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானின் மஸார் இ ஷெரிப் துணை தூதரகத்தில் உள்ள இந்திய அதிகாரிகளை இன்று மாலையே வெளியேற்றும் முடிவில் இந்திய வெளியுறவுத்துறை உள்ளது. இதற்காக சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக வெற்றிபெற்று வருகிறது. ஆப்கான் படைகளை வீழ்த்தி தினமும் பல்வேறு முக்கிய மாவட்டங்களை, நகரங்களை தாலிபான்கள் கைப்பற்றி வருகிறது. தாலிபான்கள் கணக்குப்படி இதுவரை 85 சதவிகிதத்திற்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் பகுதிகளை தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது.
தாலிபான்கள் முக்கியமாக ஈரான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இருக்கும் ஆப்கான் எல்லைகளையும் ஏற்கனவே கைப்பற்றிவிட்டது. ஆப்கான் அரசு படைகளும் வேகமாக தாலிபான்களிடம் சரண்டர் ஆகி வருகிறது.

எத்தனை இடங்கள்
ஆப்கானிஸ்தானில் 400 மாவட்டங்கள் உள்ள நிலையில் கிட்டத்தட்ட 295 மாவட்டங்களை தாலிபான் கைப்பற்றிவிட்டதாக அறிவித்துள்ளது. அங்கு கடந்த 20 வருடமாக தாலிபான் படைக்கும் அமெரிக்க ராணுவத்திற்கும் போர் நடந்து வந்தது. இந்த நிலையில், கடந்த வருடம் ஆப்கானிஸ்தானில் போரை நிறுத்துவதாக அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டது.

வெளியேற்றம்
தாலிபான் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய அமெரிக்க படைகள் ஒப்புக்கொண்டது. செப்டம்பர் 11, 2021க்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே கொஞ்சம் கொஞ்சமாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியது.

பிடன் அறிவிப்பு
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் பிடன் முன்கூட்டியே அமெரிக்க படைகளை வாபஸ் வாங்கும் முடிவை எடுத்துள்ளார். திட்டமிடப்பட்ட செப்டம்பர் 11, 2021க்குள் முன்னதாக ஆகஸ்ட் 31ம் தேதியே மொத்தமாக அனைத்து அமெரிக்க படைகளும் வாபஸ் பெறப்படும் என்று அறிவித்துள்ளார். தற்போது பெயருக்கு ஒரு சில அமெரிக்க படைகள் மட்டுமே ஆப்கானிஸ்தானில் உள்ளது. இன்னும் 20 நாட்களில் அந்த படைகளும் மொத்தமாக வெளியேறிவிடும்.

மாகாண தலைநகர்
இந்த நிலையில்தான் தற்போது தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் மாகாண தலைநகரமான மஸார் இ ஷெரிப் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளது. இது ஆப்கானிஸ்தானின் முக்கியமான மாகாண தலைநகரங்களில் ஒன்றாகும். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இங்கு மோதல் தொடங்கிய நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக இங்கும் தாலிபான்கள் வென்று வருகிறது.விரைவில் மொத்தமாக இந்த பகுதியை தாலிபான் கைப்பற்றிவிடும்.

இந்திய துணை தூதரகம்
இங்கு இந்தியாவின் துணை தூதரகம் உள்ளது. இங்கு இருந்து இந்திய அதிகாரிகளை வெளியேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மஸார் இ ஷெரிப் துணை தூதரகத்தில் உள்ள அதிகாரிகளை இன்று மாலையே சிறப்பு விமானம் மூலம் வெளியேற்றும் முடிவில் இந்திய வெளியுறவுத்துறை உள்ளது. இந்த துணை தூதரகம் தொடர்ந்து செயல்படும். ஆப்கான் அதிகாரிகள் மூலம் இந்த துணை தூதரகம் தொடர்ந்து இயங்கும்.

பாதுகாப்பு
ஆனால் இங்கிருக்கும் இந்திய அதிகாரிகள் இன்றே பாதுகாப்பு கருதி வெளியேற்றப்படுவார்கள். முன்னதாக ஆப்கானிஸ்தானின் கந்தகார் துணை தூதரகத்தில் இருந்து இந்திய அதிகாரிகள் பலர் வெளியேற்றப்பட்டனர். கந்தகாரில் இன்னமும் தாலிபான் ஆப்கான் படைகளுக்கு இடையில் மோதல் நிலவி வருகிறது. கந்தகாரில் தாலிபான் படைகள் வேகமாக முன்னேறி வருகிறது.

வெளியேற்றம்
இதனால் அங்கிருந்து இந்திய அதிகாரிகள் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது மஸார் இ ஷெரிப் துணை தூதரகத்தில் இருந்தும் இந்திய அதிகாரிகள் வெளியேற உள்ளனர். இனி மீதம் இருப்பது காபூல் மட்டுமே. காபூல் வீழ்ந்தால் மொத்தமாக ஆப்கான் அரசும் வீழ்ந்து விடும். மஸார் இ ஷெரிப்பில் ஆப்கான் படைகளின் வீழ்ச்சி என்பது தாலிபான்களின் வெற்றியை ஏறத்தாழ உறுதி செய்துவிட்டதாக உலக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

வாய்ப்பு
வெறும் காபூலை மட்டும் வைத்துக்கொண்டு ஆப்கான் படைகள் ஆட்சி நடத்த முடியாது. இதனால் தாலிபான்களின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. விரைவில் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கானி அப்புறப்படுத்தப்பட அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். அதிகாரபூர்வமாக இந்த வருட இறுதிக்குள் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை அமைக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் உலக அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

தாலிபான்கள் வேடிக்கை
தற்போது சில மாவட்டங்களில் தாலிபான்களிடம் நேரடியாக ஆப்கான் படைகள் சரண் அடைந்து வருகிறது. தாலிபான்களை பார்த்த நொடியே ஆப்கான் படைகள் தானாக சென்று ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் சண்டை எதுவும் நடக்காமலே தாலிபான்கள் வெற்றிபெறும் நிலை ஏற்படுகிறது. ஆனால் வேறு சில இடங்களில், கந்தகார் போன்ற பகுதிகளில், தாலிபான்கள் வென்றாலும் தொடர்ந்து மீண்டும் முட்டி மோதி எப்படியாவது இழந்த பகுதிகளை மீட்கும் முயற்சிலும் ஆப்கான் படைகள் உள்ளன.

கட்டுமானம்
இதனால் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானில் ஏற்படுத்திய உள்கட்டமைப்பு வசதிகள் சிதையும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு வகையில் ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியாக, கடந்த 20 ஆண்டு வளர்ச்சியை பாதிக்கும் ஒன்றாக அமையும். இதன் ஆப்கான் படைகள் சண்டை போட வேண்டாம், சேதம் ஏற்படாமல் இருக்க தாலிபான் படைகளிடம் சரண் அடைந்துவிடுங்கள் விடுங்கள் என்று காரணமாக சில மாவட்ட கவர்னர்கள் கோரிக்கை வைப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. தாலிபான்களின் வேகமான வெற்றிக்கு அவர்களின் மூர்த்தனமும் முக்கிய காரணமாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications