செங்கல்பட்டுக்கு சூப்பர் செய்தி.. ஓமியம் நிறுவனத்தில் ரூ.400 கோடி முதலீட்டை கொத்தி தூக்கிய ஸ்டாலின்!
சான்பிரான்சிஸ்கோ: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாயில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையிலும், மாநிலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவரிசையில் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதலமைச்சர் அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்தப் பயணத்தின் போது, சான்பிரான்சிஸ்கோவில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதனையடுத்து ஆகஸ்ட் 30 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, நேற்று சான்பிரான்சிஸ்கோவில், ஓமியம் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இந்த டீல் கையெழுத்தானது.
ஓமியம் நிறுவனம், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, அளவிடக்கூடிய புரோட்டான் பரிமாற்ற சவ்வு எலக்ட்ரோலைசர் அமைப்புகளை வடிவமைத்து, உற்பத்தி செய்கிறது. ஓமியம் நிறுவனமானது அமெரிக்கா, மெக்ஸிகோ, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதும் உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் திட்டக் குழாய்களை அமைத்துள்ளது.
இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் ஓமியம் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிகழ்வில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலீட்டு ஊக்குவிப்பு துறை செயலாளர் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே. விஷ்ணு, ஓமியம் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் ஆன் பாலன்டைன், தலைமை தொழில்நுட்ப அலுவலர் சொக்கலிங்கம் கருப்பையா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், "ஓமியம் நிறுவனத்தின் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரூபாய் 400 கோடி முதலீட்டை பெற்றுள்ளோம். இதன் மூலம் 500 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் மற்றொரு வெற்றிகரமான நாள் தொடங்கி இருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications