பாகிஸ்தான் எல்லையில் வெடிக்கும் போர்? திடீரென குவிக்கப்படும் ராணுவம்.. உச்சக்கட்ட பதற்றம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஏற்கனவே உள்நாட்டில் பல்வேறு மோதல்களில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் இப்போது போர் வெடிக்கும் ஒரு சூழல் உருவாகி இருக்கிறது. இரு தரப்புமே எல்லையில் ராணுவ வீரர்கள் மற்றும் தளவாடங்களைக் குவித்து வருகின்றன. இதனால் ஒருவித பதற்றம் உருவாகியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே நிலைமை மோசமாகவே இருக்கிறது.. ஒரு பக்கம் அங்குப் பொருளாதாரம் மிக மோசமாக இருக்கிறது. பணவீக்கம் உச்சத்தில் இருக்கிறது. அதேபோல அரசியலிலும் குழப்பம் நிலவுகிறது. இதற்கிடையே பலுசிஸ்தானிலும் கலகம் வெடித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் ரொம்பவே மோசமான ஒரு நிலையில் தள்ளாடி வருகிறது.

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான்
இந்தச் சூழலில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே மோதல் வெடித்தது. பாகிஸ்தான் தாலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தானில் உள்ள பல்வேறு இடங்களிலும் தாக்குதலை நடத்துகிறது. இதற்குப் பின்னணியில் ஆப்கானிஸ்தான் தான் இருக்கிறது எனப் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டுகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இது தொடர்பாக காபூலில் தாக்குதலையும் நடத்தினார்கள். இதுவே மோதலுக்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்தது.
துராண்ட் லைனில் பதற்றம்
இரு தரப்பிற்கும் இடையே தற்காலிகமாக போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்த நிலையில், இப்போது மீண்டும் அங்கு மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. துராண்ட் லைன் (Durand Line) என்ற பகுதியில் தான் பதற்றமான சூழல் இருக்கிறது. இரு நாடுகளுமே தங்களது எல்லை பகுதிகளில் பீரங்கிகளைக் குவித்துள்ளன. மேலும், இரு நாடுகளுமே ராணுவ வீரர்கள், தளவாடங்களையும் அதிகளவில் குவிப்பதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதாவது எல்லையில் நிலைமை கையை மீறிச் செல்லும் சூழல் நிலவுகிறது.
சமன்-ஸ்பின் போல்டிக், அங்கூர் அட்டா, குர்ரம்-நங்கர்ஹார், தோர்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் வான்வழி கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் முழு வீச்சில் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுமே மோதலுக்குத் தயாராகி வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹை அலர்ட் நிலை
சமன்-ஸ்பின் போல்டிக் மற்றும் தோர்கம் போன்ற ரீதியாக முக்கியமான பகுதிகள் ஹை அலர்ட் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இரு நாட்டு அதிகாரிகளும் எமர்ஜென்சி நிலையைச் செயல்படுத்தி, கூடுதல் வீரர்களைக் குவித்து வருகிறார்கள். பொதுவாகப் போர் சூழல்களில் தான் எல்லையில் இதுபோல வீரர்களை குவிப்பார்கள். இதுவே அச்சம் அதிகரிக்கப் பிரதான காரணமாக இருக்கிறது.
சர்வதேச நாடுகளும் இந்த நிலையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே போர் வெடித்தால் அது சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உலக நாடுகளின் கவனம் இவர்கள் பக்கம் திரும்பியுள்ளது. இருப்பினும், இப்போது பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே தூதரக ரீதியாக சரியாக தகவல் தொடர்பு இல்லை. இதனால் இந்த பதற்றத்தை முடிவுக்குக் கொண்டு வர முடியாத ஒரு சூழலே நிலவி வருகிறது. மேலும், இரு தரப்பிற்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் என்ற ஒரு ஆபத்தான சூழலே இருக்கிறது.
"பாகிஸ்தானே இல்லாமல் போய்விடும்.." அலறவிட்ட ஆப்கானிஸ்தான்.. அச்சத்தில் ஷெபாஸ் அரசு!
சவுதி ஒப்பந்தம்
இதில் நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது சில மாதங்களுக்கு முன்பு தான் பாகிஸ்தான் சவுதி இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி எதாவது ஒரு நாடு பாகிஸ்தானைத் தாக்கினால்.. பாகிஸ்தானுக்கு ஆதரவாக சவுதி இறங்கும். இதனால் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதலில் அடுத்து என்ன நடக்கும் என்பதில் பதற்றம் அதிகரித்தே வருகிறது.












Click it and Unblock the Notifications