துயரம் துடைக்கும் 'ஆபரேஷன் தோஸ்த்'.. சிரியாவிற்கு உதவும் இந்தியா.. களமிறங்கிய 7வது விமானம்
6 விமானங்களை தொடர்ந்து 7வது விமானம் சிரியாவில் சுமார் 35 டன் மருந்து பொருட்களுடன் தரையிறங்கியுள்ளது.
டமாகஸ்: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ இந்தியா, 'ஆப்ரேஷன் தோஸ்த்'-ஐ செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆப்ரேஷனின் 7வது விமானம் நிவாரணம் மற்றும் மருந்து பொருட்களுடன் சிரியாவை அடைந்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை துருக்கியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 6 ஆயிரம் கட்டிடங்களை தரைமட்டமாக்கியது. இடிபாடுகளில் சிக்கிய உறவினர்களை மீட்க மீட்பு படையினரை எதிர்பார்த்திருந்த மக்களுக்கு முதல் 4 மணி நேரம் வரை எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தாங்களே இடிபாடுகளை அகற்ற தொடங்கினர். பின்னர்தான் விஷயம் வெளி உலகத்திற்கு தெரிய வந்தது. பின்பு இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்களது மீட்பு படையினரை துருக்கிக்கு அனுப்பி வைத்தது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் துருக்கியின் தென்கிழக்கு பகுதிகள் மட்டுமல்லாது சிரியாவையும் கடுமையாக பாதித்தது. இரு நாடுகளையும் சேர்த்து தற்போது வரை சுமார் 28 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்து கொட்டும் பனியில் நிர்கதியாக நின்றுக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்டவைகள் தேவைப்படுகின்றன.

'ஆப்ரேஷன் தோஸ்த்'
இதனையடுத்து இந்தியா 'ஆப்ரேஷன் தோஸ்த்'-ஐ தொடங்கியது. இதன் மூலம் பேரிடர் மீட்புப் படையினர், ராணுவத்தினர், மருத்துவர்கள் மற்றும் மருந்து பொருட்கள் துருக்கி மற்றும் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுவரை 6 விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. துருக்கி மற்றும் சிரியா சென்ற மீட்பு படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை முடிந்த அளவு பத்திரமாக மீட்டுள்ளனர். மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் அவ்வப்போது தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். இருப்பினும் விடா முயற்சியாக மீட்பு பணியை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

7வது விமானம்
6 விமானங்களை தொடர்ந்து 7வது விமானம் சிரியாவில் சுமார் 35 டன் மருந்து பொருட்களுடன் தரையிறங்கியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமான தளத்திலிருந்து புறப்பட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான C17 விமானம் நேற்று சிரியாவில் தரையிறங்கியுள்ளது. இதில் உள்ள 35 டன் மருந்து பொருட்களில் 23 டன் சிரியாவிலும், மீதமுள்ள மருந்து பொருட்கள் துருக்கியிலும் விநியோக்கிக்கப்படும். விமானம் தரையிறங்கியதை சிரியாவின் நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் துணை அமைச்சர் Moutaz Douaji உறுதி செய்துள்ளார். இது குறித்து டாமாகஸ் விமான நிலைய நிர்வாகம் பதிவிட்டுள்ள டிவீட்டில்,

என்னென்ன மருந்துகள்?
"இந்தியாவின் ஆப்ரேஷன் தோஸ்த்தின் 7வது விமானம் ஜெனரேட்டர்கள், சோலார் விளக்குகள், அவசரகால மருந்துகள் என 23 டன் உதவி பொருட்களுன் சிரியாவில் தரையிறங்கியுள்ளது. இதனை அமைச்சர் Moutaz Douaji பெற்றுக்கொண்டார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்தியாவின் வெளியுறவு செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பகிர்ந்திருக்கிறார். அதேபோல துருக்கிக்கு அனுப்பப்படும் உதவி பொருட்களில், போர்வைகள், குளுகோஸ் மீட்டர், ECG இயந்திரம், மயக்க மருந்துகள் போன்றவை இருக்கிறது. மேலும் உதவி தேவைப்படும் எனில் கூடுதல் உதவியை இந்தியா செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொய்வு
பல்வேறு நாடுகளும் இதுதேபோல உதவிகளை செய்து வந்தாலும் இன்னும் லட்சக்கணக்கான மக்களுக்கு போதுமான அளவு உதவி போதவில்லை உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையில் மீட்பு படையினர் மீது உள்ளூர் குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications