'எங்கள் ஆதரவு தாலிபான்களுக்கே..' ஆப்கனில் பெருங்கூட்டமாக திரண்ட மக்கள்.. ஆனால் கடைசியில் ட்விஸ்ட்
காபூல்: ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் நடைபெற்ற பேரணியில் 1000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய அணிவகுப்பும் நடத்தப்பட்டது.
ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சில வாரங்களிலேயே அந்நாட்டைத் தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றினர். 1996- 2001 வரை ஆப்கனை ஆண்ட தாலிபான்கள் இப்போது சுமார் 20 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் ஆப்கனை கைப்பற்றியுள்ளனர்.
முந்தை ஆட்சியைப் போல இல்லாமல் இந்த ஆட்சி அனைவரையும் உள்ளடக்கிய ஒரு ஆட்சியாக இருக்கும் என்றும் பெண்களுக்கு உரிமைகள் அளிக்கப்படும் என்றும் தாலிபான்கள் தெரிவித்தனர்.

மாபெரும் கூட்டம்
மேலும், பயங்கரவாதிகளுக்குக் கண்டிப்பாக ஆதரவு அளிக்கப்படமாட்டாது என்றும் தாலிபான்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தனர். இருப்பினும், இப்போது வரை தாலிபான்கள் சொன்னதைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. இதனால் சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகள் தாலிபான்களுடன் இணைந்து பணியாற்றுவதில் தயக்கம் காட்டி வருகின்றன. இந்தச் சூழலில் தாலிபான்களின் ஆட்சிக்கான ஆதரவை உணர்த்தும் வகையில் வடக்கு காபூலில் மாபெரும் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

பெண்கள் இல்லை
தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு இதுபோன்ற கூட்டம் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும். அதேநேரம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஆண்களும் சிறுவர்களுமே ஆவர். இந்தக் கூட்டத்தில் பெண்கள், சிறுமிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதன் மூலம் ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சிக்கு பெண்கள் ஆதரவு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இந்த கூட்டத்தில் ராணுவ உடையில் துப்பாக்கிகளுடன் வந்த தாலிபான் தலைவர்கள் மக்களிடையே பேசினர். தாலிபான் மூத்த தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், ராக்கெட் லான்சர்கள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய ராணுவ அணிவகுப்பும் இதில் நடைபெற்றது. மேலும், ஆட்டம் பாட்டத்துடனான கொண்டாட்டங்களும் இந்த கூட்டத்தில் நடைபெற்றது.

போராட்டத்தை ஒடுக்கும் தாலிபான்கள்
அதேநேரம் தாலிபான்களுக்கு எதிரான பெண்கள் போராட்டம் ஆப்கனில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆப்கனை தாலிபான்கள் கைபற்றிய நாளிலேயே பெண்கள் தங்கள் போராட்டத்தைத் தொடங்கிவிட்டனர். இப்படி தான் கடந்த வாரம் தலைநகர் காபூலில் நடைபெற்ற பெண்கள் போராட்டத்தின் போது, அங்கு வந்த தாலிபான்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். அதேபோல பெண்கள் போராட்டம் குறித்த செய்திகளைச் சேகரிக்கச் செல்லும் செய்தியாளர்கள் மீது தாலிபான்கள் கொடூரமான தாக்குதலை நடத்துவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெண் உரிமை
தாலிபான்கள் ஆட்சியில் பெண் உரிமை மறுக்கப்படுவது பெரும் பிரச்சினையாகவே உள்ளது. அங்குத் தாலிபான் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே புர்கா விலை பல மடங்கு உயர்ந்தது. பெண்களுக்கான உரிமை வழங்கப்படும் என்று தாலிபான்கள் தொடர்ந்து கூறி வந்தாலும் கூட, பெண்களுக்கு எதிரான உத்தரவுகளே தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஆண் பெண் இரு பாலர் சேர்ந்து படிக்கும் முறைக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆண்கள் துணையின்றி பெண்கள் வெளியே வரக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. இதுமட்டுமின்றி முன்கூட்டியே அனுமதி பெறாமல் நடைபெறும் போராட்டங்கள் அத்தனையும் சட்ட விரோதமானது என்றும் அதில் கலந்து கொள்பவர்களுக்கு கடும் தண்டை அளிக்கப்படும் என்றும் தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications