அதெல்லாம் முடியாது.. காசாவில் போர் தொடரும் என்கிறார் நெதன்யாகு! அப்போ ட்ரம்ப் சொன்னது என்ன ஆச்சு?
ஜெருசலேம்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான மத்தியஸ்தம் செய்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், போர் விரைவில் முடிவுக்கு வரும் என கூறி வருகிறார். ஆனாலும், மத்திய கிழக்கு பிராந்தியம் மீண்டும் பதற்றம் நிறைந்த சூழ்நிலையில் தான் உள்ளது. காசா பகுதியில் நடந்து வரும் மோதல் முடிவடையாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெளிவாக தெரிவித்துள்ளார்.
காசா பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடுமையான போரின் பின்னணியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மத்தியஸ்தமாக களமிறங்கி, தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார்.
அந்த ஒப்பந்தத்தின் கீழ், ஹமாஸ் அமைப்பு இதுவரை உயிருடன் இருந்த 20 பேரை பிணையிலிருந்து விடுவித்தது, அதே நேரத்தில் இஸ்ரேல் அரசு 135 பாலஸ்தீனியர்களின் உடல்களையும், 2,000 கைதிகளையும் விடுவித்தது.

டொனால்ட் டிரம்ப்
இது காசா மக்களுக்கு சிறு நிம்மதியளித்திருந்தாலும், முழுமையான அமைதி நிலைமையை உருவாக்கவில்லை. ஏனெனில் ஹமாஸ் மற்றும் சில ஆயுதப்படைகள் இடையே இன்னும் மோதல் நிலவி வருகிறது. அமெரிக்கா சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி, ஹமாஸ் அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்தும் வாய்ப்பு இருப்பதாக புலனாய்வில் தெரியவந்துள்ளது. அது நடந்தால், டிரம்ப் மத்தியஸ்தம் செய்த ஒப்பந்தம் முற்றிலும் உடைந்துவிடும் என்று அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது.
நெதன்யாகு
அதேவேளை, டிரம்ப் கடந்த வாரம் "காசா மக்களை கொல்வதை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் ஹமாஸ் மீது நேரடி ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்திருந்தார். இந்த சூழ்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் போர் தீயை கிளப்பும் வகையில் கடுமையான கருத்தை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "ஹமாஸ் அமைப்பு முழுமையாக ஆயுதம் இழக்கும் வரை காசா பகுதியில் போர் முடிவடையாது. இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்தின் நோக்கம் ஹமாஸ் அமைப்பிலிருந்து ஆயுதங்களை பறிப்பதே அந்த நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவு பெற்ற பிறகே போர் நிறுத்தம் நிரந்தரமாக அமலுக்கு வரும். காசாவை அமைதிக்குள் கொண்டுவரும் ஒரே வழி, ஹமாஸ் அமைப்பை ஆயுதமற்றதாக்குவதே" என தெரிவித்துள்ளார்.
காசா மோதல்
இந்த அறிவிப்பால், காசா பகுதியில் அமைதி நீடிக்குமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.ஏற்கனவே இஸ்ரேல் ராணுவம், "போர் நிறுத்தம் ஒரு தற்காலிக ஒப்பந்தம் மட்டுமே; பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும்" என்று தெரிவித்துள்ளது. இதனால் ஹமாஸ் அமைப்பு மீண்டும் ஆயுதச் செயல்பாடுகளுக்கு திரும்பும் அபாயம் இருப்பதாக சர்வதேச வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அதே நேரத்தில், ஐக்கிய நாடுகள் அமைப்பு, இரு தரப்பும் போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் உயிரைக் காப்பாற்றும் வகையில் ஒப்பந்தத்தை மதிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
அமைதி ஒப்பந்தம்
ஆனால், இஸ்ரேல் பிரதமரின் இத்தகைய கடுமையான அறிவிப்பால், மத்திய கிழக்கு அமைதி முயற்சிகள் மீண்டும் சிக்கலில் ஏற்பட்டுள்ளது. காசா பிராந்தியத்தில் மனிதாபிமான நெருக்கடி தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், நெதன்யாகுவின் "ஹமாஸ் ஆயுதம் இழக்கும்வரை போர் முடிவதில்லை" என்ற எச்சரிக்கை, அந்த பிராந்தியத்தின் எதிர்காலத்தை மீண்டும் அச்சம் மிகுந்ததாக மாற்றியுள்ளது. அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தம் சிதறிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், உலக நாடுகள் கவலையுடன் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலைக் கவனித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications