துருக்கிக்கு ஆயுத உதவி.. உறவை பழைய நிலைக்கு திருப்ப அமெரிக்கா முயற்சி! இந்தியாவுக்கு சிக்கலா?
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கியதற்காக துருக்கிக்கு ஆயுதங்களை கொடுக்காமல் அமெரிக்கா இருந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் சுமார் 304 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முன் வந்திருக்கிறது.
ஏற்கெனவே பாகிஸ்தானுக்கு ட்ரோன்களை கொடுத்து துருக்கி உதவியிருந்தது. இந்த ட்ரோன்களை கொண்டுதான் இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதலை நடத்தியிருந்தது. எனவே துருக்கி புதிய ஆயுதங்களை வாங்குவது இந்தியாவின் கவனத்தை கூர்மைப்படுத்தியிருக்கிறது.

நேட்டோ அமைப்பில் துருக்கியும் ஒரு நாடாக இருக்கிறது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு துருக்கி ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 எனும் வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கியிருந்தது. இது உலக அளவில் வலிமையான வான் பாதுகாப்பு அம்சமாகும். நேட்டோவில் இருக்கும் நாடு எப்படி ரஷ்யாவிடம் ஆயுதங்களை வாங்கலாம் என்று கடுப்பான அமெரிக்கா, துருக்கிக்கு ஆயுத கொள்முதல் தடையை விதித்திருந்தது. அதேபோல F-35 போர் ஜெட் திட்டத்திலிருந்தும் துருக்கியை நீக்கியது.
ஆனால் துருக்கியால் அமெரிக்காவுக்கு சில ஆதாயம் இருக்கிறது. துருக்கி பக்கத்தில்தான் சிரியா இருக்கிறது. அங்கு அமெரிக்காவுக்கு எதிரான குரல்களை ஒடுக்க துருக்கியின் உதவி தேவை. எனவே, துருக்கிக்கு ஆயுதம் வழங்க அமெரிக்கா சம்மதித்திருக்கிறது.
அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனமான DSCA, 225 மில்லியன் டாலர் மதிப்பிலான 53 AIM-120C-8 வான் பாதுகாப்பு அம்சத்தை வழங்க முன் வந்திருக்கிறது. இது வானிலிருந்து வானில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணையாகும். போர் விமானத்தில் இதை பயன்படுத்த முடியும். அதேபோல 79.1 மில்லியன் டாலர் மதிப்புள்ள 60 பிளாக் II ஏவுகணைகளையும் வழங்க இருக்கிறது. இவை தவிர அதிநவீன ரேடார்கள், ராணுவ தளவாடங்களின் உதிரி பாகங்கள் உள்ளிட்டவையும் வழங்கப்படும்.
அதேபோல F-35 திட்டத்திலும் துருக்கி இணையும் என்று எர்டோகன் நம்பிக்யைாக இருக்கிறார். இருப்பினும் ஆயுதங்களை வழங்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் இறுதி ஒப்புதல் தேவை.
இதில் விஷயம் என்னவெனில், மேலே குறிப்பிட்டதை போல ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் நம்மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியிருந்தது. இதற்கு துருக்கியின் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அப்படி எனில், இப்போது அமெரிக்கா 304 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக கூறுயிருப்பது இந்தியாவின் கவனத்தை கூர்மைப்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications