செஞ்சதெல்லாம் செஞ்சிட்டு.. சீனா மீதான வரியை குறைக்கிறாராம்! 80%க்கு இறங்கி வந்த டிரம்ப்!
வாஷிங்டன்: உலக நாடுகள் மீது அமெரிக்கா விதித்த வரியானது சர்வதேச அளவில் கடுமையான பாதிப்புகளை உருவாக்கியிருந்தது. எல்லா நாடுகளுக்கும் வரியை குறைத்த டிரம்ப், தற்போது சீனாவுக்கு மட்டும் வரியை தொடர்ந்துள்ளார். இந்த வரி குறைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
வரி காரணமாக உலக வர்த்தகமே அடி வாங்கியிருந்த நிலையில், இப்போது வரியை குறைப்பதாக அறிவித்திருப்பது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.

தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்த டிரம்ப், "சீனாவுக்கு 80% வரியே போதுமானது போலிருக்கிறது. 145% வரை வரியை போட்டிருக்கிறோம். இதைவிட அதிகமாக வரியை போட முடியாது. எனவே அதை குறைக்கலாம்" என்று கூறியிருக்கிறார். வரி காரணமாக பெரும் களேபரமே நடந்த நிலையில், இப்போது வரியை குறைப்பதாக டிரம்ப் பேசியிருப்பது வர்த்தக துறையில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
இந்த பிரச்சனை இப்படித்தான் தொடங்கியது. நான் அமெரிக்க அதிபராக ஆனால், 'அமெரிக்கா பர்ஸ்ட்' கொள்கையை பின்பற்றுவேன் என டிரம்ப் கூறியிருந்தார். அதேபோல அவர் அதிபராகவும் வந்தார். கையோடு பரஸ்பர வரி என்பதையும் கொண்டு வந்தார். அதாவது அமெரிக்க பொருட்களுக்கு உலக நாடுகள் எவ்வளவு வரியை போடுகிறதோ, அதே அளவுக்கு வரியை அமெரிக்காவும் போடும் என்பதுதான் இதன் அர்த்தம்.
உதாரணத்திற்கு அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஆப்பிள் வருகிறது. இது கிலோ 1 டாலர் எனில், இந்திய வரியை சேர்த்தால் 1.5 டாலர் வரை விலை வருகிறது என்று வைத்துக்கொள்வோம். இந்திய மாம்பழத்திற்கு அமெரிக்காவில் வரியோடு சேர்த்து 1.1 டாலர் என்று விலை நிர்ணயிக்கப்படுகிறது என கொள்வோம். இதற்கு காரணம் அமெரிக்க மீது அதிக வரியை போட்டாலும் அந்நாடு பாதிக்கப்படாது. ஆனால், இந்திய பொருட்கள் மீதான வரி, நம்மை பாதிக்கும்.
வளர்ந்து வரும் நாடுக்கும், வளர்ந்த நாடுக்கும் ஒரே வரி என்பது சமத்துவமில்லை. எனவேதான் அமெரிக்காவுக்கு அதிக வரியும், நமக்கு குறைந்த வரியும் இருக்கிறது. ஆனால் டிரம்ப் இனி சமமான வரி விதிக்கப்படும் என்று கூறிவிட்டார். இது உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்தியா மட்டுமல்லாது பிரிட்டன், ஜப்பான் என நட்பு நாடுகளுக்கு கூட வரியை விதித்து தள்ளினார். ஆனால், ஒரு கட்டத்தில் இந்த வரிக்கு மற்ற நாடுகளும் பதிலடி வரியை விதிக்க தொடங்கின. எனவே வரியை நிறுத்தி வைப்பதாக அறிவித்துவிட்டார். இருப்பினும் சீனாவின் மீதான வரி மட்டும் இப்போது வரை தொடர்கிறது. 145% வரை சீனாவுக்கு வரி இருக்கிறது.
இந்த வரியால் உலகம் முழுவதும் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. உலக உற்பத்தியில் சீனா, இந்தியா உள்ளிட்ட ஒன்றிரண்டு நாடுகள் மட்டும் 40% வரை பங்களிக்கிறது. எனவே சீனா மீதான வரி, பல்வேறு பொருட்களின் விலை உயர்த்தின. அதேபோல புதிய முதலீடுகள் தாமதமடைந்தன. உற்பத்தி செலவுகள் அதிகரித்ததால் விலைவாசியும் உயர்ந்தது. இது சங்கிலி தொடராக வேலைவாய்ப்பில் கையை வைத்தது. 2018-2019 காலத்தில் இருந்த வளர்ச்சியை விட உலக வளர்ச்சி குறைந்தது. ஐஎம்எஃப் ஏற்கெனவே கணித்திருந்த சர்வதேச வளர்ச்சியை, டிரம்ப் வரி காரணமாக குறைத்து சொன்னது.
இப்போது டிரம்ப் தனது வரி பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்திருக்கிறார். எனவே இனியாவது சர்வதேச வணிகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கலாம். வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கலாம். ஆனால் இதெல்லாம் அவ்வளவு சீக்கிரத்தில் நடந்துவிடாது என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications