உள்ளே வரும் சீன டிராகன்! உக்ரைன் போரில் ஆட்டத்தை ஆரம்பித்த புதின்.. இதை யாரும் எதிர்பார்க்கல
கீவ்: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவத்துடன் சீன வீரர்கள் போரில் ஈடுபட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ரஷ்யாவுக்காகப் போரிட்ட இரு சீன வீரர்களை உயிருடன் பிடித்துள்ள உக்ரைன் அவர்களிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் ஆண்டுக் கணக்கில் தொடர்ந்து வருகிறது. போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா உட்பட உலக நாடுகள் எடுத்த முயற்சிக்கு இதுவரை பலன் கிடைக்கவில்லை. போரைச் சுற்றி பதற்றமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே உக்ரைன் போரில் யாருமே எதிர்பார்க்காத சம்பவம் இப்போது நடந்துள்ளது.

ரஷ்ய ராணுவம்
அதாவது கடந்த காலங்களில் உக்ரைன் படைகளில் வடகொரிய இணைந்து போரிட்டது சர்ச்சையானது. அதாவது வடகொரிய வீரர்கள் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு அவர்களுக்கு சில நாட்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்கள் ரஷ்ய ராணுவம் சார்பில் போரிட்டனர். அவர்களில் பலரை உக்ரைன் ராணுவம் உயிருடன் கூட பிடித்தது.
இதற்கிடையே இப்போது ரஷ்ய ராணுவத்துடன் சேர்ந்து சண்டையிட்ட இரு சீன வீரர்களை உக்ரைன் சிறை பிடித்துள்ளது. தற்போது வரை இரு சீன வீரர்களைச் சிறைபிடித்துள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். மேலும், சீன வீரர்கள் ஏன் ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து போரிடுகிறது என்பது குறித்து சீனா விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்யா சீனா உறவு
ரஷ்யா சீனா இடையேயான உறவு கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. அரசியல், ராணுவ மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு என பல விஷயங்களில் இரு தரப்பும் ஒத்துழைப்பை மேம்படுத்தியுள்ளன. இதன் காரணமாகவே சீன அரசே கூட வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பியிருக்கலாம் என்றும் கூட அஞ்சப்படுகிறது.
அதிபர் ஜெலன்ஸ்கி தாக்கு
சீன வீரர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், "ரஷ்ய ராணுவத்திற்காகச் சண்டையிட்ட இரு சீன வீரர்களை எங்கள் ராணுவம் கைது செய்தது. உக்ரைனுக்குச் சொந்தமான டொனெட்ஸ்க் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதிகளின் ஆவணங்கள், வங்கி அட்டைகள் மற்றும் பர்சனல் தகவல்கள் என எல்லாம் எங்களிடம் இருக்கிறது" என்றார்.
இதற்கிடையே அந்த சீன வீரர்களின் வீடியோவையும் உக்ரைன் வெளியிட்டுள்ளது. அதில் கைகள் கட்டப்பட்ட நிலையில், சீன வீரர் இருக்கிறார். அவர் சீன மொழியான மாண்டரினில் ஓரிரு வார்த்தைகள் பேசுகிறார். கமெண்டர் உள்ளிட்ட சில வார்த்தைகளை அவர் ஆங்கிலத்திலும் கூறுகிறார்.
அதிகாரிகள் சொல்வது என்ன
அதேநேரம் பெயர் வெளியிட விரும்பாத உக்ரைன் மூத்த அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் ஊடகத்தினரிடம் பேசும்போது அவர்கள் சொல்லும் தகவல் வேறு விதமாக இருக்கிறது. அதாவது ரஷ்ய ராணுவத்திடம் பணம் வாங்கிக் கொண்ட சீன இளைஞர்கள் போரில் சண்டையிட்டு இருக்கலாம் என்றும் சீன அரசு நேரடியாக இவர்களைப் போருக்கு அனுப்ப வாய்ப்பு குறைவு என்றும் கூறினார்.
மேலும், இந்த சீன வீரர்கள் சில நாட்களுக்கு முன்பு கைதாகி இருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இன்னும் சில சீன இளைஞர்களும் கூட ரஷ்ய ராணுவத்துடன் கைது செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இருப்பினும், அவர்களின் பின்னணி குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. உக்ரைன் சீக்ரெட் சர்வீஸ் இந்த விவகாரத்தை விசாரித்த பிறகே கூடுதல் தகவல்கள் தெரிய வரும்..
மவுனம் சாதிக்கும் சீனா
இந்த விவகாரத்தில் சீனா இதுவரை எந்தவொரு விளக்கமும் தரவில்லை. உக்ரைன் போரைப் பொறுத்தவரை அவர்கள் உக்ரைன், ரஷ்யா என யாரையும் ஆதரிக்காமல் சீனா நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்தது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உக்ரைனுக்கு பல்வேறு உதவிகளை அறிவித்த போதிலும், சீனா அதுபோல எந்தவொரு உதவியும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications