ரஷ்யா போரை 30 நாள் நிறுத்த உக்ரைன் ஒப்புதல்.. அமெரிக்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு.. டீல் இதுதான்
ரியாத்: 3 ஆண்டுகளாக தொடர்ந்து நடக்கும் போரை உடனடியாக 30 நாட்கள் நிறுத்திவிட்டு ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஓகே சொல்லி உள்ளது. சவுதி அரேபியாவில் வைத்து போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா - உக்ரைன் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு என்பது எட்டப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்பட்ட டீல் என்னென்ன? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து போர் நடந்து வருகிறது. உக்ரைனுக்குள் புகுந்து ரஷ்யா தாக்கி வருகிறது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரை நிறுத்துவதில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதியாக உள்ளார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்

அதேபோல் அமெரிக்கா - ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்களும் சவுதி அரேபியாவில் பேசினர். இதில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதன்பிறகு அமெரிக்க அதிபர் டிரம்பும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியும் கடந்த பிப்ரவரி 28 ம் தேதி வெள்ளை மாளிகையில் வைத்து பேசினர். அதன்பிறகு கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார்.
இதனால் போர் நிறுத்தம் செய்வதில் இழுபறி ஏற்பட்டது. மேலும் உக்ரைன் மீது அமெரிக்கா டென்ஷனானது. உக்ரைனுடன் பகிர்ந்து கொள்ளும் உளவு தகவல்களையும், ஆயுத உதவிகளையும் டிரம்ப் நிறுத்தினார். அமெரிக்கா ஆதரவின்றி ரஷ்யாவை எதிர்க்க முடியாது என்பதால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பணிந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் விருப்பத்தின்படி அவருக்கு கீழ் பணியாற்ற தயாராக உள்ளதாக கடிதம் எழுதினார்.

இதையடுத்து நேற்று சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்கா - உக்ரைன் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அமெரிக்கா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியா, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உக்ரைன் சார்பில் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் Chief of Staff பொறுப்பில் உள்ள அன்ட்ரி எர்மார்க் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை என்பது நீண்ட நேரம் நடந்தது. மொத்தம் 7 மணிநேரம் இருநாட்டு பிரதிநிதிகளும் பேசினர்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக உக்ரைனில் 30 நாட்கள் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அமெரிக்கா வழங்கிய இந்த டீலுக்கு உக்ரைன் ஓகே சொன்னது. இந்த 30 நாள் போர் நிறுத்தம் என்பது ரஷ்யா உதவியுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்பிறகு உக்ரைனும், ரஷ்யாவும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் மொத்தம் 5 முக்கிய டீல் செய்யப்பட்டது. அதன்படி உக்ரைனுக்கான பாதுகாப்பை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும். உளவு தகவல்கள் மற்றும் ஆயுத பகிர்வை வழங்க ஒப்புதல் செய்யப்பட்டது. 2வது விஷயம் என்னவென்றால் 30 நாட்கள் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை நிறுத்த வேண்டும். ரஷ்யாவுடன் பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொண்டு இதனை செயல்படுத்த வேண்டும். அதன்பிறகு தொடர்ந்து அமைதி பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
3வது விஷயம் என்னவென்றால் உக்ரைன் நாட்டு கைதிகள், பொதுமக்கள், குழந்தைகளை ரஷ்யா விடுவிக்க வேண்டும். 4வது விஷயம் என்னவென்றால் போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பா ஒருபகுதியாக இருக்க வேண்டும். 5வது விஷயம் என்னவென்றால் கனிமவள ஒப்புதல் தொடர்பாக ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா - உக்ரைன் இடையே நீண்டகால உறவை பேண வேண்டும். உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவி செய்ய வேண்டும் என்ற 5 முக்கிய விஷயங்கள் முடிவு செய்யப்பட்டது.

போர் நிறுத்தம் தொடர்பாக சவுதியில் அமெரிக்கா - உக்ரைன் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தை பற்றியும், இதற்கான டீல் பற்றியும் டிரம்ப் சார்பிலான குழுவினர் விரைவில் ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ரஷ்யா ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் போர் நிறுத்தம் என்பது முதற்கட்டமாக 30 நாட்கள் அமலுக்கு வரும். இதற்கிடையே தான் போர் நிறுத்தம் செய்ய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புக்கொள்வார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications