வெளிநாட்டு மக்களை நாடு கடத்தும் டிரம்ப்புக்கு.. கொட்டு வைத்த அமெரிக்க உயர்நீதிமன்றம்!
நியூயார்க்: சமீப நாட்களாக வெளிநாட்டு மக்களை டிரம்ப் நாடு கடத்தி வருகிறார். இந்நிலையில் வெணிசுலா நாட்டு மக்களையும் நாடு கடத்த அவர் முயன்றார். அவரது முயற்சிக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மட்டுமல்லாது நாடு கடத்தும் முயற்சிக்கு தடையும் விதித்திருக்கிறது.
நீதிமன்றத்தில் இந்த உத்தரவு டிரம்ப் தரப்புக்கு கடும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இனியாவது வெளிநாட்டு மக்களை டிரம்ப் கண்ணியமாக நடத்துவார் என்று எதிர்பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இன்று காலை இந்த தடை உத்தரவை அமெரிக்காவின் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. விஷயம் என்னவெனில் டெக்சாசில் இருந்த சில வெணிசுலா மக்களை அமெரிக்க அரசு நாடு கடத்த முயற்சி செய்திருக்கிறது. இதற்கு எதிராக அமெரிக்க சிவில் லிப்ரடிஸ் யூனியன் எனும் அமைப்பு உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தது. வழக்கை கிளாரன்ஸ் தாமஸ் மற்றும் சாமுவேல் அலிட்டோ என இரண்டு நீதிபதிகள் விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். தீர்ப்பில், வெணிசுலா மக்களை நாடுகடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது, "வெணிசுலா மக்களை நாடு கடத்த அமெரிக்க அரசு 'ஏலியன் எனிமிஸ் சட்டம்-1798'ஐ பயன்படுத்தியிருக்கிறது. இது மிகவும் பழமையான சட்டம். அமெரிக்கா ஏதாவது ஒரு நாட்டுடன் யுத்தத்தில் இருக்கும்போது, அந்நாட்டு மக்கள் அமெரிக்காவில் இருந்தால் அவர்கள் எந்த கேள்வியும் கேட்கப்படாமல் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். இந்த சட்டம் இரண்டாம் உலகப்போரின்போது மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
வெணிசுலா நாட்டவர்களை நாடு கடத்த தடை விதிக்க முக்கிய காரணம், வெணிசுலாவுடன் அமெரிக்கா இப்போது போரில் இல்லை. எனவே இந்த யுத்த கால சட்டத்தை பயன்படுத்த முடியாது. டெக்சாஸில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆங்கிலத்தில் நாடுகடத்தல் ஆணை வழங்கப்பட்டது, ஆனால் அவர்கள் ஸ்பானிஷ் மட்டுமே பேசக்கூடியவர்கள். ஆகவே உரிய சட்ட நடைமுறைகளை அரசு பின்பற்ற தவறிவிட்டது" என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் இந்த நாடு கடத்தும் முயற்சிக்கு வெணிசுலா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. நாடு கடத்துதல் என்கிற பெயரில் வெணிசுலா மக்களை குற்றவாளியாக்கும் போக்கை அமெரிக்கா கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்கெனவே 200க்கும் அதிகமான வெணிசுலா மக்களை டிரம்ப் நாடு கடத்தியுள்ளார்.
இந்தியர்களையும் கை, கால்களில் விலங்கு போட்டு சங்கிலியிட்டு நாடு கடத்தியிருக்கிறார். டிரம்ப்பின் இப்படியான மோசமான அணுகுமுறைக்கு தற்போது நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்திருப்பதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications