இந்திய மாணவர்கள் அமெரிக்க அரசுக்கு எதிராக வழக்கு! சிக்கலில் டிரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் பயிலும் மற்ற நாடுகளை சேர்ந்த மாணவர்களுக்கு திடீரென விசா மறுக்கப்படுவது விவாதமாகியிருக்கிறது. இதற்கு எதிராக இந்திய மாணவர்கள் 4 பேர் உட்பட 130 மாணவர்கள் ஜார்ஜியா மாகாணத்தில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கின்றனர்.
மாணவர்கள் தொடர்ந்திருக்கும் இந்த வழக்கு டிரம்ப் தரப்புக்கு புதிய தலைவலியாக உருவாகும் என்றும் சொல்லப்படுகிறது.

அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு மாணவர் விசா வழங்கப்பட்டிருக்கும். யார் யாருக்கு இந்த விசா வழங்கப்பட்டிருக்கிறது? யாருக்கு விசா ஆக்டிவாக இருக்கிறது என்பது 'எஸ்இவிஐஎஸ்' எனும் 'மாணவர் மற்றும் பரிமாற்ற பார்வையாளர் தகவல் அமைப்பு' போர்ட்டலில் தெரிவிக்கப்பட்டிருக்கும். இதிலிலிருந்து சமீபத்தில் பல மாணவர்களின் டேட்டாக்கள் நீக்கப்பட்டிருக்கிறது.
அப்படி நீக்கப்பட்ட பின்னரும் அந்த மாணவர்கள் அமெரிக்காவுக்குள் இருந்தால் அவர்கள் நாடு கடத்தப்படலாம். அல்லது கைது செய்யப்படலாம். மொத்தத்தில் அவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக கருதப்படுவார்கள்.
எல்லாம் ஓகேதான், போர்ட்டலில் பெயர் நீக்கப்படுவது பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி ஏதும் தெரிவிக்கப்படாததுதான் இங்கு பிரச்சனையே. எனவே அமெரிக்காவில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் கடும் அச்சத்துடனேயே இருக்கின்றனர். இந்த நிலைமையை எதிர்த்து, கடந்த 11ம் தேதி ஜார்ஜியாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் 11 மாணவர்கள் அமெரிக்க அரசு நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்.
இவர்களை தொடர்ந்து 116 மாணவர்களும் இந்த வழக்கில் தங்களை இணைத்துக்கொண்டனர். மொத்தம் 133 மாணவர்கள் இந்த வழக்கை நடத்த தொடங்கியுள்ளனர். இதில் இந்திய மாணவர்கள் 4 பேர் இருக்கின்றனர். இதில் நியூயார்க் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் பயின்ற ஒரு இந்திய மாணவர் மீது, சூப்பர் மார்க்கெட்டில் திருடியதாக வழக்கு இருக்கிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவர் மீது குற்றம் இல்லை என்று விடுதலை செய்திருக்கிறது. இருப்பினும் இவரது பெயர் 'எஸ்இவிஐஎஸ்' எனும் போர்ட்டலில் இல்லை.
சீன மாணவர் ஒருவர் மீது போக்குவரத்து விதிகளை மீறியதாக வழக்கு இருக்கிறது. இதெல்லாம் பெட்டி கேஸ். இதனால் மாணவர்களுக்கு விசா மறுப்பது நியாயமா? என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏற்கெனவே வரி விஷயத்தில் டிரம்ப் உலக நாடுகளை பகைத்துக்கொண்டிருக்கிறார். அதேபோல, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராடும் மாணவர்களையும் அவரது நிர்வாகம் நாடு கடத்தி வருகிறது. குறிப்பாக ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மாணவர் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற நிலையில், பல்கலைக்கழகத்திற்கான நிதியை வெட்டுவது, மாணியத்தை ரத்து செய்வது போன்ற நடவடிக்கையில் டிரம்ப் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.
இந்நிலையில், தற்போது மாணவர் விசா ரத்தை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்களே டிரம்ப்புக்கு எதிராக வழக்கு தொடுத்திருப்பது சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications