கிரீன்லாந்து மீது போர் இல்லை.. திடீர் பல்டியடித்த டொனால்ட் டிரம்ப்.. என்ன காரணம்? பின்னணி
பெர்ன்: ஸ்விட்சர்லாந்தில் நடந்து வரும் உலக பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று பேசினார். அப்போது அவர், ‛‛கிரீன்லாந்தை எங்களால் மட்டுமே பாதுகாக்க முடியும். வேறு யாராலும் கிரீன்லாந்தை பாதுகாக்க முடியாது.கிரீன்லாந்து மக்கள் எங்களுக்கு நன்றி உணர்வுடன் இல்லை. கிரீன்லாந்துக்கு எதிராக படைப்பலத்தை பயன்படுத்த மாட்டேன்'' என்று கூறியுள்ளார். கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் போர் புரிய வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் திடீரென்று அவர் இப்படி கூறியுள்ளதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டென்மார்க் நாட்டின் ஒருபகுதியாக இருக்கும் கிரீன்லாந்தை கைப்பற்ற துடித்து வருகிறார். இதற்காக அமெரிக்கா முழு வீச்சில் தனது படைகளை தயார் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
மேலும் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா, கிரீன்லாந்தை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இதனால் இருநாடுகள் இடையே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

இதற்கு டென்மார்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அமெரிக்காவால் கிரீன்லாந்தை கைப்பற்ற நினைத்தால் தற்காப்புக்காக தாக்குதல் நடத்தப்படும் என்று டென்மார்க் அறிவித்தது. இதனால் இருநாடுகள் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.
இந்நிலையில் தான் சுவிட்சர்லாந்தின் உலக பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கிரீன்லாந்தை எங்களால் மட்டுமே பாதுகாக்க முடியும். வேறு யாராலும் கிரீன்லாந்தை பாதுகாக்க முடியாது. கிரீன்லாந்தை நாங்கள் பாதுகாத்து அதனை டென்மார்க்கிடம் வழங்கினோம். இது நாங்கள் செய்த முட்டாள்தனம். இப்போது கிரீன்லாந்து மக்கள் எங்களுக்கு நன்றி உணர்வுடன் இல்லை. கிரீன்லாந்துக்கு எதிராக படைப்பலத்தை பயன்படுத்த மாட்டேன்.
அமெரிக்க அதிபர்கள் கடந்த 2 நூற்றாண்டுகளாக கிரீன்லாந்தை வாங்க முயன்று வருகின்றனர். பனியால் சூழப்பட்ட இந்த மாபெரும் நிலப்பரப்பை எங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும். இது நேட்டோவுக்கான மிரட்டல் அல்ல. நன்றாக யோசித்து பார்த்தால் ஒன்றை யாராலும் மறுக்க முடியாது. நாங்கள் நேட்டோவிற்கு எவ்வளவு கொடுக்கிறோம். ஆனால் அதற்கு பதிலாக குறைந்த அளவில் தான் நேட்டோவிடம் இருந்து பலன் பெறுகிறோம்.
நான் பல ஆண்டுகளாக நேட்டோவை எதிர்க்கும் விமர்சகராக இருந்து வருகிறேன். ஆனாலும், வேறு எந்த அதிபரையும் விட நான் நேட்டோவிற்கு அதிகமாக அள்ளி கொடுத்துள்ளேன். என் முதல் முறையாக அதிபரானபோது நான் மட்டும் தலையீடு செய்யாமல் இருந்திருந்தால் இன்று நேட்டோ என்ற அமைப்பே இருந்திருக்காது. 2020ம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தல் மோசடியுடன் நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் நான் அதிபராகி இருந்திருந்தால் உக்ரைன் போர் தொடங்கியே இருக்காது'' என்று பேசினார்.
முன்னதாக டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்து அமெரிக்காவிற்கு விற்க வேண்டும். ஏனென்றால் அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து முக்கியம். அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்றாவிட்டால் ரஷ்யா அல்லது சீனா வசம் அது சென்றுவிடும். இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறினார்.
அதுமட்டுமின்றி நேற்றைய தினம் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து, கனடா மற்றும் வெனிசுலாவை அமெரிக்காவுடன் சேர்த்து எடிட் செய்து ‛மேப்' வெளியிட்டார். இது கடும் விவாதத்தை கிளப்பியது. இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே டிரம்ப், கிரீன்லாந்துக்கு எதிராக படைப்பலத்தை பயன்படுத்த மாட்டேன் என்று கூறியுள்ளார். இந்த திடீர் மாற்றத்தின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளதாக கூறப்படுகிறது.
ஏனென்றால் கிரீன்லாந்தை கைப்பற்றும் அமெரிக்காவின் முயற்சிக்கு ஏராளமான நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. குறிப்பாக ‛நேட்டோ' அமைப்பில் உள்ள ஐரோப்பிய நாடுகளே டிரம்பின் நடவடிக்கையை விரும்பவில்லை. மேலும் டென்மார்க்கும் நேட்டோ அமைப்பின் ஒரு அங்கமாக உள்ளது. இப்படியான சூழலில் நேட்டோவில் இருக்கும் அமெரிக்காவே நேட்டோ நாடான டென்மார்க்கின் கிரீன்லாந்தை கைப்பற்றுவதற்கு ஐரோப்பிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஒருவேளை டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை தனது படை வலிமை மூலமாக தாக்க நினைத்தால் ‛நேட்டோ' ஒப்பந்த்தின்படி அதில் உள்ள பிற உறுப்பு நாடுகள் டென்மார்க்கிற்கு ஆதரவாக களமிறங்கும். பிரிட்டன், பிரான்ஸ் உள்பட பல ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவை எதிர்த்து டென்மார்க்கிற்கு ஆதரவாக களமிறங்கலாம். இது நடக்கும் பட்சத்தில் மிகப்பெரிய போராக மாறும். இதனால் தான் டிரம்ப், கிரீன்லாந்துக்கு எதிராக தனது படை பலத்தை பயன்படுத்தமாட்டேன் என்று டிரம்ப் கூறியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications