மெல்ல அழியும் உலகின் மிக பெரிய நதி.. அமேசானில் என்ன தான் நடக்கிறது.. இதுதான் அழிவின் தொடக்கமா?
பிரேசிலியா: உலகில் மிகப் பெரிய நதியான அமேசான் நதியில் இப்போது வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் அமேசான் நதி மட்டுமின்றி ஒட்டுமொத்த பிரேசிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏன் இப்படி நடக்கிறது.. இதனால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தென் அமெரிக்கக் காடுகள் வழியாகப் பயணிக்கும் அமேசான் நதி உலகின் மிகப் பெரிய நதியாகும். இது பெரு, பொலிவியா, வெனிசுலா, கொலம்பியா, ஈக்வடார் நாடுகள் வழியாகப் பாய்கிறது.

பல நாடுகள் வழியாகப் பாயும் இந்த அமேசான் ஆற்றின் கரையில் பல கலாச்சாரங்கள் செழித்துள்ளன. பல வகையான விலங்குகள், மீன்களுக்கு இந்த அமேசான் நதி ஒரு வீடாக இருக்கிறது.
கண்ணீர் வரும்: ஆனால், இப்போது இந்த நதியின் நிலைமையைப் பார்த்தால் நமக்கே கண்ணீர் வரும். மிக மோசமான நிலையில் அமேசான் நதி இருக்கிறது. வரலாறு காணாத வறட்சியை அனுபவிக்கும் அமேசான் நதியின் நீர் இருப்பும் முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைந்துவிட்டது. இதனால் இந்த நதியை நம்பி வாழும் வனவிலங்குகள் மட்டுமின்றி உள்ளூர் சமூகங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
உலகிலேயே அதிகளவு நீரைச் சுமந்து செல்லும் நதி என்ற சிறப்பை பெற்ற அமேசான் நதி தான் இப்போது இந்தளவுக்கு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது.

அமேசான் நதி: இந்த அமேசான் நதி கடல் மட்டத்திலிருந்து 5,598 மீட்டர் உயரத்தில் பெருவியன் ஆண்டிஸில் உருவாகிறது. இது பசிபிக் கடலில் இருந்து வெறும் 192 கிமீ தொலைவில் கார்ஹுவாசாண்டா என்று அழைக்கப்படும் ஒரு சிறிய துணை நதியாகத் தொடங்குகிறது. உலகில் கடல்களை அடையும் நன்னீரில் ஆறில் ஒரு பங்கு நீர் அமேசான் நதி வழியாகத் தான் பாய்கிறது. ஆற்றின் அகலம் என்பது ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப மாறுகிறது. வறண்ட காலங்களில் 4 முதல் 5 கிமீ அகலத்தில் இருக்கும். ஆனால் மழைக் காலத்தில் அது 50 கிமீ வரை அகலமாக இருக்கும். மேலும், அதிகபட்சம் 7 கிமீ வேகத்தில் நதி பாயும்.
இப்போது கொலம்பியாவின் எல்லையில் உள்ள பிரேசில் நகரமான தபாடிங்காவில், அமேசானின் முக்கிய துணை நதியான சோலிமோஸ் நதியை வறட்சி தாக்கியுள்ளது. அங்கு நீர் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது. இந்த சோலிமோஸின் ஒரு கிளை நதி முற்றிலும் வறண்டு மணல் வண்டல் தெரியும் அளவுக்குச் சென்றுவிட்டது.
கடும் வறட்சி: இந்த வறட்சியால் 200க்கும் மேற்பட்ட நன்னீர் டால்பின்கள் உயிரிழந்துவிட்டன. ஏரி இப்போது முற்றிலும் வறண்டு விட்டது. ஏற்கனவே அழிவின் விளிம்பில் இருக்கும் இளஞ்சிவப்பு டால்பின்களை இந்த வறட்சி மேலும் அழிக்கிறது.
இது குறித்து ரோமுலோ பாடிஸ்டா கூறுகையில், "இந்த ஆண்டு வறட்சி மிக மோசமாக இருக்கிறது.. கடந்த ஆண்டும் வறட்சி இருந்தது. ஆனால், இந்தாண்டு அதை விட மிக மோசமான நிலைக்குப் போய்விட்டது. ஆற்றைத் தாண்டி பிரேசில் முழுவதும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல விவசாய நிலங்கள் வறண்டு போய்விட்டன. தென் அமெரிக்க நகரங்களில் வறட்சி தாண்டவம் ஆடுகின்றன" என்றார்.
நடவடிக்கை தேவை: காலநிலை மாற்றம் என்பது என்றோ வரும் காலத்தில் நடக்கும் நிகழ்வு இல்லை. அது ஏற்கனவே நடக்கத் தொடங்கிவிட்டது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது. நாம் உடனடியாக உரிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால் பேரழிவைத் தடுக்க முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகின் மிகப் பெரிய நதியாக இருந்த அமேசான் இன்று வறட்சியின் பிடியில் தாண்டவம் ஆடுவது நமக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை தான்.












Click it and Unblock the Notifications