மாஸ் காட்டும் ஈரான்! அணுஆயுதம் தயாரிக்க தேவையான ஃபோர்டோவ் ஆலையை இஸ்ரேலால் தொட கூட முடியலை.. ஏன் ?

Subscribe to Oneindia Tamil

டெஹ்ரான்: இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது. இரவு, பகல் பாராமல் இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருகின்றனர். இந்த போருக்கு முக்கிய காரணம் ஈரான் அணுஆயுதம் தயாரிப்பது தான். இதனை தடுக்கவே இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்தி மோதலை தொடங்கி உள்ளது. தற்போது இருநாடுகள் இடையேயான மோதல் ஒருவாரம் கடந்து விட்டது. இருப்பினும் இஸ்ரேலால் ஈரானின் ஃபோர்டோவ் யுரேனியம் செறிவூட்டும் ஆலையை தொட கூட முடியவில்லை. அங்கு தான் அணுஆயுதம் தயாரிப்பதற்கான யுரேனியத்தை 90 சதவீதம் வரை செறிவூட்டும் பணியை ஈரான் மேற்கொண்டு வருகிறது.

ஈரானை ஒப்பிடும்போது இஸ்ரேல் ஏவுகணை, வான்வெளி பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கினாலும் கூட இந்த ஃபோர்டோவ் யுரேனியம் செறிவூட்டும் மையத்தை தாக்கி அழிக்க முடியாததன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

what-is-irans-fordow-nuclear-site-and-why-israel-cant-destroy-it-details-here

இஸ்ரேல் - ஈரான் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இது போராக மாறிவிட்டது. கடந்த 12ம் தேதி ஈரானின் ராணுவ தளம் மற்றும் அணுஆயுதம் தயாரிப்புக்கான யுரேனியம் செறிவூட்டும் கட்டமைப்புகளை நோக்கி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த சில நாட்களாக இஸ்ரேல், ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் ஆலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனாலும் ஈரானுக்கு மிகவும் முக்கியமாக உள்ள ஃபோர்டோவ் யுரேனியம் செறிவூட்டல் ஆலையை இஸ்ரேலால் அழிக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால் இஸ்ரேலால் அதனை நெருங்க கூட முடியவில்லை. தற்போது வரை இது மிகவும் பாதுகாப்பாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஈரானின் மாஸ்டர் மைண்ட் தான்.

ஈரான் அணுஆயுதம் தயாரித்தால் அதனை இஸ்ரேல், அமெரிக்கா நிச்சயம் தடுக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதனை ஈரானும் அறிந்து இருந்தது. இதனால் இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதலில் இருந்து எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த ஃபோர்டோவ் யுரேனியம் செறிவூட்டல் ஆலை அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த தளம் மலையை குடைந்து பாதாள அறை தோண்டி அதற்கு உள்ளே செயல்பட்டு வருகிறது. மேலும் இது உலகில் உள்ள பாதுகாப்பான அணு உலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்த இடம் ஈரானின் கோம் நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்திலும், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 160 கி.மீ தூரத்திலும் உள்ளது. இந்த இடம் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கட்டுப்பாட்டில் இருந்த ஏவுகணை தளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. தற்போது அது ஃபோர்டோவ் யுரேனியம் செறிவூட்டும் ஆலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆலைக்கான பணி 2000ம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கியது. மிகவும் ரகசியமாக பணி நடந்தது.

"அமாத் திட்டம்" என்ற இரகசிய திட்டத்தின் கீழ் இது அமைக்கப்பட்டது.இந்த ஃபோர்டோவ் யுரேனியம் செறிவூட்டும் ஆலையின் முக்கிய நோக்கம் அணு ஆயுதங்களை உருவாக்குவதாகும். தொடக்கத்தில் இந்த ஆலை பற்றி இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட எந்த உளவுத்துறைக்கும் தகவல் கிடைக்கவில்லை. ஆனால் கடந்த 2009ல், மேற்குலக உளவு அமைப்புகள் இந்த தளத்தை கண்டுபிடித்தன. இதனால் அதற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதையடுத்து ஈரான் இந்த தளத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம்(IAEA) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த ஃபோர்டோவ் ஆலை மலைக்கு நடுவே சுமார் 80 முதல் 300 அடி ஆழத்தில் பூமிக்கடியில் அமைந்துள்ளது. இது சாதாரண குண்டுகள் மற்றும் இஸ்ரேலின் நவீன ஆயுதங்களின் தாக்குதலையும் தாங்கும் திறன் கொண்டது. இந்த ஆலை சுமார் 3,000 IR-1 centrifugesகளை(தூய்மைப்படுத்தும் இயந்திரம் அல்லது கருவி) கொண்டு இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவும், ஈரானும் நெருங்கிய நண்பர்கள். இதனால் ரஷ்யாவிடம் இருந்து ஈரான் ஆயுதங்களை வாங்கி வைத்துள்ளது. அந்த வகையில் ரஷ்யாவின் S-300 வான்வெளி ஏவுகணை அமைப்பு உட்பட வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் இந்த தளம் பாதுகாக்கப்படுகிறது. தொடர்ச்சியான குண்டுவீச்சுகளை தாங்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 அணுசக்தி ஒப்பந்தத்தின் (JCPOA) படி, ஃபோர்டோவ் ஆலையை அமைதியான விஞ்ஞான பயன்பாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. இது இஸ்ரேல்- அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்டது. ஆனால் டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக அதிபராக இருந்தபோது இந்த ஒப்பந்தத்தை கடந்த 2018ல் நீக்கினார். இதையடுத்து ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பிறகு, ஈரான் ஃபோர்டோவ் ஆலையில் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்கியது.

2025 நிலவரப்படி, மேம்பட்ட IR-6 மாடல்கள் உட்பட சுமார் 2,000 Centrifugesகள் இந்த ஆலையில் செயல்பட்டு வருகின்றன. இங்கு தான் யுரேனியம் 60 சதவீதம் வரை செறிவூட்டப்படுகிறது. பொதுவாக அணு ஆயுதம் தயாரிக்க யுரேனியத்தை 90 சதவீதம் வரை செறிவூட்ட வேண்டும். தற்போது ஃபோர்டோவ் ஆலை தான் ஈரான் நாட்டின் முக்கிய யுரேனியம் செறிவூட்டல் மையமாக பார்க்கப்படுகிறது. நிபுணர்களின் கருத்துப்படி இது ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் சுமார் 60 சதவீத செறிவூட்டப்பட்ட 166 கிலோ யுரேனியத்தை உற்பத்தி செய்கிறது. இதனை மேலும் செறிவூட்டி 90 சதவீதத்தை நெருங்கினால் அதில் இருந்து 4 அணு குண்டுகளை தயாரிக்க முடியும். ஈரானின் பிற அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும், ஃபோர்டோவ் ஆலை இதுவரை சேதமடையாமல் உள்ளது.

அதேவேளையில் ஈரானின் அணுஆயுத தயாரிப்பு திட்டத்தை நிறுத்த வேண்டும் என்றால் ஃபோர்டோவ் ஆலையை அழிப்பது மிகவும் முக்கியம் என்று இஸ்ரேலிய அதிகாரிகள் கருதுகின்றனர். இஸ்ரேலிய தூதர் யெச்சியேல் லீட்டர் கூறுகையில், "தற்போதைய தாக்குதல் நடவடிக்கை என்பது ஃபோர்டோவ் ஆலையை அழிப்பதன் மூலம் முடிக்கப்பட வேண்டும்" என்றார்.

இருப்பினும் இந்த போர்டோவ் ஆலையை அழிப்பது அவ்வளவு சுலபமானது இல்லை.அமெரிக்காவிடம் மட்டுமே ஃபோர்டோவ் ஆலையை அழிக்கும் திறன் கொண்ட ஆயுதங்கள் இருக்கிறது. GBU-57A/B Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் 15 டன் "பங்கர் பஸ்டர்" குண்டுக்கு மட்டுமே ஃபோர்டோவ் மையத்தை தாக்கி அழிக்கும் திறன் உள்ளது. இதனால் இதனை அழிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவு என்பது வேண்டும். இதுபற்றி ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் இயக்குனர் கில்செய் டாவென்போர்ட் (Kelsey Davenport) கூறுகையில், "இஸ்ரேல் ஈரானின் முக்கிய அணு உலைகளை சேதப்படுத்த முடியும். ஆனால் அமெரிக்க உதவியின்றி ஃபோர்டோவ் போன்ற பலப்படுத்தப்பட்ட யுரேனியம் செறிவூட்டும் ஆலையை அழிக்க முடியாது," என்றார்.

இதன்மூலம் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுக்க ஃபோர்டோவ் ஆலையை அழித்தால் மட்டும் சாத்தியம். ஆனால் மலைக்கு நடுவே 30 முதல் 300 அடி ஆழத்தில் உள்ளதால் இந்த ஃபோர்டோவ் யுரேனியம் செறிவூட்டும் ஆலையை அமெரிக்காவின் உதவி இல்லாமல் இஸ்ரேலால் இந்த இலக்கை அடைய முடியாது என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+