மர்ம பொருளாம்.. டெல்லி கார் வெடிப்பு குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் என்ன?
இஸ்லாமாபாத்: டெல்லி கார் வெடிப்புச் சம்பவம் நேற்று நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வெடி விபத்திற்கான காரணத்தைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். இதற்கிடையே இந்த கார் வெடிப்புச் சம்பவம் குறித்த செய்திகளை பாகிஸ்தான் செய்தி நிறுவனங்கள் எப்படி வெளியிட்டுள்ளன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை மிக மோசமான கார் வெடிப்புச் சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கார் வெடிப்புச் சம்பவத்திற்கு யார் காரணம்.. இதன் பின்னணி குறித்த விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த கார் வெடிப்புச் சம்பவம் குறித்து பாகிஸ்தானின் முன்னணிச் செய்தி நிறுவனங்களான டான், ஜியோ நியூஸ், தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன், தி நியூஸ் இன்டர்நேஷனல், மற்றும் பாகிஸ்தான் டுடே ஆகியவை என்ன மாதிரியான செய்திகளை வெளியிட்டுள்ளன என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
டான்
பாகிஸ்தானின் முன்னணி ஆங்கில நாளிதழான 'டான்' செய்தித்தாள், "டெல்லி கார் வெடிப்புச் சம்பவம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது. பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் இந்தச் சம்பவம் விசாரிக்கப்படுவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற சம்பவம் டெல்லியில் நடைபெறவில்லை என்றும் டெல்லி போலீசார் குறிப்பிட்டதாகச் சொல்லி செய்தி வெளியிட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் வெடிப்பிற்கான காரணத்தைக் கண்டறிய ஆதாரங்களை ஆராய்ந்து வருவதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
அதேபோல மற்றொரு செய்தியில், "புது டெல்லியின் செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு" என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நிலைமையை ஆய்வு செய்ததாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது.
ஜியோ நியூஸ்
ஜியோ நியூஸும் கிட்டத்தட்ட அதேபோன்ற செய்தியைத் தான் வெளியிட்டிருந்தது. "டெல்லி கார் வெடிப்பு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுகிறது" என்ற தலைப்பில் ஜியோநியூஸ் செய்தி வெளியிட்டது. பயங்கரவாதத்துடன் தொடர்புடைய விதிகளின் கீழ் விசாரணை நடப்பதாகவும் அதில் கூறப்பட்டு இருந்தது.
மற்றொரு முக்கிய பாகிஸ்தான் நாளிதழான 'தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன்', காரில் இருந்த மர்மப் பொருள் வெடித்ததாகக் குறிப்பிடுகிறது.. இதில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டு 20 பேர் காயமடைந்ததாக அது தெரிவித்தது. கார் வெடிப்பைத் தொடர்ந்து மும்பை மற்றும் உத்தரப் பிரதேசம் உட்படப் பல முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.
இதர செய்தி நிறுவனங்கள்
"டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தைப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இந்தியா விசாரிக்கிறது" என்ற தலைப்பில் பாகிஸ்தானின் தி நியூஸ் இன்டர்நெஷ்னல் செய்தி வெளியிட்டது. டெல்லியில் இதுபோன்ற தாக்குதல்கள் அரிதானவை என்றும், பல மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
"டெல்லியில் செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு" என்ற தலைப்பில் இந்தச் செய்தியை பாகிஸ்தான் டுடே வெளியிட்டது. கார் வெடிப்புக்குப் பிறகு அருகிலிருந்த வாகனங்கள் தீப்பிடித்ததாக டெல்லி காவல்துறை ஆணையர் சதீஷ் கோல்ச்சா கூறியதை மேற்கோள் காட்டியது. கார் உரிமையாளரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தது.
என்ன நடந்தது
டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே மெதுவாகச் சென்ற ஹூண்டாய் ஐ20 கார், திங்கட்கிழமை மாலை 6:52 மணியளவில் வெடித்தது. ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த உமர் முகமது, வெடித்த வெள்ளை நிற ஹூண்டாய் ஐ20 காரின் உரிமையாளர் என்றும் வெடிப்பு ஏற்பட்டபோது அவர்தான் காரை ஓட்டிச் சென்றார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த உமர் ஒரு மருத்துவர் ஆவார்.. இவர் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. புல்வாமாவைச் சேர்ந்த தாரிக் என்பவர் உமரிடம் காரை விற்றுள்ளார்.. தாரிக்கிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications