தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்றால் என்ன? காஷ்மீர் பகல்காம் தாக்குதலின் பின்னணி தெரியுமா?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்புதான் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் நேற்று சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு 27 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு பற்றி விரிவாக பார்ப்போம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதம் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பிரிவினைவாதிகள், காஷ்மீரில் அமைதியின்மையை ஏற்படுத்தும் செயல்களில் அடிக்கடி ஈடுபட்டு வருகிறார்கள். 1990களில் தொடர்ந்து தற்போது வரை ஏராளமான முறை ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்தி வருகிறார்கள்.

இந்த தாக்குதலை பல்வேறு அமைப்புகள் நடத்தி வந்துள்ளன. இதில் முக்கியமான அமைப்பு என்றால், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு தான். பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் அமைப்பு தான் லஷ்கர்-இ-தொய்பா. இந்த அமைப்பிற்கு தடை உள்ளதால், அது புதிய புதிய பெயர்களில் கிளை அமைப்புகளை உருவாக்கி இந்தியாவில் ஊடுருவலில் ஈடுபடுவது, அடிக்கடி பயங்கரவாத தாக்குதலை நடத்துவது, காஷ்மீரை கலவர பூமியாக சித்தரிப்பது போன்ற செயல்களை செய்து வருகிறது.
ஹபீஸ் சயீத்தின் அமைப்பு
அந்த வகையில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் துணை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்புதான் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் நேற்று சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.

என்ன காரணம்
இது தொடர்பாக ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் வெளியிட்ட பதிவில், "85,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளூர்வாசிகள் அல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன, இது ஜம்மு காஷ்மீரில் (பயங்கரவாதிகள் இந்திய ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் என அழைப்பார்கள்) மக்கள் தொகை மாற்றத்திற்கான பாதையை உருவாக்கி உள்ளது. இந்த உள்ளூர்வாசிகள் அல்லாதவர்கள் சுற்றுலாப் பயணிகளாக வந்து, குடியிருப்புகளைப் பெற்று, பின்னர் நிலத்தை சொந்தமாக வைத்திருப்பது போல் செயல்படுகிறார்கள். இதன் விளைவாக, சட்டவிரோதமாக குடியேற முயற்சிப்பவர்களை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டது" என்று தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு கூறியுள்ளது.
ஷேக் சஜ்ஜாத் குல்
தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பின் தளபதி ஷேக் சஜ்ஜாத் குல் ஆவார். இவர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசியல் பிரமுகர்களை குறிவைத்து நடத்தப்பட்ட ஏராளமான தாக்குதல்களுக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு இதற்கு முன்பும் பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பின் பின்னணியை விசாரித்தால், காஷ்மீரில் அமைதியின்மை தொடர வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட பாகிஸ்தான் நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ (ISI) அமைப்பின் வழிகாட்டுதல்களுடன் இயங்கும் அமைப்பாகும்.
2023ல் அரசு அறிவிப்பு
கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம், இந்திய அரசு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF ) அமைப்பை சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தது. மேலும் அதன் தளபதியான ஷேக் சஜ்ஜாத் குல் அதிகாரப்பூர்வமாக பயங்கரவாதியாக அறிவித்தது இந்தியா. தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ஷேக் சஜ்ஜாத் குல் குறித்து தகவல் அளித்தாலே வெகுமதி அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
அமித்ஷா விரைந்தார்
பஹல்காமில் 27 பேர் பயங்கர பயங்கரவாத தாக்குதலால் கொல்லப்பட்டதை தொடர்ந்து, காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மாலை ஸ்ரீநகருக்கு வந்தார். விமான நிலையத்திலிருந்து நேராக ராஜ் பவனுக்குச் சென்றார், மேலும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டார். இன்று அமித்ஷா பஹல்காமிற்கும் வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மினி சுவிட்சர்லாந்து
இந்தியாவின் "மினி சுவிட்சர்லாந்து" என்று பகுதிதான் தாக்குதல் நடந்த பைசரன் பள்ளத்தாக்கு. 2019 புல்வாமா தாக்குதலுக்கு பிறகு காஷ்மீரில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட மிகவும் கொடிய தாக்குதல் ஆகும். பஹல்காம் அருகே உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கூடியிருந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள். இதில் இரண்டு வெளிநாட்டினர் மற்றும் இரண்டு உள்ளூர்மக்கள் உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர் என்று மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சுற்றுலா பயணிகள்
பஹல்காம் நகரத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பைசரன் பள்ளதாக்கை பொறுத்தவரை, அடர்ந்த பைன் காடுகள் மற்றும் மலைகளால் சூழப்பட்ட ஒரு அழகிய புல்வெளி என்று கூறும் சுற்றுலா பயணிகள், துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் அந்த பகுதியில் நுழைந்து குதிரை சவாரி செய்து கொண்டிருந்த, கடைகளில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மற்றும் புல்லில் நடந்து சென்றவர்களை சுட்டதாக தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications