Oneindia Special: வங்கதேச விவகாரத்தால், திருப்பூர் பின்னலாடை தொழில் மறுவாழ்வு பெறுமா? கள நிலவரம் இதோ
திருப்பூர்: அரசியல் அசாதாரண சூழ்நிலையால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது வங்கதேசம் . போராட்டம், உயிரிழப்பு, பிரதமர் ராஜினாமா என்று 24 மணி நேரத்தில் பல்வேறு திருப்பங்கள் நடந்துள்ளன. பின்னலாடை வர்த்தகத்தில் சிறந்து விளங்கிய டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூர் கடந்த சில ஆண்டுகளாக வங்கதேசத்தின் தலையீட்டால் இறங்குமுகத்தைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தற்போதைய சூழ்நிலை பின்னலாடை வர்த்தகத்துக்கு சாதகமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான சுதந்திரப் போரில் பங்கேற்று உயிரைத் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறை அமலில் இருந்தது.

கடந்த 2018 இல் மாணவர்களின் போராட்டம் காரணமாக இந்த முறை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 30 சதவீத இடஒதுக்கீடு முறை மீண்டும் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார்.
இது பாரபட்சமான செயல் என்று கூறி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இப்போராட்டம் மாணவர்கள் மற்றும் போலீசாரிடையேயான வன்முறையாக மாறியதில் சுமார் 200 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கட்டு, ராணுவத்தினர் களமிறக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாகக் குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இயல்புநிலை திரும்பத் தொடங்கிய நிலையில், இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தில் பலர் கொல்லப்பட்டதைக் கண்டித்து மீண்டும் போராட்டம் நேற்று முன்தினம் வெடித்தது.
போராட்டம் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்டட நிலையில், போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டைவிட்டு இன்று வெளியேறினார். இதையடுத்து, அங்கு ராணுவ ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.
வங்கதேசத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஜவுளித் தொழில் மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. அந்நாட்டு பின்னலாடைத் தொழில் நிறுவனங்கள் திருப்பூரின் ஏற்றுமதி நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சந்தையைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் அசாதாரண சூழல் மற்றும் உள்நாட்டு பிரச்னை இந்தியாவின் பின்னலாடை வர்த்தகத்துக்கு கைகொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினம் "ஒன்இந்தியாதமிழிடம்" கூறியதாவது: "வங்கதேசத்தின் முதன்மைத் தொழில் பின்னலாடை உற்பத்திதான். அந்நாட்டில் இருந்து எந்தவொரு வெளிநாடுகளுக்கு ஆடைகளை இறக்குமதி செய்தாலும் வரிவிலக்கும் உண்டு. வியாபாரிகள் அங்கிருந்து ஆடைகளை வாங்க முழுமுதல் காரணம் வரி கிடையாது என்பதுதான்.
இதுதான் அவர்களின் பலம். இந்தியாவைப் பொருத்தவரை விதிகளின்படியே ஆடைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், வங்க தேசத்தில் காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு போன்ற விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில்லை. மேலும், குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்துகின்றனர்.
திருப்பூரைப் பொருத்தவரை உலகளவில் வியாபாரிகள் விரும்பும் ஆடைகளை விதிமுறைப்படி உற்பத்தி செய்கிறோம். திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் ஆடையில் இருந்து கிட்டத்தட்ட 20 முதல் 25 சதவீதம் விலை குறைவாக வங்கதேசத்தில் ஆடைகள் உற்பத்தி செய்கின்றனர். இந்திய சந்தையைவிட வங்கதேச சந்தையில் 20 முதல் 25 சதவீதம் விலை குறைவாக இருப்பதால் வியாபாரிகள் அந்நாட்டில் ஆடைகளை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.
உலக வர்த்தகத்தின் அடிப்படையிலான கட்டமைப்புகள் இந்தியாவில் உள்ளன. அதாவது, குழந்தை தொழிலாளர் பயன்படுத்தாதது, பூஜ்ய மாசுபாட்டுடன் கூடிய தரத்தில் ஆடைகள் உற்பத்தி செய்வது போன்ற விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பெரிய பிராண்டுகள் இந்த தரத்தில் ஆடைகளை உற்பத்தி செய்தால்தான் வியாபாரம் செய்வார்கள்.
திருப்பூரில் 100 சதவீத ஏற்றுமதி யூனிட்டுகள் இந்த விதிமுறையின்படியே தொழில் செய்கின்றனர். இந்தியாவை வங்கதேசத்துடன் ஒப்பிடவே முடியாது. வங்கதேசத்தில் எந்தவிதமான விதிமுறைகளும் கடைப்பிடிப்பதில்லை. உள்நாட்டு வர்த்தகம் மூலம் 150 கோடி வருமானம் உள்ள பெரிய சந்தை இந்திய சந்தை.
ஆனால், விலை குறைவு காரணமாக நம் வியாபாரிகள் வங்கதேசத்திடம் ஆர்டர்களை கொடுத்து வாங்குகின்றனர். அதனால், உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படுகிறது. இறக்குமதி வரி இல்லாததால் இந்தியாவில் வங்கதேச உற்பத்திப் பொருள்கள் ஊடுருவி சந்தைகளைப் பிடித்துள்ளன.

எனவே, வங்கதேசத்தில் இருந்து வரும் ஆடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். அப்போதுதான் உள்நாட்டு வர்த்தகம் அதிகரிக்கும். அதேபோல, சீனாவில் இருந்து பங்களாதேஷுக்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு, பங்களாதேஷில் இருந்து இந்தியாவில் ஆடைகள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இதனால், இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக உள்ள ஜவுளித் தொழில், முடங்கிப் போயுள்ளது. மேலும், இந்தியாவில் பின்னலாடைத் தொழில்களுக்கு போதிய அளவிலான சலுகைகள் கொடுக்கப்படுவதில்லை.
இந்தியாவில் இருந்து ஆடைகளை ஏற்றுமதி செய்தால் கடந்த காலங்களில் 20 சதவீதம் ஊக்கத் தொகை வழங்கப்படும். ஆனால், இப்போது வெறும் 2 சதவீதமே வழங்கப்படுகிறது. நிறைய சலுகைகள் பறிக்கப்பட்டாதால் வங்கதேசத்துடன் போட்டிப்போட முடிவதில்லை. இதனால், வெளிநாட்டு வியாபாரிகள் இந்தியாவில் கூடுதலாக விலை கொடுத்து வாங்குவதைத் தவிர்த்து வங்கதேசத்தில் வியாபாரம் செய்யத் துவங்கியுள்ளனனர்.
உலக அளவில் சீனா 34 சதவீதமும், வங்கதேசம் 12 சதவீதமும் ஆடைகளை உற்பத்தி செய்கின்றன. ஆனால், இந்தியாவில் 4 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவில் எல்லா வளங்களும் உள்ளன.
மூலப் பொருள்கள், தொழிலாளர்கள் என அனைத்து வசதிகளும் உள்ளன. நம் தொழிலை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வங்கதேசத்தில் பிரதமர் ராஜினாமா செய்துள்ளதால் நமக்கு எந்தவிதமான பலனும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் அந்த நாட்டுடைய சட்டங்களுக்கு உட்பட்டுதான் அங்கு வியாபாரிகள் தொழில் செய்கின்றனர்.
கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது. கடந்த ஆண்டில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்கூட நடந்தது. ஆனாலும், இத்தொழிலில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. அதேபோல, இப்போது எழுந்துள்ள உள்நாட்டு பிரச்னையாலும் எந்தவிதமான மாற்றமும் ஏற்படாது," என்றார்.












Click it and Unblock the Notifications