உக்ரைனில் இதைக்கூடவா ரஷ்யா விட்டு வைக்கல? கொந்தளிக்கும் சர்வதேச நாடுகள்
கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில நாட்களாக தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது ஜபோரிஜியா அணுமின் நிலையம் மீது ஏவுகணை தாக்குதலை தொடங்கியுள்ளது.
அணுமின் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதலை உடனடியாக ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று ஐநா அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் ரஷ்ய நடத்திய ஏவுகனை தாக்குதலில் அணுமின் நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்கள் சில கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

ராணுவ நடவடிக்கை
அமெரிக்கா தலைமையிலான 'நேட்டோவில்' சேர்வதற்கு உக்ரைன் எடுத்த முன்னெடுப்பே அதன் முடிவுக்கு தற்போது காரணமாகியுள்ளது. சோவியத் யூனியன் காலத்தில் உக்ரைன் ரஷ்யாவின் ஒரு பகுதியாக இருந்தது. இதனையடுத்து 1990களுக்கு பின்னர் உக்ரைன் தனி நாடாக பிரிந்து சென்றுவிட்டது. இந்நிலையில் நேட்டோவில் சேர்வதற்கான முயற்சியையும் அது மேற்கொண்டது. இதற்கு ரஷ்யா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் உக்ரைனின் தொடர் முன்னெடுப்புகளால் ரஷ்யா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.

உயிரிழப்பு
இந்த ராணுவ நடவடிக்கை காரணமாக கடந்த ஜூலை மாதம் வரை சுமார் 11,544 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐநா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ராணுவ நடவடிக்கையை ரஷ்யா நிறுத்தவில்லை. இதனையடுத்து உக்ரைனிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் தானியங்களும் தேங்கியுள்ளன. தற்போது ஓரளவு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், முற்றிலுமாக நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.

தாக்குல்
இந்நிலையில் நேற்று உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையம் மீது ரஷ்ய படைகள் ஏவுகணைகளை வீசி தாக்கியுள்ளன. இதன் மூலம் ஆலையின் உலர் சேமிப்பு வசதியின் தளம் சேதமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக ஒரு உலை மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் ரஷ்ய தரப்பில் இது மறுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் படைகள்தான் இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும், அவர்கள் இரவு நேரத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் அணுஉலையில் தீ பற்றியதாகவும். அதை ரஷ்ய ராணுவ படைகள் அணைத்ததாகவும் கூறியுள்ளது.

ஐநா அழைப்பு
இந்நிலையில் இந்த அணுஉலைக்கு அருகில் நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும், மேலும் எந்த ஒரு ராணுவ நடவடிக்கையும் இந்த பகுதியில் தொடரக்கூடாது என்றும் ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்புக்குழு அழைப்பு விடுத்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து சர்வதேச அணுசக்தி நிறுவனமும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. ஒருவேளை இதன் மீது தாக்குதல் மீண்டும் தொடுக்கப்பட்டால் சுற்று வட்டாரப் பகுதிகளும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications