மைனர் மகள்களை விபச்சாரத்திலிருந்து காக்க விஷம் கொடுத்து கொன்ற பாக். தாய்
லாகூர்: பாலியல் தொழிலில் இருந்து மீட்பதற்காக தனது இரு மகள்களையும் கொலை செய்த தாய் மற்றும் அவரது குடிகாரக் கணவர் மீது பாகிஸ்தான் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பஞ்சாப் மாகாணம் பாகர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பல்கீஸ் பீவி (வயது 30). இவர் நேற்று தனது பெண் குழந்தைகளான இஸ்ரத் (4), முகாத்தாஸ் (2) ஆகிய இருவருக்கும் விஷம் கொடுத்துவிட்டு தானும் தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்துள்ளார்.
விஷம் அருந்தி மயங்கிய நிலையில் கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தார் மீட்டு சிகிச்சைக்க்காக லயாஹ் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தாயார் பல்கீஷ் பீவியின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களால் குழந்தைகளைக் காப்பாற்ற இயலவில்லை.
இதையடுத்து மயக்கம் தெளிந்த நிலையில் பல்கீஸ் பீவியிடம் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல்கீச் பீவி அளித்த தகவல்களைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பல்கீஸ் பீவி அளித்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப் பட்டதாவது :-
"என் கணவர் முகமது அமின் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டார். குடும்பத்தை காப்பாற்றுவதற்கு வேலை செய்து சம்பாதிப்பதில்லை. தினசரி அவரது செலவை சமாளிப்பதற்காக என்னை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளினார். இதற்காக அடிக்கடி என்னை டார்ச்சர் செய்வார்.
நேற்று இதுதொடர்பாக எங்கள் இருவருக்கிடையே சண்டை ஏற்பட்டது. இதனால் மனஉளைச்சல் அடைந்த நான், குழந்தைகளுக்கு விஷம் கொடுத்தேன். பின்னர் நானும் விஷம் குடித்தேன். குழந்தைகள் உயிருடன் இருந்திருந்தால் அவர்களையும் ஒருநாள் விபச்சாரத்தில் தள்ளிவிடுவார். எனவே, அவர்களை கொன்றதற்காக நான் வருந்தவில்லை" என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பல்கீஸ் பீவி- அமின் தம்பதிக்கு ஆறு வயதில் மகன் ஒருவன் உள்ளான். சம்பவத்தன்று அவன் பள்ளிக்கு சென்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
பல்கீஸ் பீவியின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து பல்கீஸ் மற்றும் அவரது கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications