தவெக தலைவர் விஜய் பரந்தூர் வருகை.. தனியார் மண்டபத்தில் போராட்டக் குழுவினரை சந்திக்கிறார்!
காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களையும், போராட்டக் குழுவையும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று சந்திக்கிறார். பொடவூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் சந்திக்க உள்ளார். இதற்காக பனையூரில் இருந்து பிரச்சார வாகனத்தில் கிளம்பிய விஜய், பரந்தூருக்கு வந்துள்ளார்.
அடுத்த 10 ஆண்டுகளுக்கான தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சென்னையில் 2வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதனால் பாதிக்கப்படும் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 900க்கும் மேற்பட்ட நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் நேரடியாக சென்று போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கிய விஜய் இன்று மக்களை சந்திக்கவுள்ளார்.
தவெக தலைவர் விஜய் முதல்முறையாக களத்திற்கு வந்து மக்களை சந்திப்பதால், இந்த சம்பவம் மீது பலரின் கவனமும் திரும்பியுள்ளது. இதற்கான அனுமதியும் முறையாக தவெக நிர்வாகிகளால் பெறப்பட்டுள்ளது. இதனிடையே நேற்றிரவு வரை தவெக தலைவர் விஜய், மக்களை எந்த இடத்தில் சந்திக்கப் போகிறார் என்ற குழப்பம் நீடித்து வந்தது.
ஏனென்றால் ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் மக்களை சந்தித்து விஜய் உரையாற்ற இருப்பதாக கூறப்பட்டது. இதற்காக அந்த இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இரவு நேரத்தில் காவல்துறையினர் தரப்பில் பந்தலை அகற்ற கோரினர். இதனைத் தொடர்ந்து இடத்தை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வந்தது.
பின்னர் தவெக தலைவர் விஜய், மக்களையும் போராட்டக் குழுவையும் பொடவூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை சந்திக்க உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உரையாற்ற உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், பரந்தூர் அருகே உள்ள பொடவூரில் போராட்டக் குழுவை சந்திக்க தவெக தலைவர் விஜய் வருகை தந்துள்ளார். சில நிமிடங்களில் தனியார் மண்டபத்திற்கு வருகை தந்து போராட்டக் குழுவினரிடம் கலந்துரையாடுகிறார் விஜய்.












Click it and Unblock the Notifications